வானொலி மூலம் 27.9.2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, ‘பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து விவசாயிகளை விடுவித்திருக்கிறோம். தங்கள் விளை பொருட்களை சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்கிற உரிமையை வழங்கியிருக்கிறோம். எங்கு அதிக விலை கிடைக்குமோ, அங்கு சென்று விற்க முடியும் என்பதால் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். விவசாயிகளை விவசாய சந்தை மற்றும் மண்டியின் பிடியிலிருந்து விடுவித்திருக்கிறோம். இதன்மூலம் இடைத்தரகர்களை ஒழித்திருக்கிறோம். இதுவரை விவசாயிகளின் விளை பொருட்களின் விலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முடிவு செய்திருக்கின்றன. இனி, பொது சந்தையில் முடிவு செய்யப்படும். இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்’ என்று பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கும், விவசாயிகளின் உண்மை நிலைக்கும், கள நிலவரத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா ? என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். வேளாண் மசோதாக்கள் ஏன் கொண்டு வரப்பட்டது ? எதற்காக கொண்டு வரப்பட்டது ? இது விவசாயிகளுக்கு உண்மையிலேயே பயன் தரக்கூடியதா ? என்பது குறித்து விவசாயிகள் புரிந்து கொள்கிற வகையில் கேள்வி – பதில் பாணியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் குறித்து விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதை அனைவரும் படித்து மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதப் போக்கை புரிந்து கொள்வதோடு, மற்றவர்களும் புரிந்து கொள்கிற வகையில் பல்வேறு வகைகளில் பரப்புரை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
வயிற்றில் அடிக்கும் விவசாய சட்டங்கள்: அம்பலத்துக்கு வரும் ‘மோடி மஸ்தான்’ வேலைகள்
விவசாயிகளுக்கு எதிரான 3 விவசாய சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றிவிட்டு, அதற்கான விளக்கங்களை மோடி அரசு தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தராமல், வெறும் வாயில் அவலை மெல்லுவது போல், வாய்மொழியாக உறுதி அளித்துக் கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு.
”மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு இவ்வளவு எதிர்ப்பு வர காரணம் என்ன?”
‘ஒரே நாடு ஒரே சந்தை’ என்று மாற்றவும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும் இந்த மசோதாக்கள் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. சொல்வது மசோதாவில் இல்லை. விவசாயிகள் தங்கள் விருப்பப்படி விளைபொருட்களை விற்கலாம் என்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டு, தனியார் கொள்ளைக்கு அங்கீகாரம் கொடுப்பதாகத் தான் இந்த மசோதாக்கள் உள்ளன.
”விவசாயிகளின் நியாயமான அச்சத்தை மத்திய அரசு புரிந்து கொண்டதா?”
விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்கவே மோடி அரசு தயாராக இல்லை. பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தீவிரமாக எதிர்ப்பதற்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கிவிடுவார்கள் என்ற அச்சம் தான். தனியாரிடம் நேரடி விற்பனையில் ஈடுபடவும் பஞ்சாப் விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அதிலும், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது தான் அவர்களது முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
”இதற்கு முன்பும் தனியார் வர்த்தகர்கள் இருந்தார்களே?”
இந்த தனியார் வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பன்னெடுங்காலமாக ஒரு பிணைப்பு இருந்தது. பயிர் சாகுபடி செய்யும் போது விவசாயிகளுக்கு பணம் கொடுத்து உதவுவார்கள். அறுவடை செய்தபின் விவசாயிகளும் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். ”விவசாயத்துக்குள் வரும் கார்பரேட் நிறுவனங்கள் இதுபோன்ற உதவியை செய்யுமா?” என்று விவசாயிகள் கேட்பதில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.
”விவசாயச் சட்டங்கள் மீதான சந்தேகங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றனவே?”
