காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று,காந்தியடிகளின் வழியில் பெருந்தலைவரின் உற்ற தோழராக விளங்கி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, தமிழக அமைச்சராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பல்வேறு பொறுப்புகளை ஏற்று, தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அப்பழுக்கற்ற தலைவர் தியாகி பி. கக்கன் அவர்களின் 39 ஆவது நினைவுநாள் டிசம்பர் 23.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி எனும் சிற்றூரில், பூசாரிக் கக்கன் என்பவருக்கும், பெரும்பி அம்மாள் என்பவருக்கும் 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள் பிறந்தவர் கக்கன். தந்தை பூசாரி கக்கன் மேலூரில் இருந்த வீரமாகாளி அம்மன் கோயில் பூசாரியாகவும், அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர்.
மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள தொடக்க பள்ளியில் பல்வேறு சிரமங்களுக்கிடையே எட்டாம் வகுப்பு வரையே கக்கன் படித்தார். தினமும் 10 கி.மீ. நடந்து தான் பள்ளி சென்றார். தொடர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், மதுரை தனவந்தராக கருதப்பட்ட தியாகி என்.எம்.ஆர். சுப்பராமன் என்பவரை பூசாரி கக்கன் அணுகி தனது மகன் மேலும் படிப்பதற்கு உதவி செய்யும்படி கோரினார். பள்ளி படிப்பை முடித்த கக்கன், பொதுவாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒர் அங்கமாக அரிஜன சேவாசங்கம் விளங்கியது. தென் மாவட்டங்களில் இந்த அமைப்பை துவங்கி, மிகச் சிறப்பாக நடத்தியவர்கள் வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர். சுப்பராமன் ஆகியோர் என்பது மிகையல்ல.
1934 இல் ஜனவரி 27 ஆம் நாள் காந்தியடிகள் மதுரைக்கு வருகை புரிந்த போது, அவரை தரிசிக்கிற வாய்ப்பு கக்கனுக்கு ஏற்பட்டது. அவர்மீது அளவற்ற பக்தி கொண்ட கக்கன், காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுதலை போராட்;டத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார். காந்தியடிகள் அறிவித்த தனிமனித சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கக்கன் சிறைவாசம் அனுபவித்தார். அதேபோல, 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் கலந்து கொண்ட கக்கன் கைது செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் பெல்லாரி மாநிலத்தில் உள்ள அலிபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாத கடுங்கால தண்டனை முடிந்த பின் 15.1.1944 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
200 ஆண்டுகால ஆங்கில ஆட்சி அகற்றப்பட்டு, நாடு விடுதலை அடைந்த போது இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கி, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அந்த அவையில் ஆன்றோர்களும், சான்றோர்களும், மெத்த படித்தவர்களும் நிறைந்திருந்தனர். அத்தகைய மேன்மைமிகு சபையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக தேர்ந்தெடுக்க செய்து பொறுப்புகளை அளித்த பெருமை காங்கிரஸ் இயக்கத்திற்கு உண்டு. அந்த வகையில், அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக 26.1.1946 இல் கக்கன் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.
இந்திய தேசிய காங்கிரஸ் வரலாற்றில் 1955 இல் ஆவடியில் நடைபெற்ற மாநாடு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். யு.என். தேவர் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தமிழக முதல்வர் காமராஜர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பெருமை கக்கனுக்கு உண்டு. ஆவடி மாநாட்டில் கலந்து கொண்ட ஜவஹர்லால் நேரு அதன்படி எப்போது கக்கனை அழைத்தாலும் ‘கக்கன்ஜி… கக்கன்ஜி…’ என்றே அழைத்தார். அதுமுதல் அந்த அடைமொழி தமிழகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது. பிற்காலத்தில் அவரை கக்கன்ஜி என்றும், தியாகி கக்கன் என்றும் மக்கள் அழைக்க தொடங்கினர்.
1957 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கக்கன், சமயநல்லூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் பொதுப்பணி, அரிஜன நலம் ஆகிய துறைகளின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1962 சட்டமன்றத் தேர்தலில் அதே மேலூர் தொகுதியில் போட்டியிட்டு காமராஜர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை பாதுகாப்பு, அரிஜன நலம் ஆகிய துறைகளின் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
1963 இல் காமராஜர் திட்டத்தின்படி முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகியதால், எம். பக்தவச்சலம் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் கக்கனுக்கு உள்துறை, நிதி, கல்வி, சிறை, தொழிலாளர் நலன், அறநிலையத்துறை, அரிஜன நலன் போன்ற முதன்மையான துறைகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டன. கக்கனுக்கு பிறகு இதுவரை எந்தவொரு தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கும் தமிழக அமைச்சரவையில் இவ்வளவு பெரிய முக்கிய பொறுப்புகள் இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதை தலித் அரசியல் பேசும் நண்பர்கள் அறிந்து கொள்வது நல்லது.