தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு.தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில் 22.11.2020 ஞாயிறு அன்று கோவை, கருமத்தம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு மற்றும் மாபெரும் ஏர் கலப்பை பேரணியின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் – 1 : பீகார் தேர்தல் முடிவுகளும், உண்மை நிலையும்
பீகார் சட்டமன்ற தேர்தலில் 15 ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அகற்ற ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மகா கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் அசாவுதீன் ஒவைசி, லோக் ஜன சக்தி போன்ற சிறு, சிறு கட்சிகளை தனித்து போட்டியிட வைத்ததின் காரணமாக வாக்குகள் சிதறுகிற நிலை ஏற்பட்டது. ஆனாலும், 125 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வாக்குகள் 37.26 சதவிகிதம். 110 இடங்களில் வெற்றி பெற்ற மகா கூட்டணி பெற்ற வாக்குகள் 37.23 சதவிகிதம். இரு கூட்;டணிகளுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 0.03 சதவிகிதம் தான். அதாவது 12 ஆயிரத்து 270 வாக்குகள் வித்தியாசத்தில் தான் 15 தொகுதிகளிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியை பீகார் தேர்தல் களத்தில் எவரும் வீழ்த்தவே முடியாது என்கிற போலி பிம்பத்தை பீகார் வாக்காளர்கள் தகர்த்து இருக்கிறார்கள் என்ற உண்மையை எவரும் மறுக்கவோ, மறைக்க முடியாது. இது பா.ஜ.க. வுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவும், ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வியாகவும் சில ஊடகங்களில் விவாதிப்பதும், உள்நோக்கத்தோடு கட்டுரைகள் எழுதுவதும் மிகுந்த வியப்பையையும், வேதனையையும் தருகிறது.
பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆரூடம் கூற முற்படுவது மிகுந்த நகைச்சுவைக்குரியது. 2019 இல் பீகார் மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. இதன்படி, 243 சட்டமன்ற தொகுதிகளில் 223 இடங்களில் பா.ஜ.க. அதிக வாக்குகளை பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், 2020 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்ற மொத்த இடங்களே 125 தான்.
2019 மக்களவை தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்;போக்குக் கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 இல் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க. வுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிற தமிழகத்தை பீகார் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாக இக்கூட்டம் கருதுகிறது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.1 சதவிகிதம், அதாவது 4.41 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அ.தி.மு.க. பெற்றதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அ.தி.மு.க. ஆட்சியின் அராஜக ஊழல் ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையிலும் மே 2021 இல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நிச்சயம் அமையப் போகிறது என்ற நம்பிக்கையை இக்கூட்டம் வெளிப்படுத்துகிறது.
தீர்மானம் – 2: மத்திய பா.ஜ.க. அரசே ! விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெறு !!
விவசாயிகளோ, விவசாயச் சங்கங்களோ எந்த கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில், வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம், விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையும் பறிக்கப்பட்டிருக்கிறது. விளைபொருட்களை விற்று வந்த விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிற வகையில் தொடர் போராட்டங்களை தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இதன்படி, வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏர் கலப்பை பேரணி நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக காங்கிரசின் முன்னணி தலைவர்களின் பங்களிப்புடன் ஏர் கலப்பை பேரணியை வெற்றிகரமாக நடத்தி, பா.ஜ.க. அரசுக்கு எதிராக, விவசாயிகளின் உரிமைக் குரலை எழுப்ப வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் தமிழக காங்கிரஸ் முன்னணி பங்கு வகித்து வருவதை உறுதிபடுத்துகிற வகையில் ஏர் கலப்பை பேரணியை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினருக்கும் இருக்கிறது. இந்த பேரணியில் பங்கேற்க அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைக்க வேண்டுமென மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தமிழக காங்கிரஸ் நண்பர்களே, விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசு ஏவிவிட்டிருக்கும் தாக்குதலை தடுத்து நிறுத்துகிற வகையில் ஏர் கலப்பை பேரணி வெற்றிகரமாக நடைபெற வேண்டும். ‘வாருங்கள் கைகோர்ப்போம். விவசாயிகளை பாதுகாப்போம்’ என்கிற எழுச்சிக் குரல் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஒலிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 3 : விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய கோரிக்கை
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 4 கோடி விவசாயிகளின் கடன் தொகையான ரூபாய் 60,000 கோடியை 2008 இல் ரத்து செய்தது. இதன்மூலம் விவசாயிகளின் கடன் சுமையை குறைத்தது. ஆனால், அதற்கு பிறகு 2014 இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்கிற வகையில் இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேல் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கடன் சுமையின் காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். விவசாயிகளின் கடனை ரத்து செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முன்வரவில்லை. ஆனால், பிரதமர் மோடி தமது 15 பணக்கார நண்பர்களின் வாராக் கடன் தொகையான ரூபாய் 3.50 லட்சம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறார். அதேசமயம், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக இல்லை.
