135 ஆண்டுகால வரலாற்றுப் பழமையையும் புகழையும் பெருமையையும் நிலைப்படுத்தியுள்ளதோடு, இந்தியாவின் சமயச்சார்பற்ற இறையாண்மையையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாத்து வருகிற மகோன்னதமான இயக்கம்தான் இந்திய தேசிய காங்கிரஸ்!
சுதந்திர இந்திய வரலாற்றின் 73 ஆண்டுகளில் 52 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும்! இதில், 38 ஆண்டுகள் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகிய அரும்பெருந்தலைவர்கள் பிரதமர்களாகப் பொறுப்பேற்று, நவஇந்தியாவை நிர்மாணித்தார்கள். இன்று அன்னை சோனியா காந்தி, காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோர் வரிசையில் நின்று வழிநடத்தி வருகிறார்.
அன்னை இந்திரா, அமரர் ராஜிவ் ஆகியோரின் படுகொலைகளைத் தொடர்ந்து அரசியலை முற்றிலும் வெறுத்த அன்னை சோனியா, 1991 முதல் 1998வரை – ஏழாண்டு காலம் காங்கிரஸ் கட்சியோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் விலகியே இருந்தார். இந்தக் காலகட்டங்களில், குறிப்பாக 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதால், மதவாத பா.ஜ.க. வெற்றி பெற்று 1998முதல் 2004வரை ஆட்சி நடத்தக்கூடிய நிலை உருவாயிற்று. இந்நிலை தொடர்ந்தால், எந்த இலட்சியங்களுக்காக அன்னை இந்திராவும் ராஜிவ் காந்தியும் வாழ்ந்தார்களோ, தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்களோ அவற்றிற்கு எதிரான ஒரு நிலை உருவாகி விடும் என்பதை உணர்ந்த அன்னை சோனியா, தமது முடிவை மறுபரிசீலனை செய்தார்.
தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காங்கிரஸைத் தூக்கி நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமக்கிருப்பதைத் தெளிவாக உணர்ந்த அன்னை சோனியா, டிசம்பர் 28, 1998இல் காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்க முன்வந்தார். அப்போது, மூன்றே மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது! இந்த நிலையைப் புரட்டிப் போட்டுப் பதினைந்து மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பேற்கும் தகுதியை ஏற்படுத்தி, காங்கிரஸை வலிமைப்படுத்தியவர் அன்னை சோனியாவே!
நாட்டில் நச்சுக் களையாகப் பல்கிப் பெருகி வந்த மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காகக் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, 2004இல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான பொறுப்புள்ள ஆட்சி அமைய வியூகம் வகுத்து வெற்றி பெற்றவர் அன்னை சோனியா!
இவரே பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்ததோடு, டாக்டர் மன்மோகன் சிங்கைப் பிரதமர் பதவியில் அமரச் செய்தவர் அன்னை சோனியாவே ஆவார்!
விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்று, இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்த காந்தியடிகள், சுதந்திர இந்தியாவில் எந்தப் பதவியையும் ஏற்க மறுத்து, பிரதமராக ஜவஹர்லால் நேருவைப் பரிந்துரை செய்தார். காந்தியடிகளின் பதவி மறுப்புக்கு இணையாக, காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் புத்துயிரூட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றியை ஈட்டித் தந்த நிலையில், அன்னை சோனியாவும் பதவியை மறுத்து, வரலாற்றில் உன்னதமான இடத்தைப் பெற்று, உலக அளவில் உயர்ந்து நிற்கிறார்.
இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இந்தியாவை எதிர் நோக்குகிற தீவிரவாத, பயங்கரவாத, மதவாத சக்திகளை எதிர்த்து வழிநடத்தி வருவதோடு, டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில், 9 சதவிகித வளர்ச்சியைப் பெற்று, உலக வல்லரசுகளுள் சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உயர்ந்து நிற்பதற்குக் காரணகர்த்தாவாகவும் இருப்பவர் அன்னை சோனியாவே என்பதில் ஐயமில்லை!
கடந்த 2004 முதல் 2014 வரை டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நிலைத்த தன்மையுடன் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி. அனைத்து கூட்டணி கட்சிகளையும் ஒருங்கிணைக்கிற வகையில் செயல்பட்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். சுதந்திர இந்தியா காணாத வளர்ச்சியை 2004 முதல் 2009 வரை உருவாக்கி காட்டுவதற்கு பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர். பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு அரசியல் ரீதியாக பக்கபலமாக இருந்து, ஆட்சியையும், கட்சியையும் ஒருங்கிணைத்த பெருமை அன்னை சோனியா காந்திக்கு உண்டு.
டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2009 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இதற்கு காரணமாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி. ஆனால், அந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு, அதை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 ஆண்டுகால டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் மாற்றம் ஏற்படுகிற வகையில் 2014 இல் தீர்ப்பு வழங்குகிற சூழ்நிலையை பாரதிய ஜனதா கட்சி தனது பிரச்சார வலிமையை ஊடகங்கள் மூலமாக செயல்படுத்தி, வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
கடந்த 19 ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, 16 டிசம்பர் 2017 அன்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல்காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்றார். அன்று அந்த மாநாட்டில் ராகுல்காந்தி ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக கருதப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் லாகூர் காங்கிரசில் நிகழ்த்திய உரைக்கு இணையாக ராகுல்காந்தியின் உரை ஒப்பிட்டு பேசப்பட்டது. அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரிடையே உணர்ச்சியை ஊட்டுகிற வகையில் ராகுல்காந்தி உரையாற்றினார்.
காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்படுகிறபோதெல்லாம் நேரு பாரம்பரிய தலைமையே தொடர்ந்து பாதுகாத்து செயல்பட்டு வருகிறது. 1991-க்கு பிறகு காங்கிரசிற்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து மீட்பதற்காக அன்னை சோனியா காந்தி, 1998 இல் தலைமை பொறுப்பை ஏற்றார். அதேபோல, நீண்ட காலமாக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பேற்றிருந்த அன்னை சோனியா காந்தி, இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கத்தில் ராகுல்காந்தி தலைமைப் பொறுப்பை வழங்குகிற சூழலை உருவாக்கினார். இதன்மூலம் மத்தியில் ஆட்சியிலிருந்து வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு வலிமைமிக்க எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டார்.
2019 இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி அவர்கள் பதவியிலிருந்து விலகினார். அவரது பதவி விலகல் கடிதம் அவரது உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக இருந்தது. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்பட்டது. இந்த சோதனையிலிருந்து காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பதற்காக தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் அன்னை சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார்.
130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற 135 ஆண்டு கால இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பொறுப்பு வகிக்கிற அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு டிசம்பர் 9 ஆம் நாள் 74 ஆவது பிறந்தநாள். அன்னை சோனியாவின் தலைமையில் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் அயராது உழைத்து காங்கிரசின் லட்சியங்களை நிறைவேற்றுகிற வகையிலும், நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிற வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதிலும் தீவிர முனைப்புடன் செயல்படுவோம் என்று சூளுரை ஏற்போம். அதுவே அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினரின் பிறந்தநாள் செய்தியாக அமைவதே இன்றைய அரசியலில் மிகமிக அவசியமாகும்.
அன்னை சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் உடல் நலத்தோடு வாழ்ந்து இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய மக்களுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்று வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.