கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்ட சில வார்த்தைகளை தவறாக புரிந்து திரித்து வெளியிடப்பட்ட செய்தியின் காரணமாக அதற்கு விளக்கம் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து குழப்பமான செய்திகளை வெளியிட்டு, விரிசலை ஏற்படுத்த வேண்டுமென்று சில ஊடகங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அத்தகைய குழப்பவாதிகளின் முயற்சிகளை முறியடிக்கிற வகையில் தினேஷ் குண்டுராவ் வெளியிட்ட அறிக்கை அமைந்து விட்டது. இதன்மூலம் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2021 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் பாதையை தினேஷ் குண்டுராவ் அவர்களது அறிக்கை கோடிட்டு காட்டி விட்டது. இதன்மூலம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டையாக இருப்பது உணர்த்தப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விடுத்த அறிக்கை:
2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எங்கள் தலைவர் திரு. ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, திரு. ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை, நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம்.
இத்தகைய அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தனர்.
அதேபோன்று, திரு.மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்ற திரு. ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும்.
2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். வியாழக்கிழமை காலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், இந்த விளக்கத்தை அளிக்கின்றேன். தயவு செய்து இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது குறித்தும், சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தினேஷ் குண்டு ராவ் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடக பிரிவு தலைவர் ஆ. கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்பு தினேஷ் குண்டு ராவ் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. திமுகவும், காங்கிரசும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கடுமையாக பாடுபடும். கட்சியை பலப்படுத்துவதுடன், கூட்டணியையும் பலப்படுத்துவோம். திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம். வரும் 28ம்தேதி திமுக கூட்டணி நடத்த உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தோம். மற்ற விஷயங்கள் குறித்து தேர்தல் நெருங்கும் நிலையில் பேசுவோம்.