3 விவசாயச் சட்டங்களையும் அவசரச் சட்டங்கள் மூலம் கொண்டு வந்ததுதான் இவ்வளவு சந்தேகங்களுக்கும் வழிவகுத்தது. உணவு தானியங்கள் விற்பனை தனியார் வசம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், விவசாயிகளுக்கான பாதுகாப்பு பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. இந்தியாவில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். அறுவடை செய்யும் பயிர்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு அவர்களுக்கு பொருளாதார வசதி இல்லை. விவசாயிகள் சுதந்திரமாக விளைபொருட்களை விற்கலாம் என்று சொல்வது ஏமாற்று வேலை. தனியார் நிறுவனங்கள் விவசாயிகளின் விளைபொருட்களை சுதந்திரமாக விற்கத்தான் இந்த சட்டங்கள் வழிவகுக்கின்றன.
”பஞ்சாப் மாநிலம் லூதியானா விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்த 3 விவசாய சட்டங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனரே?”
இந்தியாவில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயிகள் 86 சதவீதம் பேர். இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்கள் 67 சதவீதம் பேர். இவர்கள் தான் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களால் வெளியூர்களுக்கு சென்று எப்படி விற்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சிறு விவசாயிகள் புதிய சந்தையை பயன்படுத்திக் கொள்ள முடியாதபோது, புதிய சந்தைகளை கொண்டு வரவேண்டிய அவசியம் என்னவென்றும் அவர்கள் கேட்கிறார்கள். படிப்படியாக அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டு தனியாரிடம் ஒப்படைத்தால், விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை அடிமாட்டு விலைக்குத் தான் வாங்குவார்கள் என்பதையும் லூதியானா விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
”பிரதமர் மோடி சொல்வதுபோல், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடருமா?”
குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் நெல் கொள்முதலை அகற்றுவதற்கான முன்னோடித் திட்டம் இது என்று விவசாயிகள் கருதுகின்றனர். தனியார் சந்தை சக்திகளின் கைகளில் இதை விட்டுவிட்டால், 15 முதல் 20 சதவீதம் விலை குறையக்கூடும் என்கிற அச்சமும் இருக்கிறது. தற்போது மக்காச் சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 1,850. ஆனால், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் 700 ரூபாய்தான். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மசோதாவில் குறிப்பிடாமல், பிரதமர் அளிக்கும் உறுதியை எப்படி நம்பமுடியும்?
”இந்த சட்டங்களால் மண்டி முறை தொடருமா?”
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஏற்கனவே வியாபாரிகள்தான் கட்டுப்படுத்தி வருகிறார்கள். சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை நிர்ணயிப்பார்கள். தற்போது, புதிய விவசாய சட்டங்கள் மூலம் அவர்களுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி மற்றும் சந்தைக் குழுக்களால் மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைத்து வந்தது. இனி இந்த வருவாய் நேரடியாக தனியார் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் கல்லாவை நிரப்பும். வெளியே சந்தைகளை திறப்பதன் நோக்கமே, விவசாய உற்பத்தி மற்றும் சந்தைக் குழுக்களை முற்றிலும் அழிப்பதற்காகத்தான்.
”விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை யாருக்கும், எங்கும் விற்கலாம் என்று சொல்லப்படுகிறதே?”
வழக்கமாகவே ஒரு சில விளைபொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அதனால் இடைத்தரகர்கள்தான் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர். இந்த நிலை இன்னும் அப்படியே தொடரும்.
”கார்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் விவசாயிகள் முன்-நிர்ணய விலையைப் பெற முடியும் என்றும், எந்த நிலையிலும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற முடியும் என்கிறார்களோ?”
பாஜக ஆட்சியில் கார்பரேட்கள் செலுத்தி வரும் செல்வாக்கைப் பார்த்து விவசாயிகள் மிகவும் பயப்படுகிறார்கள். ஒப்பந்தத்தில் பிரச்சினை வரும்போது, கார்ப்பரேட்களின் வழக்குரைஞர்களுக்கு இணையாக விவசாயிகளால் வழக்குரைஞர்களை வைத்து நீதிமன்றங்களில் வாதிட முடியாது. ஏற்கெனவே ஒப்பந்தப் பண்ணையம் என்கிற வகையில் சர்க்கரை ஆலைகளுடன் சிக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டுவிட்டதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.
