இத்தனைக்குப் பிறகும் எப்படி அசைந்து கொடுக்காமலும் இசைந்து நடக்காமலும் இருக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்…?
இ பாஸ் என்பது இரக்கமில்லாமல் நடத்தப்படும் இமாலய மோசடி!
உயர் நீதி மன்றம் கண்டித்துவிட்டது!
மத்திய அரசு விலக்கச் சொல்லிவிட்டது!
எதிர் கட்சித் தலைவரும் தன் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டார்!
தற்போது மனித உரிமை ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் மக்கள் இந்த அரசை மக்கள் சபித்து,வயிறெரிந்து பதிவிட்டுக் கொண்டுள்ளனர்!
இத்தனைக்குப் பிறகும் இ பாஸை நிர்பந்திப்பது கொரோனா பெயரிலான கட்டப் பஞ்சாயத்து அல்லது பகல் கொள்ளை!
தமிழக பா.ஜக இதில் தலையிட்டாலாவது சற்று விமோசனம் கிடைக்கலாமோ என்னவோ.. ஆனால்,ஏனோ,அவர்களுக்கு மனமில்லை! இ பாஸ் மறுக்கப்பட்டால் தான் என்ன?
கம்யூனிஸ்டு தலைமைகள் கூட ’கம்’மென்று மவுனம் சாதிக்கின்றனவே! என்ன ஆயிற்று அவர்களுக்கு?
ரஜினி தன்னளவுக்கு போக,வர இ பாஸ் வாங்க முடிகிறதே..அது போதும் என அமைதி காக்கிறார்!
டிவிட்டரில் மட்டுமே அரசியல் நடத்தினால் போதும் என்று அடைபட்டு கிடக்கும் கமலின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றதா எனத் தெரியவில்லை!
கொரானாவின் பெயரால் நடக்கும் கொடூரங்களுக்கும், கொள்ளைகளுக்கும் அளவில்லாமல் போய்விட்டதே! பேரழிவு காலத்தில் மக்களிடம் ஆனவரை கொள்ளையடித்து ஆட்சியாளர்களும்,அதிகாரிகளும் திளைப்பதை தடுத்து நிறுத்த முடியாமல் நாதியற்றுவிட்டதே இந்த நாடு!
தினசரி விமானங்கள் இயக்கப்படலாம்! அதில் வசதிமிக்கவர்கள் சென்று வரலாம்.ஆனால்,சாதாரண மனிதர்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் மட்டும் அனுமதி மறுப்பாம்!
கெடுபிடிகள்,அடி,உதைகள்,அபராதங்கள்…இந்த அனுபவங்களை பெற்றவர்கள் தக்க பாடங்களை தக்க நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு புகட்டுவார்கள் என்பது சர்வ நிச்சயம்!
சாவுக்கு போகக் கூட மறுக்கபட்டவர்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கசமயம்பார்த்திருக்கிறார்கள்!
பிழைக்க வழியின்றி தடுக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்த ஆட்சியின் அஸ்த்தமத்திற்கு அடிகோலுவார்கள்.
(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)