இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு, நாடு திரும்ப இருந்த இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கு படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இலங்கை கடற்படை சார்பாக கலந்து கொண்ட படைவீரனான விஜயமுனி விஜிதா ரோகனா டிசில்வா என்பவன் திட்டமிட்டுக் கொலை வெறியோடு துப்பாக்கியின் அடிபாகத்தால் ராஜீவ்காந்தியின் பிடறியில் தாக்கினான். கண் இமைக்கும் நேரத்தில் ராஜீவ்காந்தி விலகிக் கொண்டதால், பின்புற தோள்பட்டையில் பலத்த அடி விழுந்தது. மயிரிழையில் உயிர் பிழைத்த இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இந்த சம்பவத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டது அவரது பெருந்தன்மையையும், பாரம்பரிய பண்பையும் வெளிப்படுத்தியது.
இங்கு ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிட வேண்டும். எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சதாக், ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட போது நமது சொந்த நாட்டு படைவீரனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான், படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பில், ரவைகள் இல்லாத துப்பாக்கிகள் வைத்திருக்கும் முறை உலகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறையின் காரணமாகத் தான் ராஜீவ்காந்திக்கு நேரவிருந்த கொலை முயற்சி தவிர்க்கப்பட்டது.
இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால கண்ணீரை துடைக்க இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவோடு ஒப்பந்தம் போட்டதற்காக விடுதலைப் புலிகளால் மே 1991 இல் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அதேநேரத்தில் சிங்கள வெறியர்களின் வெறிச்செயலை ராணுவ வீரன் விஜயமுனி, ராஜீவ்காந்தியின் உயிரை பறிக்க முயற்சி செய்தான்.தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்ததற்காக சிங்கள வெறியனும் கொலை முயற்சியில் ஈடுபட்டான்.
சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தந்த ராஜீவ்காந்தியை விடுதலைப் புலிகளும் சதித் திட்டம் தீட்டி இந்தியாவின் பிரதமராக வருவதை தடுப்பதற்காக தேர்தலுக்கு முன்பாகவே படுகொலை செய்தனர். இதன்மூலமாக இந்தியர்களின் ஆதரவையும், உலக நாடுகளின் ஆதரவையும் விடுதலைப் புலிகளும் இழந்தனர்.
இன்று இலங்கை தமிழர்களும் கடுமையான சோதனையில் சிக்கியுள்ளனர். இவர்களை இனி யார் பாதுகாக்கப் போகிறார்கள் ?