கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொலைத் தொடர்பு மற்றும் காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவின் அனைத்து கொள்முதல்களையும் விசாரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களைக் கேட்டு,கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குனரகம் கடிதம் அனுப்பியது.
டிஜிபி அலுவலகத்தில் தொலைத் தொடர்பு மற்றும் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் அன்புச்செழியன் மீது விசாரணையைத் தொடங்கிய 9 மாதங்களுக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி அன்புச்செழியனின் வீடு, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கொள்முதலில் முறைகேடு செய்து கிடைத்த பணம் அன்புச்செழியனின் மனைவியின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், இந்த வழக்கில் இது வலுவான ஆதாரம் என்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோதும், இயக்குனரகத்தின் இணையத்தில் இன்றுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை. தற்போது எல்காட் நிறுவனத்தில் அன்புச்செழியன் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட பணிகள் குறித்த விவரத்தை டிஜிபி அலுவலகத்திடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் கேட்டுள்ளது. காவல்துறை நவீனமயமாக்கல் தொடர்பாக அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் பணியாற்றிய அதிகாரிகளின் பட்டியலையும் இயக்குனரகம் கேட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட பணியின் பெயர், கோப்பு எண், செலவான மொத்தத் தொகை, பணி செயல்படுத்தப்பட்ட ஆண்டு, நிறுவனத்தின் பெயர் மற்றும் விவரம், பணியை மேற்கொண்ட தனிநபர் அல்லது நிறுவனத்தின் பெயர், டெண்டர் விடுக்கப்பட்ட விவரம், டெண்டரை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் விவரம் மற்றும் டெண்டர் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளின் விவரத்தையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் கேட்டுள்ளது.
இந்த வழக்கில் அன்புச்செழியனைத் தவிர, 13 அதிகாரிகள் மற்றும் 2 தனியார் நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2016-18 ஆம் ஆண்டுகளில் செல்பேசிகள்,சிசிடிவி கேமிராக்கள், டேப்ளட், கணினிகள், ஜிபிஎஸ் மற்றும் பேட்டரி உதிரிப்பாகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இது குறித்த விசாரிக்குமாறு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்துக்கு அப்போதைய உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் தெரிவித்தது. இதனையடுத்து, ரூ.300 கோடி வரையிலான டெண்டர்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் முழுமையாக ஆய்வு செய்தது.
டெண்டர் விடுவது குறித்து முடிவு செய்யும் ஆய்வுக் குழுவில் அப்போது அன்புச் செழியனும் இடம்பெற்றிருந்தார். அனைத்து உபகரணங்களும் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கே டெண்டர் விடப்பட்டிருப்பது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரக விசாரணையில் தெரியவந்தது. மூத்த அதிகாரிகள் தெரிவித்த ஆட்சேபத்தையும் மீறி இந்த டெண்டர்களை அன்புச்செழியன் கொடுத்திருப்பதும் ஆவணங்களிலிருந்து தெரியவந்துள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.