”கார்பரேட்களுடன் இணைந்து பணியாற்றும்போது, நிச்சய லாபங்களுடன் தொழில்நுட்பம் மற்றும் உபகரணத்தின் பயன்களையும் விவசாயிகள் பெறுவார்கள் என்று மோடி அரசு கூறுகிறதே?”
ஏற்கெனவே சிறு மற்றும் குறு விவசாயிகள்கூட கோழிப் பண்ணைகளை அமைப்பதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். சில பணப் பயிர்களுக்கு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், நவீன சில்லறை, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால், விவசாயிகள் பெரு வணிகர்களுடனான ஒப்பந்தங்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை.
”விவசாயச் சட்டங்கள் குறித்து எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறாரே?”
பாஜக கூட்டணி கட்சிகளும் தான் எதிர்க்கின்றன. அது குறித்து அவர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை. விவசாய சட்டங்களில் இருக்கும் பாதகங்களை எதிர்கட்சிகள் பட்டியலிடும்போது, அதனை ஆதாரப்பூர்வமாக மறுக்க பிரதமரால் முடியவில்லை. விவசாயிகளுக்கு இந்த சட்டங்களால் பயன் இருப்பதையும் அவரால் ஆணித்தரமாக பட்டியலிட முடியவில்லை. போகிற போக்கில் எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட்டுவிட்டு, பிரச்சினையிலிருந்து தப்பிப்பது பிரதமர் மோடிக்கு புதிதல்ல.
”இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு சுதந்திரம் அளிப்பதுடன், அவர்களுக்கு பாதுகாப்பும் அளிப்பதாக பிரதமர் திரும்பத் திரும்ப கூறுகிறாரே?”
மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டங்களை எதிர்த்து, பா.ஜ.க-வின் கூட்டணி அமைச்சரே பதவி விலகியிருக்கிறார் என்றால், இது எவ்வளவு மோசமான சட்டம் என்பது தெரிகிறது. இந்தச் சட்டங்களை விவசாயிகள் ஒருபோதும் ஏற்கவில்லை. விவசாயிகளைத் திரட்டி மிகப் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. விவசாய சட்டங்கள் பாதுகாப்பு இல்லாததைத் தானே இந்த எதிர்ப்புகள் காட்டுகின்றன.
”பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்தால் விவசாயிகளுக்கு பலன் ஏற்படும் என்ற வாதம் சரியா?”
இந்திய விவசாயத்தை முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் குழிதோண்டிப் புதைப்பதற்குத்தான் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் என்பது பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை, சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
”புதிய விவசாய சட்டங்கள் உணவுப் பொருட்கள் பதுக்கலைத் தடுக்கும் என்கிறார்களே?”
இதுவரை, உணவுப் பொருட்களைப் பதுக்கிவைக்க முடியாத நிலை இருந்தது. இந்தப் புதிய சட்டம் மூலம், எவ்வளவு உணவுப் பொருட்களை வேண்டுமானாலும் பதுக்கி வைக்கலாம். எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் பதுக்கி வைக்கலாம். அதைப் பயன்படுத்தி, செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, எவ்வளவு வேண்டுமானாலும் விலையை உயர்த்தி விற்பார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால், ஏழை, எளிய மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்படும்.
”ஒப்பந்த சாகுபடி என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது சரியா?”
இது மிகவும் ஆபத்தானது. விவசாய விளைபொருட்களின் விலையை கார்பரேட் நிறுவனங்களே முன்கூட்டியே தீர்மானிப்பார்கள். விலையை நிர்ணயிக்கும் நிறுவனங்கள், விளைபொருட்களின் தரம் குறித்து ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிப்பார்கள். அந்த நிபந்தனைகளின்படி விளைபொருட்கள் இல்லை’ என்று சொல்லி, தீர்மானிக்கப்பட்ட விலையைத் தர மறுக்கும் நிலைதான் உருவாகும்.