அதேபோல, நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை 2019-20 இல் மட்டும் ரூபாய் 17 ஆயிரத்து134 கோடி. இதில், தமிழகத்தில் ஏறத்தாழ ரூபாய் 1500 கோடி நிலுவையில் இருக்கிறது. சர்க்கரை கட்டுப்பாட்டு சட்டம் 1966-ன்படி கரும்பு விநியோகம் செய்த 14 நாட்களுக்குள் அதற்குரிய தொகையை கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால், 15 சதவிகித வட்டி வழங்க வேண்டும். ஆனால், நிலுவைத் தொகையையோ, அதற்கான வட்டியையோ கரும்பு ஆலைகள் செலுத்துவது இல்லை. இதுகுறித்து, மத்திய – மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.
எனவே, விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையிலும், கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகையை வழங்கவும் மத்திய – மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 4 : ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவோம்
தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழக நலன்களை பாதிக்கிற வகையில் நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, இந்தி திணிப்பு, உதய் மின் திட்டம், ரயில்வே, தபால்துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டம், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு, கல்விக் கடன் வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் கெடுபிடிகள், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, சிவகாசி பட்டாசுக்கு தடை என பல நிலைகளில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி ஊழல் செய்வதையே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரப்பூர்வமாக கூறப்பட்டு வருகின்றன. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் விசாரணைக்கு பல அமைச்சர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூபாய் 3500 கோடி மதிப்புள்ள பணிகளுக்கான ஒப்பந்தங்களை தமது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் வழங்கியதில் முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்ககம் நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கூறிய குற்றச்சாட்டுக்களில் போதிய ஆதாரம் இருப்பதாக கருதிய சென்னை உயர்நீதிமன்றம், இதை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டுமென்று ஆணையிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 2018 இல் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த தடை உத்தரவை நீக்குவதற்கு மத்திய புலனாய்வுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எடப்பாடி அரசை பா.ஜ.க. அரசு பாதுகாத்து வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பலகோடி ரூபாய் குட்கா ஊழல், ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கு ரூபாய் 89 கோடியை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் விநியோகம் செய்ததற்கான ஆதாரத்தை வருமானவரித்துறை கண்டுபிடித்து தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியது. ஆனால், இதற்கான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, ஒப்பந்தங்கள் வழங்கியதில் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர்தான் நாகராஜன் செய்யாதுரை. இவர் வீட்டிலும், வாகனங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் ரூபாய் 230 கோடி சிக்கியது. இவரது நிறுவனத்தில்தான் முதலமைச்சர் எடப்பாடியின் நெருங்கிய உறவினரான சுப்பிரமணியன் பழனிசாமி என்பவர் இயக்குனராக இருக்கிறார். இந்நிறுவனங்களுக்குத் தான் அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆதாரம் இருப்பதாகக் கருதிய சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணம்மாள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகளை ஒழிக்க வேண்டுமென்றால், அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கு தமிழக காங்கிரஸ் தீவிரமான போராட்ட வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. வருகிற மே 2021 இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கண் துஞ்சாமல், அயராது தீவிரமாக பணியாற்ற வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 5 : மத்திய அரசின் திட்டங்களில் ஊழல்
மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் ஏறத்தாழ 6 லட்சம் போலி பயனாளிகளை சேர்த்து ரூபாய் 110 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. வீடு மற்றும் கழிவறை கட்டும் திட்டத்தில் போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய மோசடியும் நடந்துள்ளது. இன்டர்நெட் கேபிள் அமைக்கும் பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் ரூபாய் 2000 கோடி ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, தமிழக அரசின் டெண்டர் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொலை தொடர்புத்துறை மற்றும் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் அனைத்து கொள்முதல்களையும் விசாரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், ரூபாய் 300 கோடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, ஜன்தன் திட்டத்தின் மூலம் கடன் வழங்குவதில் ஆளும் பா.ஜ.க.வினரின் தலையீட்டின் பேரில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய பா.ஜ.க. அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல்கள், முறைகேடுகள் தொடர்ந்து அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து பெருகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. ஆட்சியினர் துணையாக செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து தீவிர பரப்புரை செய்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சியினரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 6 : தேயிலை விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்க கோரிக்கை
கடந்த 25 ஆண்டுகளாக தேயிலை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு குறைவாகவே சந்தையில் தேயிலையை விற்க வேண்டிய அவல நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டியிருக்கிறது. இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சை தேயிலையை கொள்முதல் செய்ய வேண்டுமென்கிற கோரிக்கையை நிறைவேற்றுதில், மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால், தேயிலை சாகுபடி செய்கிற விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் இருக்கிறார்கள். தேயிலை விவசாயம் தான் அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. எனவே, பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு கிலோவுக்கு ரூபாய் 30 வழங்குவதோடு, டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இக்கூட்டம் வலியுத்தி கேட்டுக் கொள்கிறது.