நாள் 11.09.2020 காலை 11 மணி.
தேசியப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து, இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை மேற்கொண்டவர் மறைந்த மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு. எச். வசந்தகுமார். தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவராக பொறுப்பு வகித்த அவர், 28.8.2020 அன்று காலமான செய்தி தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, அனைத்து கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.
அரசியல் மற்றும் தொழில் ரீதியாக தமிழகம் முழுவதும் அறிந்த ஒப்பற்ற மாமனிதராக எச். வசந்தகுமார் விளங்கினார். அரசியலிலும், தொழிலிலும் வெற்றிப் படிகட்டுகளை ஏறி, சிகரத்தை அடைந்தவர். இவருக்கு முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை என்று கூறுகிற வகையில் மகத்தான சாதனைகளை புரிந்தவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்காக அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரது வாழ்த்துக்களுடன் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் அர்ப்பணிப்பு உணர்வோடு முழுமையாக ஈடுபட்டவர் மறைந்த எச். வசந்தகுமார். மறைந்த திரு. எச். வசந்தகுமார் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய தலைவரும், தி.மு. கழகத் தலைவருமான திரு. தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (11.9.2020) வெள்ளிக்கிழமை காலை சரியாக 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வை வசந்த தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அழைப்பிதழில் கீழ்ப்பகுதியில் உள்ள குறிப்புகள் மூலமாக நினைவேந்தல் நிகழ்ச்சியை நேரிடையாக பார்க்க முடியும்.
எனவே, மறைந்த மாபெரும் மனிதர், மனிதநேயர் திரு. எச். வசந்தகுமார் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டுகிற நிகழ்ச்சியின் மூலமாக அஞ்சலியை செலுத்துவோம்.