சிவாஜி கணேசன் தொடக்க காலத்தில் பழுத்த நாத்திகவாதியாக இருந்தார். ஒரு கூட்டத்தில், அண்ணாவின் முன்னிலையில், ‘‘அண்ணா விரும்பினால் என்னுடைய ஒப்பந்தங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்து விட்டுக் கட்சிப் பணியை மட்டுமே ஏற்றுச்செய்யத் தயாராக இருக்கிறேன் ” என்று கூறினார்.
தி.மு.க.வில் இருந்தபோது, ‘‘புயல் நிவாரணத்திற்காக எல்லாரும் பணம் வசூல்செய்து தாருங்கள்” என்று அண்ணா கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘பராசக்தி’ பட வசனம் பேசி அதிகமான நிதியை வசூலித்துக் கொடுத்தார் சிவாஜி. ஆனால், அதற்காக நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் சிவாஜியை அழைக்காமல், எம்.ஜி.ஆரை அழைத்துப் பாராட்டியது, சிவாஜிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத் தியது. தம்மை ஒதுக்கிவைக்கும் முயற்சியாக இதைச் சிவாஜி கருதி, மனப் போராட்டத்தில் இருந்தார்.
இச்சூழ்நிலையில், கிருஷ்ணாபிக்சர்ஸார் தயாரித்த படத்தில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண் டிருந்தபோது, பீம்சிங் வற்புறுத்தலின் பேரில் திருப்பதி சென்று தெய்வதரிசனம் செய்தார். இந்தச் செய்தி ‘தினத்தந்தி’ நாளேட்டில் ‘நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்’ என்று தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.
டாக்டர் ரங்கபாஷ்யம் மருத்துவ மனையில் சிவாஜி உடல் நலமில்லாமல் படுத்திருந்தபோது, காமராஜ் சென்று பார்த்தார். சிவாஜியினுடைய தேசிய மனோபாவத்திற்கு உரமிட்டு வளர்த்தவர் களிலே சின்ன அண்ணாமலை மிகவும் முக்கியமானவர்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், தம்முடைய பிறந்த நாளைக் கொண்டாடும்போது, ஒவ்வொரு ஆண்டும் காமராஜரை, அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து, மாலையிட்டு வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். காமராஜரும் அவருக்கு நெஞ்சார வாழ்த்து சொல்லுவார்.
சிவாஜி வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காமராஜர் தவறாமல்பங்குகொள்வார். சிவாஜிக்குப் பெருந்தலைவரிடம் மரியாதை மட்டு மல்ல, ஒரு பக்தியே ஏற்பட்டிருந்தது. சரியாகச் சொல்வதென்றால், அதை ஒரு ‘பயம் கலந்த பக்தி’ எனலாம்.
தம்முடைய படங்களின் வெற்றி விழாக்கள் அனைத்திலும் காமராஜ ரையும் மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்துப் பங்கேற்கச் செய்வார்.
‘சிவாஜி ரசிகர் மன்றம்’ என்கிற அமைப்பு மிகவும் வலிமையுள்ளதாக மாறியது. குறிப்பாக, சின்ன அண்ணாமலை, தலைமைப் பொறுப்பிலிருந்தபோது, காங்கிரஸ் கட்சிக்கும் ரசிகர் மன்றத்துக்கும் இருந்த தொடர்பு மிகவும் நெருக்கமானது. இந்த மன்றத்தினர் கட்சிப் பணியையும் கலைப் பணியையும் இணைத்துச் சிறப்பாகச் செய்தார்கள். ஒரு காலகட்டத்தில், காங்கிரஸ் கூட்டம் என்றால், பெரும்பான்மை யானவை, சிவாஜி ரசிகர் மன்றங்கள் முன்னின்று நடத்தியவையாகவே இருக்கும். சிவாஜி ரசிகர் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அங்கமாகவே பணிபுரிந்தனர்.
பிற்காலத்தில், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றங்களைத் தளபதி சண்முகம், வி.ராஜசேகரன், மதுரை மகாமணி, புரசை குமரன், பால்பாண்டியன், கு.கொண்டல்தாசன் ஆகியோர் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக, சிவாஜி தம்மை முழுமையாக அர்ப் பணித்துக்கொண்டு கடுமையாக உழைத்தார். தாம் நடித்த திரைப் படங்களில் தேசபக்தியை வளர்க்கவும் காமராஜர் புகழ்பாடவும் பெருமளவில் முயற்சி மேற்கொண்டார். தேர்தல்பிரச்சாரத்தின்போது, மாதக்கணக்கில் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேடைகளில் சிம்ம கர்ஜனை புரிவார். இது, அரசியல் எதிரி களின் கண்களை உறுத்துவதாக இருந்தது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை ஊட்டுவதாக இருந்தது. ஒரு காலகட்டத்தில், எம்.ஜி.ஆர். & சிவாஜி மோதல், அரசியல் களத்தில் மிகப்பெரிய பலப் பரிட்சையாக அமைந்தது.
காமராஜர் தலைமையில் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு வந்ததற்குச் சிவாஜி ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். மொத்தத்தில், தமிழகத்தில் காமராஜர் வழிகாட்டுதலில் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் காங்கிரஸ் இயக்கத்தை வலிமைபெறச் செய்தது என்பது சரித்திர உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது!