எஸ்.பி.பி இந்த தேசத்தின் அரிய இசை பொக்கிஷமாவார்!
கலைஞரோ,ஜெயலலிதாவோ இன்று பதவியில் இருந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகத்திடம் நேரடியாக பேசி இருப்பார்கள்!
இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சும்மா போனில் விசாரித்ததோடு சரி! அதை வைத்து பேசி வருகிறார்.
இதுவே எஸ்.பி.பி ஆந்திரா,அல்லது தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அந்த மாநில முதல் மந்திரிகள் மிகுந்த அக்கறை காட்டியிருப்பார்கள்!
“ எனக்கு சாதாரண பாதிப்பு தான் இரண்டு நாளில் வந்துவிடுவேன் ” என்று சொல்லிச் சென்ற ’பாடும் நிலா’ கவலை தரும் நிலைக்கு போனது எப்படி? என்பது அவரது கோடானுகோடி ரசிகர்களின் மனதில் விடை தெரியாத கேள்வியாக உறுத்திக் கொண்டே உள்ளது!
எஸ்.பி.பி சேர்ந்தது முதல் தான் அந்த மருத்துவமனையின் பெயரே வெளியே தெரிய வந்தது! உண்மையிலேயே அவர்கள் நல்ல மருத்துவம் கூட தரலாம்! எனக்குத் தெரியாது!
பொதுவாக சில தனியார் மருத்துவமனைகள் தங்கள் பெயரை விளம்பரப்படுவதற்காக இந்த மாதிரி வி.வி.ஐ.பி பேஷண்டுகளை பயன்படுத்திக் கொள்வார்கள் என கேள்விபட்டுள்ளேன். பணத்திற்கு பணமுமாச்சு! இலவசமாக பெரிய விளம்பரமுமாச்சு!
இல்லாத நோய்களை பெரிதுபடுத்தி, தேவையில்லாத டெஸ்டுகள்,மருந்துகள் என செலவுகள் செய்ய வைத்து, எல்லாவற்றிலும் ஓவர் டோஸ் தந்து சாதரண நோய்களைக் கூட சிக்கலாக்கிவிடும் அனுபவங்களை நம்மில் பலர் தனியார் மருத்துவமனை விஷயத்தில் கண்டுள்ளோம் தானே!
எனவே, இந்த மாதிரி நேரங்களில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை உயர் அதிகாரி மருத்துவ குழுவுடனோ அல்லது சுகாதாரத்துறை அமைச்சரே மருத்துவ குழுவுடன் நேரடியாக விசிட் செய்தோ விவரங்களை கேட்டறியலாம்!
எஸ்.பி.பி.குடும்பத்தாருடன் பேசி நமது ஜி.ஹெச்சில் சிறப்பு மருத்துவம் தர வாய்ப்பிருந்தால் பரிசீலிக்கலாம்! ஏனெனில் தற்போது எல்லா நவீன மருத்துவ உபகரணங்களும் ஜி.ஹெச்சில் உள்ளன! மிகச் சிறந்த அனுபவமுள்ள மருத்துவர்கள் ஜி.ஹெச்சில் தான் உள்ளனர். இதோ தற்போது தலைவர்.நல்லகண்ணுவிற்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது! அவர் நான்கைந்து நாட்களில் வீடு திரும்ப உள்ளாராம்!
எல்லோரும் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்யத் தான் முடிகிறது. ஆனால்,பிராக்டிகலாக ஏதாவது செய்வது என்பது அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது!
“ எங்கேயும்,எப்போதும் சங்கீதம்…, சந்தோஷம்…!’’ என்று 16 மொழிகளில் பாடித் திரிந்த அந்த பாடும் குயிலை எத்தனை நாள் படுக்கையில் வைத்திருக்க போகிறார்களோ…?
ஸ்ரீபதி பண்ரதாரத்யுல பாலசுப்பிரமணியம் (எஸ்.பி.பி) அவர்களே, நீங்கள் மீண்டெழுந்து வந்து பாட வேண்டுமென்பது கூட இல்லை! ஏனெனில், பத்து பிறவிகள் எடுத்து பாடி சாதிக்க வேண்டியவைகளை (42,000 பாடல்கள்) நீங்கள் இந்த ஒற்றை பிறவியில் சாதித்து காட்டிவிட்டீர்!
“ பாடும் போது நான் தென்றல் காற்று..’’ எனப் பாடிய உங்கள் கந்தர்வ குரல் காற்றின் திசை எங்கும் நாளும்,நாளும் பயணபட்ட வண்ணமுள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்..!
நீங்கள் குணமடைந்து புன்னகைத்தாலே போதும்! உங்கள் சுவாசமே ஒரு சங்கீதம் தான்! “ பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன..’’ என ’பாடும் நிலா’ குணமடைந்து வெளிவரும் போது, பாடக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகர்களில் ஒருவனாக இந்த விண்ணப்பத்தை தமிழக அரசுக்கு வைக்கிறேன். சற்று நேரடியாக அக்கறை காட்டுங்கள்!
(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)