”ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது…”
– ராகுல் காந்தி எம்.பி.
நேற்று மதுரை அடுத்த அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவைக் கண்டு ரசித்த பின் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள், இந்திய அளவில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடக்கும் பொய் பிரச்சாரங்களுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடியாகவே பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, ஜல்லிக்கட்டு மேற்கத்தியக் கலாச்சாரம் என்றும், இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் கொல்லப்படுவதற்கு வழி வகுக்கும் என்றும் பாஜகவின் மேனகா காந்தி கூறினார். அதோடு, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையும் அப்போது வரவேற்றார்.
மேனகா காந்தியின் கருத்து எவ்வளவு தவறானது என்பதை 5 ஆண்டுகள் கழித்து நேரில் வந்து பார்த்துவிட்டு வெளிப்படுத்தியிருக்கிறார் ராகுல் காந்தி.
”விவசாயிகளுக்குப் பயன்பட்டு வரும் பசுக்களையும், காளைகளையும் கொல்வதா?” என அப்போது மேனகா காந்தி கொதித்து எழுந்தார். அப்போதெல்லாம் பாஜகவும், பிரதமர் மோடியும் அமைதியாகவே இருந்தார்கள்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதால், பீளமேடு மற்றும் அலங்காநல்லூரில் கடைகள் அடைக்கப்பட்டன. வீடுகளின் மீது கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தமிழகமே பதற்றமாக இருந்தது.
அப்போது மத்திய அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த மேனகா காந்தி தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளைக் கூறிக் கொண்டே இருந்தார். இது அவருடைய கருத்து மட்டுமல்ல, பாஜகவின் குரலாகவும் இருந்தது.
”பொங்கல் அன்று செடிகளையும் மரங்களையும் கும்பிட வேண்டும். ஆனால், தமிழகத்தில் நடக்கும் அட்டூழியம் தவறு” என்று வார்த்தைகளைக் கடுமையாக உதிர்த்தார். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருந்தன அவரது கடுஞ்சொற்கள்.
பொறுத்தது போதும், பொங்கி எழு என ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தமிழக மாணவர்களும் இளைஞர்களும் கொதித்து எழுந்தனர். மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரவு, பகலாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் காவல் துறையை ஏவிவிட்டு அந்த இளைஞர்கள் மீது நடத்திய தாக்குதலை மறக்க முடியுமா?
அப்போதும் அசையாமல் இளைஞர்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தபோது தான், அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் ஆட்டம் கண்டன. இப்படி ஒரு போராட்டத்தை உலகமே கண்டதில்லை என்ற அளவுக்கு, அமைதியாக மட்டுமின்றி கண்ணியமாகவும் நடத்திக் காட்டினர் இளைஞர்கள். அதன்பின்னர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு பயங்கரமான விளையாட்டு என்றும், வாக்குகளைப் பெறுவதற்காக இது போன்ற விளையாட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று ஆவேசமாகப் பேசிய மேனகா, தடை நீக்கத்துக்குப் பிறகு மவுனமானார். இன்று வரை அவரது மவுனம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டு. தமிழர்கள் வீரம் செறிந்தவர்கள் என்ற கருத்தை அழிப்பதற்காகவே, ஜல்லிக்கட்டு எதிராக பாஜக அரசு தீவிரமாக இருந்தது. அதைத் தான் ராகுல் காந்தி அவனியாபுரத்தில் பேசும்போது குறிப்பிட்டார். ”தமிழ் உணர்வையும், கலாச்சாரத்தையும் நசுக்க முயன்றார்கள். அப்படி முயன்றால் அது இந்திய நாட்டுக்குத் தான் கேடு விளைவிக்கும்” என்று எச்சரித்தார்.
அவரது வார்த்தைகள் உதட்டிலிருந்து வந்தவை அல்ல… இதயத்திலிருந்து வந்தவை. தமிழர்கள் மற்றும் தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க கடந்த சில வருடங்களாக பாஜக அரசு செய்து வரும் திரை மறைவு மற்றும் நேரடி சதிகளை ராகுல் காந்தி அம்பலப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
மாடுகளைக் கொண்டாடுவதே தமிழர்கள் மட்டும் தான். உழவின் போது, தங்களுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றிக் கடன் செலுத்தவே, மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். மாடுகளை விலங்காக மட்டும் தமிழன் ஒருபோதும் பார்த்ததில்லை. தன் போட்டியாளனாக, நண்பனாக, மகளாக, மகனாகவே பார்த்திருக்கிறான்.
அந்த வகையில், ஜல்லிக்கட்டை ஓரு வன்முறை விளையாட்டாக பார்ப்பவர்களின் கண்களின் மீது தான் தவறு என்பதை இந்தியாவுக்கே உரக்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் ராகுல் காந்தி.
ஆனால், இன்றைக்கு ஜல்லிக்கட்டை தாங்கள் தான் மீண்டும் கொண்டு வந்ததாக, கொஞ்சம்கூட கூச்சமின்றி, வெட்கமின்றி அதிமுகவும், பாஜகவும் கூறுகிறார்கள். கேட்டவுடன் கொடுத்தது போல் ஏமாற்று வார்த்தைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் உணர்வு மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைத்தால், நான் துணை நிற்பேன் என்று ராகுல் காந்தியின் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. இரட்டை வேடம் போடும் அதிமுக மற்றும் பாஜகவினரின் முகத்திரையைக் கிழித்துவிட்டுப் போயிருக்கிறார் ராகுல் காந்தி.
தமிழர்களையும் காந்தி குடும்பத்தையும் யாராலும் பிரிக்கமுடியாது. வாக்குகளுக்காக இணைந்த உறவு அல்ல அது. உணர்வுகளால் இணைந்த உறவு. பண்டிதர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி எனத் தொடர்ந்து கொண்டே போகிறது…உறவு.
அதனால் தான் தமிழருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் ராகுல் காந்தி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுபவர்களால் தொடர்ந்து அநீதியைச் சந்தித்து வரும் தமிழக மக்களுக்கு அவரது பேச்சு நிம்மதியையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. அதற்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானம் அடித்தளம் போட்டுக் கொடுத்திருக்கிறது.