கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 1924 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் தேதி பிறந்தவர் எல். இளையபெருமாள். பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அவர், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் 20 வருடங்கள் பணியாற்றியவர்.
தனது பள்ளிப் பருவத்திலேயே பட்டியலின மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற வெறி, அவருள் கொழுந்துவிட்டு எரிந்தது. தான் படித்த பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைத்திருந்த பானையை தினமும் உடைத்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சிக்கினார். அப்போதும், தன் செய்கையின் நியாயத்தை உரக்கப் பேச அவர் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் அந்த பள்ளியில் இரட்டைக்குவளை முறை ஒழிக்கப்பட்டது.
அன்னை இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக எல். இளையபெருமாள் 1979இல் நியமிக்கப்பட்டர். காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில், கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 1989 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற இளையபெருமாள், மீண்டும் 2003 ஆம் ஆண்டு சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம், 1976 இல் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த சட்டம் சரியாக செயல்படாததால், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவராக இளையபெருமாளை நாடாளுமன்றம் நியமித்தது. இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில், 1989 ஆம் ஆண்டு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் 1995 ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
தந்தை பெரியார், காமராசர், கக்கன், கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர் இளையபெருமாள். தோழர் ஜீவாவை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்தவர். பட்டியலின மக்களுக்காகவே அரும்பாடுபட்ட அவர், தென்னாட்டு அம்பேத்கார் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு திமுக அரசு இளைய பெருமாளுக்கு அம்பேத்கார் விருது வழங்கி, அவரது சமூக உழைப்பை கவுரவித்தது.
தலைவர் இளையபெருமாளின் அன்பைப் பெற்றவர் தலைவர் கே.எஸ். அழகிரி!
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய மறைந்த எல். இளையபெருமாள் அவர்களுடன் தமது இளமைப் பருவம் முதல் நெருங்கிய தொடர்பு கொண்டவர் இன்றைய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் 1969 இல் காங்கிரசில் தம்மை இணைத்துக் கொண்ட கே.எஸ். அழகிரி அவர்களுக்கு பிற்காலத்தில் அரசியலில் பெரிதும் துணை நின்றவர் எல். இளையபெருமாள்.
கடலூர் மாவட்ட அரசியலில் தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக இளையபெருமாள் குரல் கொடுத்தபோது, அவரோடு இணைந்து களப் பணியாற்றிவர் கே.எஸ். அழகிரி. முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக கே.எஸ். அழகிரி விளங்கியதால் இவர் மீது அளவற்ற பற்றும், நம்பிக்கையும் கொண்டவராக இளையபெருமாள் விளங்கினார்.
1979 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக எல். இளையபெருமாள் பொறுப்பேற்ற போது, அன்று கே.எஸ். அழகிரி அவர்களை செயற்குழு உறுப்பினராக நியமித்து அரசியல் அங்கீகாரம் வழங்கினார். அதன்மூலம் அவர் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் அவரோடு இணைந்து மிகச் சிறப்பான முறையில் கட்சிப்பணிகளை ஆற்றியவர் கே.எஸ். அழகிரி. 1980 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பெற்றி பெறுவதற்கு தலைவர் இளையபெருமாள் அவர்களோடு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் தலைவர் கே.எஸ். அழகிரி. தலைவர் கே.எஸ். அழகிரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவராக இளையபெருமாள் விளங்கினார். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி அவர்கள் பொறுப்பு வகிப்பதை பார்க்கிற வாய்ப்பு மறைந்த எல். இளையபெருமாள் அவர்களுக்கு கிட்டியிருந்தால் அவரை விட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. அந்தளவிற்கு மறைந்த தலைவர் இளையபெருமாளுக்கும், இன்றைய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களுக்கும் அற்புதமான அரசியல் உறவும், நல்லிணக்கமும் இருந்ததை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிகவும் பொறுத்தமாகும்.
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி மறைந்த இளையபெருமாளின் சேவை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் மறைந்தாலும், அவரால் பயனடைந்த அடுத்த தலைமுறை என்றென்றும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவரது நினைவுநாளில் நாமும் அன்னாரை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த நினைவுநாள் அஞ்சலி!
தமிழகத்தின் மதிப்புமிகு தலைவர் மறைந்த எல்.இளையபெருமாள் அவர்களின் 15 வது நினைவுநாள் (செப்டம்பர் 8). பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். இருமுறை மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். சுவாமி சகஜானந்தாவின் சீடரான இவர் அவரது மறைவிற்கு பிறகு நந்தனார் கல்வி கழகத்தை தொடர்ந்து நடத்தியவர். 1979 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர். தமது இறுதி காலம் வரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அற்புதமான தலைவர். தனிப்பட்ட முறையில் என் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரது நினைவுநாளில் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர்
எல். இளையபெருமாள் சிலை திறப்பு விழா! (10 மார்ச், 2012)
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில், உடையார்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் முழுவுருவ வெண்கலச் சிலை திறப்பு விழா மார்ச் 10, 2012 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது அன்றைய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், கடலூர் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ். அழகிரி, முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர். எஸ். வெங்கடேசன், பி.பி. கலியபெருமாள், டாக்டர் ப. வள்ளல்பெருமான் மற்றும் டாக்டர் மணிரத்தினம், கே.வி.எம்.எஸ்.சரவணகுமரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சிறப்பித்தனர்.
தென்னாற்காடு மாவட்டமே காங்கிரசின் கோட்டையாகவும், தலித் மக்களின் பேராதரவைப் பெற்ற இயக்கமாகவும் காங்கிரஸ் இயக்கம் இருப்பதற்கு அடித்தளம் அமைத்தவர் எல். இளையபெருமாள். எளிமை, நேர்மை, துணிவு ஆகியவற்றின் மறுவடிவமாக இருந்த தலித் மக்களின் மேம்பாட்டிற்காக ஆரவாரமில்லாமல் அமைதியாக, ஆக்கப்பூர்வமான வழிகளில் உழைத்து அந்த சமூகத்தை உயர்த்திய பெருமகனார் ஐயா இளையபெருமாள்.
மறைந்த தலைவர் இளைய பெருமாள் அவர்களுக்கு நினைவஞ்சலி.மிகச்சிறப்பாக செயதி வெளியிட்ட “தேசிய முரசுக்கு” நன்றி.