ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று வந்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தேன். ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நான் எதற்கு இங்கு வந்தேன் என்றால், இன்று டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் நம் நாட்டின் கலாச்சாரங்களை அழிக்க முயன்று வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். தமிழர்களின் தமிழ் மொழியை நசுக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லவே இங்கு வந்துள்ளேன். முதலாவது, தமிழ் உணர்வை யாராலும் தடுக்க முடியாது. இரண்டாவது, தமிழ் உணர்வைத் தடுக்க நீங்கள் முயன்றால், அது நம் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கேடு. தமிழ் என்பது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது. அது நம் நாட்டுக்குத் தேவை.
இவர்களின் இது போன்ற எண்ணங்களுக்கு நான் எதிரானவன். குறிப்பிட்ட சிந்தனைகள், குறிப்பிட்ட மொழி, குறிப்பிட்ட கருத்து நம் நாட்டில் உள்ளது. ஏராளமான மொழிகளும், ஏராளமான சிந்தனைகளும் இருப்பதே நமது பலம்.
நான் பலமுறை தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். இன்னும் வருவேன். தமிழக மக்களிடம் நான் நிறைய கற்றுள்ளேன். கடந்த காலத்தில் நிறைய அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் எனக்குக் காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அரசாங்கம் விவசாயிகளைப் புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் பார்க்கிறது. இதில் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். விவசாயிகளைக் கண்டுகொண்டால் அவர்கள் மீது அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். அவர்களைப் புறக்கணித்தால் அழிக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம். விவசாயிகளை அழித்துவிட்டு அவர்களது 2 அல்லது 3 நண்பர்களுக்கு உதவ நினைக்கிறார்கள்.
விவசாயிகளிடம் இருப்பதை எல்லாம் பறித்து, அவர்கள் நண்பர்களிடம் கொடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளின் நிலத்தை எடுக்கப் பார்க்கிறார்கள், விவசாயிகளின் உற்பத்தியை எடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது என்பது சிறிய வார்த்தை. விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் சரியான வார்த்தை.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளை நசுக்கிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சி அடையுமா? இதை எங்காவது வரலாற்றில் பார்த்திருப்போமா? எப்போது இந்திய விவசாயிகள் பலவீனப்படுகிறார்களோ, இந்தியாவும் பலவீனப்படும்.
கொரோனா காலத்தில் சாதாரண மக்களுக்கு நீங்கள் உதவவில்லை. நீங்கள் யாருக்கான பிரதமர்? நீங்கள் இந்திய மக்களுக்குப் பிரதமரா? அல்லது குறிப்பிட்ட 2 அல்லது 3 தொழிலதிபர்களுக்கு மட்டும் பிரதமரா?
கடைசியாக ஒரு கேள்வி. நம் எல்லையில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது? நம் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீனாவைப் பற்றி ஏன் இதுவரைக்கும் பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்.
போராடும் விவசாயிகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாங்கள் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறோம். பஞ்சாபில் யாத்திரை மேற்கொண்ட போது, இந்த பிரச்சினையை எழுப்பினேன். தொடர்ந்து போராடி வருகிறோம். நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 3 வேளாண் சட்டங்களையும் இந்த அரசு திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேட்டியளித்தார்.