முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு மீறப்படுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், கர்நாடகாவில் துணை ஆணையராகப் பணியாற்றியபோது, வகுப்புவாத மோதல்களை நிர்வகிப்பதிலும், மணல் மாஃபியாக்களை கட்டுப்படுத்துவதிலும் சசிகாந்த் புகழ்பெற்று விளங்கினார் என்பதைக் கர்நாடக மக்கள் இன்றும் குறிப்பிடுகிறார்கள்.
1979 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சசிகாந்த். அவரது தந்தை பி.சண்முகம் ஓய்வு பெற்ற நீதிபதி. அவரது தாயார் அம்பிகா மத்திய அரசின் உயரதிகாரியாக இருந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்லைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இளங்கலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார் சசிகாந்த். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதும் அந்த பணியை ராஜினாமா செய்தார்.
தேசிய அளவில் ஐஏஎஸ் தேர்வில் 9 ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்ற சசிகாந்த் செந்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
2009 முதல் 2012 வரை பல்லாரி மாவட்டத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றினார். இரண்டு முறை சிவமோகா ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். சிந்துதுர்கா மற்றும் ரெய்ச்சூர் மாவட்டங்களில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை இயக்குநராக பணியாற்றிய அவர், 2017 அக்டோபர் 20 ஆம் தேதி தெற்கு கன்னட மாவட்டத்தில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
தெற்கு கன்னட மாவட்டத்தில் பொறுப்புள்ள பதவியிலிருந்தபோது, அவரது வெளிப்படையான நேர்மையான நிர்வாகம் அனைவரையும் கவர்ந்தது. மத ரீதியான அமைப்புகள் பெற்று வந்த நிதியை நிறுத்தியதோடு, சட்டவிரோத மணல் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். பல்வேறு மத அமைப்புகளுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இதன் விளைவாக 2018 ஆம் ஆண்டு தெற்கு கன்னட மாவட்டத்தில் வகுப்புவாத கலவரம் வெகுவாகக் குறைந்தது.
மணல் எடுப்பதில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதனால் மணல் கடத்தல் குறைந்ததோடு, பக்கத்து உடுப்பி மாவட்டத்திலும் மணல் கடத்தலைத் தடுக்க இதே நடவடிக்கையை மேற்கொள்ள வழி ஏற்படுத்தியது.
எழுத்தாளர் கல்புர்கி கொலையில் ஸ்ரீராம் சேனாவுக்கு தொடர்பு இருப்பதாக கவிஞர் சென்னவீரா கனவி மற்றும் எழுத்தாளர் கிராட்டி கோவிந்தராஜ் ஆகியோர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, வெகுண்டெழுந்த ஸ்ரீராம் சேனாவினர், ஆதாரத்தை காட்டாவிட்டால் அவர்களது வீட்டை தரைமட்டமாக்கப் போவதாக அறிவித்தனர்.
இவர்கள் சட்டவிரோதப் பயிற்சி முகாமை நடத்துவதாக உறுதியான தகவலை பெற்றதும் ஸ்ரீராம் சேவாவை சேர்ந்தவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு சூதாட்ட விடுதிகளில் ரெய்டு நடத்தி கடும் நடவடிக்கை மேற்கொண்டார். தான் நேரடியாக ரெய்டு நடத்தப்போவதை கடைசி நிமிடத்தில் தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே தெரிவித்தார்.
விநாயக சதுர்த்தியின்போது, அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை தடை விதித்தார். இது போன்ற நடவடிக்கை, சசிகாந்த் செந்திலை நம் அதிகாரி என்றும், தங்களுக்கு நெருக்கமான அதிகாரி என்றும் ரெய்ச்சூர் மக்களை எண்ண வைத்தது.
2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரை ரெய்ச்சூர் மாவடத்தின் துணை ஆணையராக அவர் இருந்தபோது, பல்வேறு அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார். பள்ளிகளில் மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார். அரசின் பலன்கள் ஏழைகளுக்கு சென்றடைகிறதா? என்பதை அவர் நேரில் சென்று ஆய்வு செய்ததை அந்த மாவட்ட மக்கள் இன்னும் நினைவுகூர்கிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி ஐஏஎஸ் பதவியை சசிகாந்த் ராஜினாமா செய்தார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அடிப்படை ஜனநாயகம் மீறப்படுவதாகவும், வரும் காலத்தில் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு, சவால்களுக்கு உள்ளாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பாதியிலேயே பதவியிலிருந்து விலகுவதற்காக மக்கள் பிரதிநிதிகளிடமும் மக்களிடமும் அவர் மன்னிப்பு கோரினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தமது ராஜினாமா குறித்துக் கூறும்போது, பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை மற்றும் பாசிச ஆட்சியை எதிர்த்து பதவி விலகியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
சசிகாந்த் செந்தில் பதவி விலகியபோது ரெய்ச்சூர் மாவட்ட துணை ஆணையராக இருந்தார். இவர் ராஜினாமா செய்ததை அறிந்து இந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் முழுவதும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பதவி விலகிய பின், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார். தேசிய மக்கள் பதிவேட்டை அமல்படுத்தினால் இந்துக்களுக்குத் தான் அதிக ஆபத்து என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கத்தான் ஐஏஎஸ் பதவியை தூக்கி எறிந்தேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர் சசிகாந்த் செந்தில்.
ஆற்றல்வாய்ந்த நல்ல அதிகாரியான சசிகாந்த் செந்தில் தமது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததை எண்ணி, இன்றும் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் ரெய்ச்சூர் மக்கள்.