சமீபகாலமாகத் தினமலர் நாளேட்டில், துர்வாசர் உள்ளிட்ட பல போலி பெயர்களில் முகமூடி அணிந்து கொண்டு துக்ளக் பத்திரிகையில் பணியாற்றுகிற திராவிட இயக்க எதிர்ப்பாளர் ஒருவர் நாள்தோறும் ஆதாரமற்ற அவதூறு கட்டுரைகளை எழுதி வருகிறார். இக்கட்டுரைகள் தினமலரின் பாரம்பரிய பெருமையை முற்றிலும் அழித்து வருவதை உணராத நிர்வாகம் அதை வெளியிட்டு வருகிறது. இதன்மூலம் தினமலர் பத்திரிக்கையா ? அல்லது பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி பத்திரிக்கையா ? என்று கேட்கிற வகையில் இதுபோன்ற கட்டுரைகள் வெளிவருகின்றன.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் அறிவாலயம் சென்று, தி.மு. கழகத் தலைவர் தளபதி உள்ளிட்டவர்களை நேற்று மாலை 6.30 மணியளவில் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். இந்த சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் தினமலர் நாளேட்டில் ‘தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு துவக்கம் : டீல் ஏற்படாததால் காங்கிரஸ் வருத்தம், கூட்டணியில் யாருக்கு இடம் ? ஸ்டாலின் இன்று ஆலோசனை, காங்கிரஸ் பேரணி கோஷ்டிகள் புறக்கணிப்பு’ என்ற தலைப்புகளில் கட்டுக்கதைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இவை எதற்குமே எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
தி.மு.க தலைவர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தி அவர்களின் தமிழக சுற்றுப்பயணம் குறித்துத் தான் விவாதித்தார்கள். அந்த சுற்றுப்பயணத்தில் தி.மு. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை மகிழ்ச்சியுடன் தி.மு.க. தலைமை ஏற்றுக் கொண்டது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத தினமலர் கட்டுரையாளர் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார். இந்தக் கட்டுக்கதைகளைப் படிக்கிற எவரும் கட்டுரையாளருக்கு இருக்கிற காழ்ப்புணர்ச்சியை முற்றிலுமாக அறிந்து கொள்ளலாம். ஏதோவொரு வகையில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்றும், இந்த கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துகிற நோக்கத்திலும் நாள்தோறும் கட்டுரைகளை எழுதி, அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் புறக்கணித்து விடலாம் என்றுதான் இதுவரை நினைத்து வந்தோம்.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அவதூறு பரப்பும் வகையில் தினமலர் நாளேட்டில் வருகிற கட்டுரைகளுக்குப் பதில் சொல்லாமல் போனால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த விளக்கம் தேவைப்படுகிறது. நேற்றைய சந்திப்பைப் பொறுத்தவரைத் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறோம். அப்படியே தொகுதிப் பங்கீடு பேசுவது என்றால், அதற்கென சில நடைமுறைகள் உள்ளன. அதன்படி, இரு கட்சிகளிடையே குழுக்கள் அமைக்கப்படும். அந்த குழுக்கள் தொகுதிப் பங்கீடு குறித்துக் கலந்துரையாடி இறுதியாகப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இரு கட்சித் தலைமைகளின் ஒப்புதலோடு இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த அடிப்படை பாலபாடத்தைக் கூட அறியாத கட்டுரையாளர் உள்நோக்கத்துடன் கட்டுரை எழுதுவது எந்தவகை பத்திரிக்கை தர்மம் என்று தினமலர் சிந்திக்க வேண்டும்.
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது 2003 இல் உருவாக்கப்பட்டது. அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி 2004 பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் பேராதரவோடு 39 இடங்களிலும் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல, 2009 பொதுத் தேர்தலிலும் 28 இடங்களில் அக்கூட்டணி வெற்றியை ஈட்டியது. ஏறத்தாழ 17 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வருகிற இக்கூட்டணியில் 2014 மக்களவை தேர்தலைத் தவிர, அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிட்டிருக்கிறது.
