தமிழகத்தில் தற்போது நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு அதிகாரிகள் மிகுந்த மெத்தனப் போக்கை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதில், ‘2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பிறகும் அதிகாரிகள் பாடம் கற்கவில்லை. விதிமீறல் கட்டிடங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சென்னை மாநகராட்சியின் போக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது’ என்று கூறியது நாளேடுகளில் செய்தியாக வெளிவந்துள்ளது.
இந்தப் பின்னணியில் மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, 2015 வெள்ளப் பெருக்கு எப்படி ஏற்பட்டது ? ஏன் ஏற்பட்டது ? உயிரிழப்புகளுக்கும், பாதிப்புகளுக்கும் யார் பொறுப்பு என்பதை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த வகையில் தேசிய முரசு மே 1-15, 2016 இதழில் வெளிவந்த கட்டுரையை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்:
தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1இல் தொடங்கி, டிசம்பர் 31வரை பெய்யும் என்பதை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அறியாத ஒன்றல்ல. நவம்பர் 1இல் தொடங்கி, டிசம்பர் 2ஆம் தேதிவரை 32 நாட்களில் 1333 மி.மீ. மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் நவம்பர் 1 முதல் 23 வரை 1131 மி.மீ. மழை பெய்துள்ள து. மீதி 374 மி.மீ. தான் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை பெய்துள்ளது. இதில் நவம்பர் 24 முதல் 29வரை ஒருசொட்டு மழைகூட சென்னை மாநகரில் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலங்களில் வெள்ளப்பெருக்கை தடுக்க தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
தமிழக அரசிடம்முறையான நீர்மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் நவம்பர் 17ஆம் தேதி 18,000 கன அடி நீரும், டிசம்பர் 2ஆம் தேதி 29,000 கனஅடி நீரும் திடீரென முன்னறிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்ட காரணத்தால் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகளை இழப்பதற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 2ஆம் தேதி 29,000 கன அடி நீரைத் திடீரென திறப்பதற்கு முதல்நாள் டிசம்பர் 1ஆம் தேதி, வினாடிக்கு 900 கன அடி தண்ணீரை மட்டுமே குறைவாகத் திறந்தது ஏன்? இப்படித் திடீரென அதிகளவில் மறுநாள் தண்ணீ ரைத் திறந்தால் மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படு வார்கள் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாமா? இத்தகைய அசாதாரணச் சூழலில் செயல்பட கட்டுப்பாட்டு அறையைக்கூட அமைக்காமல் பொறுப்பற்ற முறையில் நிர்வாக கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.
மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரிநீரை திறக்கவேண்டும் என்பதை அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப் பணியாளர்களுக்கும் மட்டும்தான் தெரிந்திருக்க முடியும். ஆனால், தமிழகத்தில் எந்த அணையையும் திறப்பதும், மூடுவதும் முதலமைச்சர் ஆணையின் அடிப்படையில் அதிகாரக் குவியல் காரணமாக நடக்கிறபோது, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்குக் கீழ்நிலையில் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
பொதுப் பணித் துறை பொறியாளர்கள் செயலாளரிடம் கோரிக்கை விடுக்க, அவர் தலைமைச் செயலாளருக்குச் சொல்ல, அவர் முதலமைச்சரோடு தொடர்புகொள்ள முயல திண்டாடிய காரணத்தால்தான் திறக்கவேண்டிய நேரத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளைத் திறக்காமல் காலம்தாழ்த்தி திறக்கப்பட்டது. அரசின் மெத்தனப்போக்கு காரணமாகத்தான் சென்னை மாநகரில் இத்தகைய மனித பேரவலம் நிகழ்ந்ததை எவராது மறுக்க முடியுமா?
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியிலிருந்து முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்படுகிற அதேநேரத்தில் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாத முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாமா? இத்தகைய வெள்ளப்பெருக்குக் காரணமாக இதன்மூலம் வந்த 67,000 கன அடி நீரோடு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட 29,000 கனஅடி நீரும் சேர்ந்து இறுதியாக 1 லட்சம் கன அடி நீர் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மக்கள் அடித்துச் செல்லப்பட்டதற்கு ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டும். இதிலிருந்து ஜெயலலிதா தப்பமுடியாது.
அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக தூர் வாரப்படாத காரணத்தால் வெள்ளப் பெருக்கைக் கடல் முகத்துவாரங்களில் உள்வாங்கி, அனுப்பமுடியாமல் திரும்பவும் வெள்ள நீர் குடியிருப்புகளைத் தாக்குகிற அவலநிலை ஏற்பட்டதற்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் பொறுப்பு? செய்யவேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாததற்காக இத்தகைய விலையை மக்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் வெள்ள பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்பட்ட தோடு, ஏழை எளிய, நடுத்தர மக்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருடைய இழப்பும் லட்சக்கணக்கான கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இத்தகைய இழப்பை எப்படி சரிகட்டப் போகிறார்கள்? இதுகுறித்து விவாதிக்கக் குறைந்தபட்சம் அமைச்சர்களைக் கூட்டி விவாதித்தாரா? பல்வேறு துறை செயலாளர்களை அழைத்து பேசினாரா? தலைமைச் செயலகத்திற்கு வருகைபுரிகிற ஜெயலலிதா, ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கே பணியாற்ற அவரது உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்பது உண்மையா? அவரது உடல்நிலை மற்றும் மனோநிலை காரணமாக அவரை எவரும் எளிதில் தொடர்புகொள்ள முடியாதநிலையில் இருப்பதால் தமிழக அரசு இயந்திரம் சிதைந்து, சீர்குலைந்து, சின்னாபின்னமாகி உள்ளது. அதனுடைய பாதிப்பைத்தான் தமிழகம் சந்தித்து வந்தது.