திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுக்கு இம்முறை கூடுதலாக 4 மணி நேரம் காலதாமதம் ஆகலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திரு. கே.எஸ். அழகிரி அவர்களுடன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் திரு. டி. கோவர்தன் அவர்கள் நடத்திய நேர்காணல்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளீர்கள். நீங்கள் சாதித்தது என்ன?
மாநிலத்தில் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தியுள்ளேன். வாக்குச் சாவடி அளவிலான கமிட்டிகளை உருவாக்கியுள்ளேன். மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளில், கலந்துரையாடல், போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை முன்கள அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தியிருக்கிறேன். கீழ்மட்டத் தொண்டர்களை இணைப்பதிலேயே என் கவனம் இருந்தது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு நேர்மறை பதில் தரும் வகையில், மாநிலம் முழுவதும் ஏர்கலப்பை பேரணியை நடத்தினோம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அழைத்து வந்து மேற்கு மாவட்டங்களில் சாலையோர நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். இது மேற்கு மாவட்டங்களில் பிரளயத்தையே (அரசியல் சுனாமி) ஏற்படுத்தியுள்ளது. 50 பேர் முதல் 500 பேருக்கு மட்டுமே பதவி என்ற நிலையை மாற்றி, காங்கிரஸ் கட்சியில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்துள்ளேன்.
ஏளனத்துக்குள்ளான கட்சி நிர்வாகிகள் நியமன பெரிய பட்டியலைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்களா?
பணக்காரர்கள், ஆங்கிலம் படித்த தொழிலதிபர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் மட்டுமே கட்சியின் பதவிகளைப் பெற முடியும் என்ற, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்தை மாற்றுவதற்காக நான் உணர்வுப்பூர்வமாக இந்த நியமனங்களைச் செய்தேன். சாதாரணமானவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்துள்ளேன். இன்றைய நவீன கால அரசியலில், மக்கள் பிரச்சினைகளைச் சாதாரணமானவர்களால் மட்டுமே நல்ல முறையில் வெளிப்படுத்தவும் புரிந்து கொள்ளவும் முடியும். விமர்சகர்கள் எப்போதும் இதே வழியில் தான் கேள்வி எழுப்புவார்கள். இதே வழியில் அவர்களுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான நிர்வாகிகள் நியமனத்துக்கான அவசியம் என்ன? என்று உங்கள் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரமும் விமர்சித்துள்ளாரே?
அவரைப் போன்றவர்களுக்கும் என் பதில் இதுதான். ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 மாநில அளவிலான நிர்வாகிகளை நியமித்தால், எனக்கு 700 பேர் தேவைப்படுவார்கள். பதவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. ராகுல் காந்தி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டதற்கு, சாதாரணமானவர்கள் கட்சி நிர்வாகிகளானதே காரணம். கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் பணத்தையும் செலவு செய்ய முடியாது. கட்சிக்காக பணத்தை செலவழித்து நிகழ்ச்சி நடத்துவது இந்த சாதாரணமானவர்கள் தான்.
பக்கத்து புதுச்சேரியில் திமுகவின் ஆதிக்கம் இருப்பதால், தமிழகத்தில் உங்கள் பலத்தைக் காட்டத்தான் ராகுல் காந்தியை அழைத்து வந்தீர்களா?
யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. புதுச்சேரி பிரச்சினை எந்த வேகத்தில் உருவானதோ, அதே வேகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தமிழ்நாடு வருகை அதற்கு முன்பே திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போனது. திமுகவுடனான எங்கள் கூட்டணி வலிமையுடன் அப்படியே தொடர்கிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு சில தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக விரும்புகிறது என்பது உண்மையா?
அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் விரும்புவர். ராகுல் காந்திக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த முதல் நபர் மு.க.ஸ்டாலின் தான். எனவே, ஸ்டாலின் முதலமைச்சராக நாங்கள் பணியாற்றுவோம். இந்த நட்பு அடிப்படையால் மட்டும், நாங்கள் கேட்பதை எல்லாம் திமுக தரும் என்றோ, அவர்கள் எத்தனை தொகுதிகளைக் கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றோ அர்த்தம் இல்லை. நாங்கள் கலந்துபேசி எங்களுக்கு உரிய தொகுதிகளைப் பெறுவோம்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உங்கள் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியதில் நீங்கள் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதையும், 2016 தேர்தலில் 41 தொகுதிகளை ஒதுக்கியதில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதையும் திமுக சுட்டிக்காட்டுகிறதே. உங்கள் கருத்து?
கடந்த 2019 மக்களவை தேர்தலில் எங்களுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த வற்றி, 90 சதவிகிதத்துக்கும் அதிகமானதாகும். இங்கிருந்து தான் விவாதத்தைத் தொடங்க வேண்டும். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பரிமாறிக்கொள்ளப்படும் கூட்டணி வாக்குகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. பொதுவாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவார்கள். அந்த கட்சிகளின் கூட்டணியில் போட்டியிடும் தோழமை கட்சிகள் வெற்றி பெறாவிட்டால், அதனைச் சிறந்த முடிவாக உறுதி செய்ய முடியாது. கூட்டணியைப் பொறுத்தவரை, 60 சதவிகிதம் வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் 40 சதவிகிதம் தோல்வியடையும் தொகுதிகள் என்ற அடிப்படையில் தான் தொகுதிப் பங்கீட்டுச் சூத்திரம் இருக்கும். ஒரு கட்சிக்கு மற்றொரு கட்சி மதிப்பு சேர்க்கவில்லை என்றால், முதலில் கூட்டணிக்கான அவசியமே இல்லை. இதில் இரு தரப்பினரிடையே புரிதல் வேண்டும்.
திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்க விட்டீர்களா?
இதுவரை இல்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இரு கட்சித் தலைமைகளிடையே 4 மணி நேரத்தில் முடிந்தது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் கூடுதலாக 4 மணி நேரம் ஆகலாம். ஏதும் பிரச்சினை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
திமுக தலைமையிலான கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா?
ஒரு செய்தியாளர் சந்திப்பில், திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர்ந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டார். அரசியல் நாகரீகம் கருதி, நான் ‘ஆம்’ என்று பதில் அளித்தேன். ஏனென்றால், ஒருவர் இணைய விரும்பினால், நம்மால் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்?. அதற்கு மேலாக, கூட்டணியில் சேருமாறு அவரை நான் அழைக்கவும் இல்லை. இது போன்ற முடிவை திமுக மட்டுமே எடுக்கும்.
1988 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தியோடு மூப்பனார் நடத்தியதுபோல், ராகுல் காந்தியோடு இன்னும் சில சாலையோர நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டம் உள்ளதா?
ராஜிவ் காந்தி ஆதரவுடன் ஜி.கே. மூப்பனார் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கை அது. நாங்கள் அப்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும், அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணிக்கும் எங்களுக்குச் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே இருந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் முடிவுகள் அருமையாக அமைந்தன. அப்போது மூப்பனாரைக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து உடனே நீக்கியது தான் தலைமை செய்த தவறு. மாநிலத் தலைமை சுதந்திரமாக முடிவு எடுக்க கட்சியின் அகில இந்தியத் தலைமை அனுமதி வழங்கியபோதிலும், கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ் கொள்கையை அவர்கள் கைவிட்டிருக்கக் கூடாது. இந்த கொள்கையை அவர்கள் தொடர்ந்திருந்தால், நாங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தமிழ்நாட்டில் வளர்ந்திருப்போம்.