தமிழகத்துக்குள் காலூன்ற அனைத்து வழிகளையும் கையாண்டு மண்ணைக் கவ்விய நிலையில், தற்போது வழக்கமான பாணியில் மதத்தை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. அதன் அச்சாரமாக அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் வழக்கம்போல் விஷத்தைக் கக்கியுள்ளார்.
ஹெச்.ராஜா தமது ட்விட்டர் பதிவில், ”கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த அருண் பிரகாஷை, சேத் என்பவர் உட்பட 10 முஸ்லிம் மத வெறியர்கள் படுகொலை செய்தததை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அவரோடு சேர்த்து தாக்கப்பட்ட யோகேஷ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ராஜாவின் ட்வீட்டைத் தொடர்ந்து அருண் புடுர் என்பவர், அருண்குமார் உடல் மருத்துவமனைக்குள் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ‘அபாயத்தில் இந்துக்கள்’ என்ற ஹேஸ்டேக்குடன் அவர் வெளியிட்ட பதிவில், ” அமைதியாக விநாயகர் ஊர்லவத்தில் சென்று கொண்டிருந்த அருண் குமாரை பட்டப்பகலில் கொலை செய்துள்ளனர். எந்த ஓர் ஊடகமோ அல்லது திராவிடக் கட்சிகளோ இதனை கண்டிக்கவில்லை. தமிழ்நாடு அடுத்த கேரளாவாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ராமாநாதபுரம் காவல் துறையினர் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இதனை மறுத்தனர். ”முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாகவும், இதில் மதத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”காவல் துறை பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். வதந்திகளையும் பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கிடையே, வலதுசாரிகளின் ஊடகமான ஆர்கனைஷரில் வகுப்புவாத பிரச்சாரம் செய்யப்பட்டும், இந்த பொய் கதை சொல்லப்பட்டும் வருகிறது. அந்த செய்தியில், ”இந்துக்களுக்கு எதிரான மற்றொரு தாக்குதல் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஜிகாத் சக்திகளால் கணேச பக்தர் கொல்லப்பட்டுள்ளார். அருண்குமார் என்ற அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதன் மூலம், தமிழகம் முழுவதும் ஜிகாதி பயங்கரவாதம் பரவியுள்ளதைக் காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக நடந்த கொலைக்கு மத சாயம் பூசி, வகுப்புவாத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டவர்கள் மீது காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இது குறித்து மவுனம் சாதிக்கிறார்.
மத ரீதியாக, சாதீய ரீதியாக தமிழகத்தைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் பலன் அடையலாம் என்று பா.ஜ.க. நினைத்தால், அது, பாட்டி வடை சுட்ட கதைபோல் தான் முடியும்.