ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கண்ணாடி இழை இன்டெர்நெட் கேபிள் அமைக்கும் பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில் கடந்த 6 மாதங்களில் இரண்டாவது முறையாக, டெண்டரை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பொது கொள்முதல் உத்தரவின்படி, (இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை) பாரத்நெட் டெண்டர் விடப்படவில்லை என்று குற்றம்சாட்டி அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் மத்திய அரசிடம் புகார் அளித்தது.
இதனையடுத்து, டெண்டரை இறுதி செய்ய வேண்டாம் என, தமிழக அரசின் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துக்கு (டான்ஃபினெட்), மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் கடந்த 9 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், உள்ளூர் தயாரிப்பாளர்களை கவனத்தில் கொள்ளாமல், விதிமுறைகளை மாற்றி தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும், புகார் மீது இறுதி முடிவு எடுக்கும் வரை டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்றும், தமிழக அரசின் டான்ஃபினெட்டுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தின் 12 ஆயிரம் கிராமங்களில் இணைய வசதியை ஏற்படுத்தும் வகையில், கண்ணாடி இழை கேபிள்களை பதிப்பதற்கான ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விதிமுறைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் செய்யப்பட்டு, டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, புகார்கள் குறித்து விசாரித்தபின், டெண்டர் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு மீண்டும் பாரத்நெட் டெண்டர் விடுமாறு தமிழக அரசின் டான்ஃபினெட்டுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. கடந்த அக்டோபரில் மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட சிலர் மீண்டும் மத்திய அரசுக்குப் புகார் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளிநாட்டு நிறுவனம்தான் புகார் அளித்திருக்கிறதா? என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், மேக் இன் இந்தியா திட்டம் மீறப்பட்டிருந்தால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டான்ஃபினெட்டை, மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறும்போது, டெண்டர் விட்டதில் கேள்வி எழுப்பியபின், டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது ஏன்? புகார்கள் குறித்து விசாரித்து முடிவு அறிவிக்கும் வரை டெண்டர் தேதியை தமிழக அரசின் டான்ஃபினெட் நீட்டித்திருக்கலாம்” என்றார்.