முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு, மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, இறுதியாக உச்சநீதிமன்றம் வழங்கிய தண்டனையின் மூலம் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டனர். மலர்ந்த முகத்துடன் எந்நேரமும் சிரித்தவாறு எந்த தமிழ் மக்களை நேசித்தாரோ, அதே இனத்தைச் சேர்ந்த அந்நியர்கள், இந்தியாவின் பகைவர்கள், தமிழகத்தில் ஊடுருவி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் இளகிய மனதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கோழைத்தனமாக, ஒரு பெண்ணைப் பயன்படுத்தி அவரை படுகொலை செய்தார்கள்.
அன்று 85 கோடி மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருந்த மாபெரும் தலைவரைப் படுகொலை செய்து இந்திய மக்களின் விருப்பத்தைச் சிதைத்தார்கள். நம்பிக்கையைச் சீர்குலைத்தார்கள். இந்தியாவின் இறையாண்மையைத் தகர்த்தார்கள்.
ராஜிவ்காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற பழியைத் துடைக்க முற்பட்டிருப்பவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்தவருமான மறைந்த தோழர் தா. பாண்டியன் அவர்கள், ‘ராஜிவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகளைக் கூற விரும்புகிறோம்:
‘ஒருமுறைகூட எல்.டி.டி.ஈ. பற்றி எரிச்சலுடன் அல்லது ஆத்திரத்துடன் அவர் (ராஜிவ்) பேச நான் கண்டதே இல்லை. இவ்வகைத் தமிழ் மக்கள் மீதும் அவருக்கு அளவற்ற அனுதாபம் இருந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் போய் விட்டது குறித்து வருத்தப்படுவது வழக்கம். ‘அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும்’ என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். எனவே, இவ்வளவு அன்பும், அனுதாபமும் காட்டிய ஒரு நண்பரையே எல்.டி.டி.ஈ.யினர் கொன்று விட்டார்களே என்பதால் எனது கோபம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
அந்த ஒப்பந்தத்தால் இதுவரை இலங்கைத் தமிழர்களுக்கு இல்லாதிருந்த சில உரிமைகள் கிடைத்தன. மேலும் சில உரிமைகள் கிடைக்க வழிவகுத்தன. உடனே கிடைத்துவிட வேண்டுமென எல்.டி.டி.ஈ. தலைமை கருத்தை வெளியிட்டது. பின்னர், நடந்த தேர்தலைப் புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியுடன் ஒத்துழைக்க மறுத்தது. அந்த ஆட்சியைக் கலைக்கவும் சிங்கள அரசுடன் ரகசிய உடன்பாடு செய்து அவர்களிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்று இந்திய அமைதிப் படையைத் தாக்கத் தொடங்கியது.
எனவே, பரம வைரியுடனும் சேர்ந்து கொண்டு சொந்தச் சகோதரர்களையே கொல்வதற்குக் கூசாதவர்கள். இவர்களால் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிக் குழுக்களின் தலைவர்கள் சிறீ சபாரத்தினம், முகுந்தன், அமிர்தலிங்கம், பத்மனாபா என்று பட்டியல் நீளமானது. பல்கலைக் கழகத் துணை வேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர், இதர அரசியல் வாதிகள் என இவர்களால் கொல்லப்பட்ட பட்டியலும் நீளமானது.
சிங்கள வெறியர்களால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட, இந்த வெறிக் கும்பலால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்.
செய்நன்றி மறந்த இந்தக் கொலைகாரக் கும்பல்தான் ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்க வேண்டும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். அன்றும், இன்றும் என் கருத்து ஒன்றே தான்.’
நேரடி சாட்சியாக விளங்குகிற தோழர் தா. பாண்டியனை விட, வேறு எவரும் உரிய பதிலைக் கூறிவிட முடியாது. மேலும், 1991 மே 21 அன்று என்ன நடந்தது என்பதை சமர்ப்பிக்க விரும்புகிறோம்:
‘1991 பொதுத் தேர்தலை முன்னிட்டுத் தமிழகத்திற்குப் பிரச்சாரம் செய்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக வருகை புரிந்தார்.
இரவு மணி 10.10 :
ராஜிவ் காந்தி தம் தாய் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பொதுக்கூட்ட மைதானத்தை நோக்கி நடந்தார். அயல்நாட்டுப் பத்திரிகையாளர்களைக் காரில் அனுப்பி விட்டு, வேறு ஒரு ஜீப்பில் பயணம் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, நேரே மேடைக்கு விரைந்து செல்கிறார்.
அங்கே, ஆண்கள் பகுதியில் தம்மைக் காண்பதற்கும், வாழ்த்துவதற்கும் நின்று கொண்டிருந்தவர்களை ராஜிவ் காந்தி பார்த்துவிட்டு, பெண்கள் பகுதிக்கு விரைந்தார்.
லதா கண்ணனும் அவரது மகள் கோகிலாவும் கவிதையுடன் தயாராக நின்று கொண்டிருந்தனர். கோகிலா தம் கவிதையைப் படித்து முடித்ததும், அவரையடுத்து நின்று கொண்டிருந்த ‘சல்வார் கமிஸ்’ அணிந்த பெண்மணி ராஜிவை நெருங்கினார்.
சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா தம் கையை நீட்டி, அவரைத் தடுக்க முயன்றார். ராஜிவ், ‘தடுக்காதீர்கள்’ என்று சைகை காட்டி ‘ரிலாக்ஸ்’ என்று கூற, அனுசுயா சற்றே பின்னோக்கி நகர்ந்தார்.
