முக்கிய அம்சங்கள்:
- மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
- மருந்து உற்பத்தி அதிகரிக்கும்போது, விலையை குறைக்க வேண்டும். ஆனால், விலையை அதிகரிக்க வேண்டிய காரணம் என்ன?
- ஒரு நிறுவனம் குறைவான விலைக்கு மருந்தைத் தரும்போது, அதே மருந்தை மற்றொரு நிறுவனம் அதிக விலைக்கு எப்படி விற்க முடியும்?
- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் தடுப்பூசி மருந்துக்கான செலவை மக்கள் மீதும், மாநில அரசுகள் மீதும் சுமத்துவது சரியா?
- இதுவரை ஒரு டோஸ் மருந்தை ரூ. 200 என மத்திய அரசு வாங்கி வந்தது. இதன்மூலம், ஒரு டோஸுக்கு ரூ.50 வீதம் சீரம் நிறுவனம் ஏற்கனவே லாபம் அடைந்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்கள் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் போது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி, உள்ளிட்ட மருந்துகளை வழங்க வேண்டிய முதன்மை பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்து வருகிறது. மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறது. அதற்கான தடுப்பூசி உற்பத்தி செய்கிற இரண்டு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற உரிமையை வழங்கியது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மே 1 ஆம் தேதி முதல் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என, சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இனிமேல், வழக்கம்போல் மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி மருந்தை விநியோகிக்கும். அதற்கு மேல் தேவைப்பட்டால் மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.
மருந்து உற்பத்தி அதிகரிக்கும்போது, அதன் விலையை ஏன் அதிகரிக்க வேண்டும் ? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. அரசுக்கு ரூ.150 க்கு வழங்கப்பட்ட ஒரு டோஸ் மருந்தை ரூ.400 வரை எப்படி உயர்த்த முடியும்? என்பது புரியாத புதிராக இருக்கிறது.
எதை வைத்து விலை உயர்வை சீரம் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் ஆக்ஸ்ஃபோர்டு அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மருந்தைத் தான் சீரம் நிறுவனமும் தயாரிக்கிறது. 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பூசி மருந்துகள் லாப நோக்கு கருதாமல் வழங்கப்படும் என அஸ்ட்ராஜெனகா ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு நிறுவனம் குறைவான விலைக்கு மருந்தைத் தரும்போது, அதே மருந்தை மற்றொரு நிறுவனம் அதிக விலைக்கு எப்படி விற்க முடியும்?
இந்திய மருத்துக் கட்டுப்பாட்டு ஜெனரலால் அவசரகால மருந்து என அங்கீகரிக்கப்பட்டதை, சீரம் நிறுவனத்தின் இத்தகைய விலை உயர்வு கேள்விக்குள்ளாக்குகிறது. கொரோனா தடுப்பூசி மருந்துகளை அரசுக்கு மட்டுமே வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கும், பொதுச் சந்தையிலும் விற்பதற்கான ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்களா? என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.
உலகின் பல்வேறு நாடுகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கி, மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இந்தியா ஒன்றும் பணக்கார நாடு இல்லை. பெரிய மக்கள் தொகை கொண்ட ஏழை, எளியவர்களை அதிகமாக கொண்ட நாடு. தடுப்பூசி மருந்துக்கான செலவை மக்கள் மீதோ, மாநில அரசுகள் மீதோ சுமத்துவது சரியா? இந்திய மக்களை கொரோனாவின் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறதா ? இல்லையா ? இந்த பொறுப்பை மோடி அரசு தட்டிக் கழிக்கலாமா ? இந்த பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது மத்திய அரசின் பொறுப்பற்ற செயலையே காட்டுகிறது.
மத்திய அரசின் புதிய அறிவிப்பால் 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு நபருக்கு 2 டோஸ்கள் என்று கணக்கிட்டால், 188 கோடி டோஸ்கள் தேவை. ஒரு டோஸ் மருந்துக்கு அரசு ரூ.200 செலுத்த வேண்டியிருந்தால், மொத்தமாக ரூ.36 ஆயிரத்து 400 கோடி செலவாகும். மத்திய அரசுக்கு ஒரு டோஸ் மருந்து ரூ. 150 க்கு விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம், இதுவரை ஒரு டோஸ் மருந்தை ரூ. 200 என மத்திய அரசு வாங்கி வந்தது. இதன்மூலம், ஒரு டோஸுக்கு ரூ.50 வீதம் சீரம் நிறுவனம் பலனடைய மத்திய அரசு ஏற்கெனவே வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
ஏற்கனவே மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தடுப்பூசிக்காக ரூபாய் 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. மேலும் பி.எம். கேர்ஸ் நிதியிலும் பணம் இருக்கிறது. இந்த நிதியை பயன்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அளிக்கலாம். மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான ரூபாய் 30 ஆயிரம் கோடி செலவை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அந்த நிதியை தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். மனம் இருந்தால் மார்க்கமிருக்கிறது. பிரதமர் மோடிக்கு மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க மனம் இருக்கிறதா ?
நாட்டில் தடுப்பூசி தேவை பல மடங்கு உயர்ந்து, உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவது தான் உலகெங்கும் உள்ள பொருளாதார சூத்திரம். உயிர்காக்கும் தடுப்பூசி மருந்தின் விலையை ஏற்றிக் கொள்ள மத்திய அரசே அனுமதித்தது, உலகில் வேறெங்கும் நிகழாத மனிதநேயமற்ற செயலாகும். இது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசிடம் என்ன பதில் இருக்கிறது? மக்களின் உயிரை முதலீடாக்கி வியாபாரம் செய்யும் ஓர் அரசை நாம் பெற்றிருப்பது கொடுமையிலும் கொடுமை.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் மோடி பேசும் போது, ‘கொரோனாவிற்கு எதிரான போரில் கடந்த ஆண்டில் வெற்றி பெற்றதைப் போல, நடப்பாண்டிலும் வெற்றி பெறுவோம்’ என்று கூறினார். கடந்த ஆண்டில் கொரோனா ஒழிப்பு போரில் வெற்றி பெற்றோம் என்று எப்படி கூற முடியும் ? பிரதமர் மோடி கூற்றின்படி வெற்றி பெற்றிருந்தால் இன்று உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதன்மை இடத்தை இந்தியா பெற்றிருக்காது. இந்தப் பின்னணியில் கொரோனா ஒழிப்பு போரில் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி கூறியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.
எனவே, கொரோனா ஒழிப்பு என்பது மத்திய பா.ஜ.க. அரசின் முதன்மை பொறுப்பாகும். அதை தட்டிக் கழித்து, மாநில அரசுகளிடமோ, தனியார் துறையிடமோ, பொதுச் சந்தைகளிடமோ பிரதமர் மோடி ஒப்படைப்பாரேயானால் கடும் விளைவுகளை பா.ஜ.க. அரசு சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.