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது ஒரு கொள்கை கூட்டணியாகும். இக்கூட்டணியின் பெயரே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. கொள்கையின் அடிப்படையில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியைத் தேர்தல் களத்தில் முறியடிப்பது தான் முக்கிய நோக்கமாகும். இக்கூட்டணியின் தமிழக தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இக்கட்சிகள் அடிக்கடி தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் கூடி தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கலந்து பேசி, தீர்மானம் நிறைவேற்றி, போராட்டங்களை அறிவித்துச் செயல்பட்டு வருகின்றன.
ஒரு கூட்டணி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவைகளை முழுமையாகப் பின்பற்றி கூட்டணி கட்சிகளுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் வழங்கி, அக்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஜனநாயக உணர்வோடு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகள் அனைத்திற்கும் தனித்தனியாகக் கொள்கைகள் உள்ளன. அனைத்து கொள்கைகளிலும் அவைகள் ஒருமித்த உணர்வோடு செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவையும், குறிப்பாக, தமிழகத்தையும் பாதித்து வருகிற பா.ஜ.க., – அ.தி.மு.க. ஆட்சிகளை அகற்ற வேண்டும் என்பதில் ஒருமித்த உடன்பாட்டுடன் இக்கூட்டணி செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கத்தில் இக்கூட்டணியினர் அடிக்கடி சந்திக்கின்றனர், விவாதிக்கின்றனர், முடிவெடுத்துச் செயல்படுகின்றனர். ஒருசில விஷயங்களில் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பு. அது ஒட்டுமொத்த கூட்டணியின் செயல்பாடுகளைப் பாதிப்பது கிடையாது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தம் பதிவான வாக்குகளில் 53 சதவிகிதத்தைப் பெற்று வரலாறு காணாத வெற்றியை இக்கூட்டணி பெற்றிருக்கிறது. மத்தியில் ஆட்சி செய்கிற நரேந்திர மோடிக்கு எதிராகவும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தங்களது கோபத்தை வாக்குகளாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 மட்டும். அதாவது, 1.01 சதவிகிதம். இந்த இடைவெளியில் தான் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது என்பதை எவரும் மறந்திட இயலாது. அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக நூற்றுக்கு இரண்டு பேர் எதிர் நிலை எடுத்தால் எடப்பாடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.
பீகார் தேர்தலையும், தமிழக தேர்தலையும் ஒப்பிட்டு தினமலர் நாளேட்டில் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. பீகார் தேர்தலைப் பொறுத்தவரைத் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 27 ஆயிரத்து 700. அதாவது 0.03 சதவிகிதம். இந்த குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் 15 தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தோல்வியாகக் கருதுகிற அதேநேரத்தில், பெரிய வெற்றியாக எவரும் கருத முடியாது. மகா கூட்டணி, வெற்றிக்கு மிக அருகாமையில் வந்து தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டுமே தவிர, காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட இடங்களையும், வெற்றி பெற்ற இடங்களையும் இணைத்து விமர்சனம் செய்வது உள்நோக்கம் கொண்டதாகும்.
எனவே, தினமலர் நாளேட்டில் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகப் பரப்பப்பட்டு வருகிற அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான கருத்துகள் அடங்கிய கட்டுரைகளைப் படித்து எவரும் குழப்பம் அடையத் தேவையில்லை. தினமலர் கட்டுரையாளருக்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது. அதைக் கட்டுரையாக எழுதி வருகிறார். இதனால், அவருக்கு ஏதாவது பிழைப்பு நடந்தால் அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், அக்கட்டுரைகளில் வெளிவருகிற கருத்துகள் குறித்து, காங்கிரஸ் கட்சியினர் கவலைப்படாமல் விழிப்புணர்வுடன் செயல்படுவது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.