கண்ணாடி அணிந்த சல்வார் கமிஸ் பெண்மணி வேகமாக முன்னேறி வந்து, ராஜிவ் காந்திக்கு நேர் எதிரில் நின்றார். ராஜிவ் காந்திக்கு சந்தன மாலையை அணிவித்துவிட்டு. அவரது பாதங்களில் பணிகிறார்.
இரவு மணி 10.20 :
அந்தப் பெண்மணி குனிந்த மறுகணம் பெரும் வெடிச் சத்தம். நெருப்பும், புகையும் இருபது அடி உயரத்துக்கு எழுந்தன. ராஜிவ் காந்தி நின்று கொண்டிருந்த இடம், போர்க்களம் போலக் காட்சியளித்தது. ஆங்காங்கே ரத்தமும், சதையும் சிதறிக் கிடந்தன.
ராஜிவ் காந்தி, அவரது பர்சனல் பாதுகாப்பு அதிகாரி, லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு, பச்சை ஆரஞ்சு சல்வார் கமிஸ் பெண் அனைவரும் அந்த இடத்திலேயே மரணம் அடைந்திருந்தனர். மாவட்ட போலீஸ் அதிகாரி முகமது இக்பால் உட்பட ஒன்பது போலீஸ்காரர்களும், மொத்தம் 22 பேர் அந்த இடத்திலேயே தம் இன்னுயிர் ஈந்தனர். அவர்களைத் தவிர பலருக்கு காயம். அதில், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஹரிபாபு உபயோகித்த கேமரா, இப்போது அவரது உடல்மீது, சற்றுமுன் நிகழ்ந்த கோரச் சம்பவத்துக்கு சாட்சியாக கிடந்தது.
அந்த மைதானம் முழுவதும் ஒரே கூச்சல், குழப்பம். போலீஸ்காரர்கள் உட்பட பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும், கட்சிக்காரர்களும், போலீஸ் அதிகாரிகளும் துணிவுடன் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மூப்பனாரும், வாழப்பாடி ராமமூர்த்தியும் ராஜிவ் காந்தி எங்கே என்று தேட ஆரம்பித்தனர்.
குண்டு வெடிப்பின்போது, மேடை மீது ராஜிவ் காந்திக்காக வாழப்பாடி ராமமூர்த்தி காத்துக் கொண்டிருந்தார். இந்திரா காந்தி சிலையிலிருந்து பொதுக்கூட்ட மைதானத்தை நோக்கி மூப்பனார் நடந்து வந்து கொண்டிருந்தார். எனவே, சம்பவத்தின் போது அவ்விருவருமே ராஜிவ் காந்தியுடன் இல்லை.
ஆங்காங்கே சிதறிக் கிடந்த உடல்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தவர்களால், ராஜிவின் உடலை அத்தனை சீக்கிரம் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் அணிந்திருந்த ‘லோட்டோ’ ஷுக்கள் தான் அவரை அடையாளம் காட்டின.
குப்புறக்கிடந்த ராஜிவ் காந்தியின் உடலை மூப்பனார் புரட்ட முயன்ற போது, ரத்தமும், சதையும் அவரது கைகளுக்குப் புலப்பட்டது. புரட்டிப் போட்ட உடல் மீது ஒரு சால்வையைப் போட்டுவிட்டு, அவசரமாக ஒரு ஸ்டிரெச்சரைக் கொண்டுவரச் சொன்னார். ராஜிவ் உடல் கிடந்த சிவப்புக் கம்பளத்தின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்க, ஐ.ஜி. ராகவன் அதனை அணைக்க முனைந்தார்.
‘ராஜிவைத் தான் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கிடக்கும் சாட்சிப் பொருள்கள் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்தே ஆக வேண்டும்’ என்று ஐ.ஜி. ராகவன் முடிவு செய்தார். காரணம், அங்கே கிடக்கும் சின்னஞ்சிறு பொருட்களோ, தகவலோ கூட புலன் விசாரணைக்கு உதவக் கூடுமல்லவா ?
ராஜிவ் காந்தியின் உடல் ஒரு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஹரிபாபுவின் உடல்மீது கிடந்த கேமராவை ஐ.ஜி.ராகவன் எடுத்துப் பத்திரப்படுத்தச் சொன்னார். அடுத்த சில மணி நேரங்களுக்கு அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ராஜிவ் காந்தியின் உடல் சென்னை விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தகவல் அறிந்து பிரத்யேக விமானப்படை விமானம் மூலம் சோனியா காந்தியும், பிரியங்காவும் சென்னை வந்தனர்.
மே 22 ஆம் தேதி அதிகாலை :
குண்டு வெடிப்பால் சிதறிய ராஜிவ் காந்தியின் உடலின் எஞ்சிய பகுதிகளைப் பெற்றுக் கொண்ட சோனியா காந்தி டெல்லி திரும்பினார்.
ராஜிவ் காந்தி படுகொலை குறித்த புலனாய்வை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் உடனடியாக கேட்டுக் கொண்டார்.
எனவே, அரிதிலும் அரிதான கொலை வழக்குகளில்தான் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கும். அப்படி தண்டனை விதிக்கப்பட்ட பிறகு குற்றவாளிகளை நிரபராதிகள் என்று கூறுவது நீதிமன்றத்தின் மாண்பை சிதைப்பதாகாதா? சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைப்பதாகாதா?
உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ராஜிவ் கொலையாளிகள் 27 ஆண்டுகாலமாகச் சிறையில் இருக்கிறார்கள். அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விடுதலை செய்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எங்களுக்கு அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருந்ததில்லை. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ராஜிவ் கொலையாளிகள் சமர்ப்பித்த கருணை மனு மீது 11 ஆண்டுக்காலம் மத்திய காங்கிரஸ் அரசு முடிவெடுக்காத காரணத்தால்தான், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. எனவே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளே தவிர நிரபராதிகள் அல்ல.