மேலும், இந்திய மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, ஏற்றுமதிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வது என்ற நிலை ஏற்படும். உலகச் சந்தையில் எந்தப் பொருளுக்கு அதிகமான ‘கிராக்கி’ இருக்கிறதோ, அந்தப் பொருளை உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளுக்கு அழுத்தத்தை கொடுப்பார்கள். இப்படியாக, இந்திய விவசாயம் முழுவதும் கார்பரேட் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படும். நிலம் மட்டும் விவசாயிகளின் பெயர்களில் இருக்கும். மற்ற அனைத்தையும் அவர்கள் தீர்மானிப்பார்கள். இதன் பிறகு, விவசாயிகளை மத்திய அரசு முழுவதும் கைகழுவிவிடும்.
”தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் மட்டும் விவசாய மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாரே?”
நம் விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரைத் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த எம்.பி-க்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதிமுக விவசாயிகளுக்கு துரோகம் செய்திருக்கிறது என்று தமிழக விவசாயிகள் கொந்தளித்துள்ளார்கள்.
”விவசாய மசோதாக்களால் விவசாயிகளுக்கு பலனே இல்லையா?”
கார்பரேட்களின் நலன்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
”பாஜகவின் விவசாயிகள் விரோதச் சட்டங்களை எதிர்த்து கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடும் கண்டனம் தெரிவித்து பதவியை ராஜினாமா செய்துள்ளாரே?”
3 விவசாயச் சட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என்ற விழிப்புணர்வு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவே மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்திருக்கிறார். பஞ்சாப், ஹரியானாவில் பற்ற வைத்த தீ, இன்று நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த சட்டங்கள் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளதை, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் உணரத் தொடங்கியுள்ளார்கள்.
”அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட இன்னும் பல விளைபொருட்கள் நீக்கப்பட்டுள்ளனவே?”
இனிவரும் காலங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையையும் நிர்ணயிக்க இனி வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கி விவசாயிகள் தவிக்கும் பரிதாப நிலை ஏற்படும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் அத்தியாவசிய உணவு பட்டிலில் இருந்து நீக்கியதன் மூலம், தனியார் நிறுவனங்கள் தான் முக்கியம் என்ற நிலையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
”விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் தொடர்பாக பிரச்சினைகள் இருக்கின்றனவே?”
இந்த பிரச்சினைகளை மாநில அரசுகள் மூலம் தான் சரி செய்ய வேண்டும். விவசாயம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலப் பட்டியலில் இருக்கிறது. கார்பரேட்கள் மற்றும் பெரும் வர்த்தகர்களின் நலன்களை மேம்படுத்த மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. விவசாய சந்தைக் குழுக்கள் மத்திய அரசின் வரையறைக்குள் வராது. இது முழுக்க, முழுக்க மாநிலப் பட்டியலில் வரும்.
”மோடி அரசின் சுயசார்பு இந்தியா என்ற கோஷம் எடுபடுமா?”
சுயசார்பு இந்தியா என்ற போர்வையில், நவீன தாராளமயமாக்கல் கொள்கையை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது. விவசாயம் தொடர்பாகவும், கிராமப்புற கட்டமைப்பு தொடர்பாகவும் மோடி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உண்மையிலேயே விவசாயிகளுக்கு பலன் அளிக்கப் போவதில்லை.
”இதுவரை இல்லாத அளவுக்கு சர்வாதிகாரப் போக்குடன் விவசாயச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதே?”
இந்த சட்ட முன்வடிவுகளை நாடாளுமன்றத்தில் நிலைக் குழுக்களுக்கு அனுப்ப மோடி அரசு மறுத்திருக்கிறது. இந்த மசோதாக்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்துவதற்கான நேரத்தையும் மிகவும் சுருக்கி, அவசர, அவசரமாக நிறைவேற்றியதன் மூலம், மோடி அரசின் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கிறது.