90 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசின் கல்வி திட்டம் மற்றும் நிர்வாக தேசிய நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மின்சார வசதி இல்லாதது, ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாத காரணத்தால், 95 சதவிகித கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் 419 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடத்திய ஆய்வில், 543 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆன்லைன் வகுப்புகள், தேர்வு மற்றும் ஆசிரியர்களின் பயிற்சி விவரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டன. இதற்கு மாற்றாக ஆன்லைன் கல்வி சாத்தியம் என்று கருதப்பட்டது. ஆனால், இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக, புதுடெல்லியைச் சேர்ந்த கல்வி திட்டம் மற்றும் நிர்வாக தேசிய நிறுவன பேராசிரியர் சுதன்ஸு பூஷன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 8 ஆயிரம் அரசு கல்லூரிகளில் 1 கோடியே 40 லட்சம் மாணவர்கள் படிப்பதாகவும், இவர்களில் 90 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக் கனியாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் பங்கெடுக்க ஏதுவாக, வசதிகளை செய்து தருமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சுதன்ஸு பூஷன் தெரிவித்துள்ளார்.