ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அச்செய்தியின் தமிழாக்கம்:
இது குறித்து மறைந்த மாதவ ராவின் மகள் திருமதி திவ்யா ராவுக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ” காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிப்புடனும் விசுவாசமாகவும் இருந்த உங்கள் தந்தை மாதவ ராவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன். எளிமையானவராகவும் கடினமாக உழைக்கும் காங்கிரஸ்காரராகவும் திகழ்ந்த மாதவ ராவ், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவை தனித் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்காக நீங்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவு திரட்டினீர்கள். நன்கு குணமடைந்து மாதவ ராவ் மருத்துவமனையிலிருந்து வருவார் என்று மட்டுமல்ல, மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கும்போது வெற்றியாளராகவும் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கொடூரமான விதியோ, வேறு முடிவை எடுத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த தருணத்தில் என் இதயம் உங்களுடனும், உங்கள் குடும்பத்தாருடனும், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்.
உங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.