புதுவை முதல்வர் நாராயணசாமியை “புரட்சி முதல்வர்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டம் சூட்டி அழைத்தார். இதோ நாராயணசாமியின் அடுத்த புரட்சிகரமான காரியம் நடந்துள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை, காலை உணவுத் திட்டத்துக்குச் சூட்டியுள்ளார் நாராயணசாமி!
புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள திட்டத்துக்கு ‘டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டம்’ என்று பெயர் சூட்டி உள்ளார், புதுவையின் புரட்சி முதல்வர். இத்திட்டத்தை புதுச்சேரி காராமணிக் குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர்.
இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார், சட்னி ஆகியவை வழங்கப் படுகிறது.. மாகி பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, புட்டு, கடலை, உடைத்த கோதுமை உப்புமா, சட்னி வழங்கப்படுகிறது.. ஏனாம் பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, சட்னி, தக்காளி சாதம், சட்னி, கிச்சடி, சட்னி, உடைத்த கோதுமை உப்புமா, சட்னி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம், அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் செயல்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழலையர் முதல் மேனிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை பயனடைவார்கள். புதுவை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் முழுமையாக இயங்கத் துவங்கிய பின்னர், அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக புதுச்சேரி அரசு, 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டு மின்றி கூடுதலாக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 81,000 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
ஒரு மாநில அரசு தனது கனவுத் திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரைச் சூட்டி இருப்பதைப் போன்ற பெருமை வேறு எதுவும் இருக்க முடியாது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவுற்ற போதே, பல்வேறு அறிவிப்புகளை புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தார்.
கலைஞருக்கு வெண்கலச் சிலை! புதுச்சேரியில் ஒரு சாலைக்கு கலைஞர் பெயர்! காரைக்கால் புறவழிச்சாலைக்கு கலைஞர் பெயர்! காரைக்காலில் தொடங்கப்படும் பட்டமேற்படிப்பு மையத்துக்கு கலைஞர் பெயர்! புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தில் கலைஞர் பெயரால் இருக்கை!
இப்படி கலைஞரைக் கொண்டாடியவர்தான் புதுவை முதல்வர் நாராயணசாமி!
ஏதோ ஒரு திட்டம் என்று இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு தினமும் உணவளிக்கும் திட்டத்துக்கு கலைஞர் பெயர் சூட்டியதுதான் பெருமைக்குரியது!
சிறுவயதில் தன்னுடைய இணைபிரியாத் தோழர்களைச் சேர்த்துக் கொண்டு ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி னார் கலைஞர் அவர்கள். அப்போது அவர், திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்.
இந்த அமைப்பின் செயலாளராக இருந்த கலைஞர் அவர்கள், புதுவையில் இருந்த பாவேந்தர் பாரதிதாசனுக்கு 1942 ஆம் ஆண்டு ஒரு கடிதம் அனுப்புகிறார். அதற்கு பாரதிதாசன் பதிலும் அனுப்புகிறார்.
‘தண்பொழிலில் குயில்பாடும் திருவாரூரில் தமிழ்நாடு தமிழ்மாணவர் மன்றங்காண்!’ என்று அந்தக் கவிதை தொடங்கும்.
“கிளம்பிற்றுக்காண் தமிழச்சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை! வளம்பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லாதார் வால் நீட்டினால் உதைதான் கிடைத் திடுங்காண்” என்று அந்தக் கவிதை முடியும்!
பள்ளி மாணவராக இருந்து புதுவைக்கு கடிதம் எழுதிய கலைஞர் பெயரால் பள்ளி மாணவர்க்கு காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது பொருத்தமானது!
1944 ஆம் ஆண்டு புதுச்சேரியில் திராவிட இயக்க மாநாடு, பேரறிஞர் அண்ணா தலைமையில் நடந்தது. இருபதே வயது நிரம்பிய இளைஞரான கலைஞர் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு நாடகம் போட்டார். அந்த நாடகத்தால் கோபம் ஆனவர்கள் கலைஞரைத் தாக்கினார்கள். அன்றைக்கு சிவகுரு என்ற வேடம் தாங்கினார் கலைஞர். ‘அதோ சிவகுரு’ என்று சொல்லி விரட்டி விரட்டித் தாக்குதல் நடத்தினார்கள். கடுமையாக அடித்தனர். தாக்குதலில் மயக்கமுற்ற அவரை யாரென்றே தெரியாத ஒரு குடும்பத்தார் பாதுகாத்து மறுநாள் அனுப்பி வைத்தார்கள். கலைஞரைக் காணவில்லையே என்று பெரியார் துடித்துப் போனார். அதிகாலையில் வந்த கலைஞரைப் பார்த்து பதற்றம் அடைந்த பெரியார் அவர்கள், தனது கையால் மருந்து போட்டார்கள். அதன்பிறகுதான் தன்னுடன் அழைத்துச் சென்று “குடியரசு” இதழில் ஆசிரியர் குழுவில் கலைஞரை பெரியார் அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள்.
அதாவது பெரியாரையும் கலைஞரையும் இணைத்த புதுவையில். கலைஞரின் பெயரால் உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தாயினும் சாலப் பரிந்து தமிழ்ச்சமுதாயத்துக்கு உயிர் உணவையும், தமிழ் உணர்வையும் ஊட்டிய கலைஞர் பெயரால் உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு இருப்பது பொருத்தமானது.
உணர்வால் மட்டுமல்ல, உணவாலும் உயிரூட்டும் காரியத்தை புதுவையில் செய்ய இருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு தனது பரந்த உள்ளத்தால், தமிழின உணர்வால் அடித்தளமிட்ட புதுவை முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நன்றி: முரசொலி, 13-11-2020