தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் பல்வேறு சமயங்களில் முக்கியப் பங்கு வசித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பேராசிரியர் பா. ரா என்று அழைக்கப்பட்ட திரு பா.ராமச்சந்திரன் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றில் இளமைப் பருவத்திலேயேத் தம்மை இணைத்துக் கொண்டவர். இளைஞர் காங்கிரசில் துடிப்புடன் செயல்பட்ட இவர், பெருந்திரளான இளைஞர்களை திரட்டி காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதன்மூலம் பெருந்தலைவர் காமராஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவை சேர்ந்த கொருக்கை கிராமத்தில் 11 ஜூலை 1921 இல் பிறந்தவர் பா. ராமச்சந்திரன். தமது சகோதரர் திரு துரைசாமி நாயுடு வேலூர் ஜில்லா போர்டில் பணியாற்றிய போது பள்ளிப் படிப்பை அங்கு தொடர்ந்தார். பிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) படித்து முடித்த பிறகு கோவை பி. எஸ். ஜி. கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அரசியலில் மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்த பணியை உதறிவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவர் பா. ராமச்சந்திரன்.
1952 செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பா. ராமச்சந்திரன், 1957 இல் மீண்டும் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
1962 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக 1967 வரை பணியாற்றினார். 1967 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தில் ஸ்தாபன பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
1969 இல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டபோது, பெருந்தலைவர் காமராஜரோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1971 திருத்தணி மக்களவை தொகுதியில் போட்டியிட்டுத் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், 1972 ஜனவரியில் தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக பா. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் மறைகிற வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.
பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டுதலோடு செயல்பட்ட திரு பா. ராமச்சந்திரன் அவர்களின் அரசியல் செயல்பாட்டிற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்தது அக்டோபர் 1973 இல் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற அறப்போராட்டமாகும். அன்று நடைபெற்ற மறியலுக்கு அணிவகுத்துச் செல்லும் அறப்போர் வீரர்கள் சுதராடையும், தலையில் காந்த குல்லாவும் அணிந்து காங்கிரஸ் பேட்ஜ்களை அணிந்து கம்பீரமாகப் போராட்டத்தில் கைகளில் காங்கிரஸ் கொடியோடு முழக்கங்களை எழுப்பி கைதான காட்சியை எவரும் மறக்க முடியாது. ஒரு போராட்டம் காந்திய வழியில் எப்படி நடக்க வேண்டுமோ, அப்படிக் கட்டுக்கோப்பாக நடத்திய பெருமை பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு உண்டு. இதை தினமணி நாளேடு மனதாரப் பாராட்டி செய்தி வெளியிட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.
1976 இல் இரு காங்கிரஸ் இணைப்பில் சேராமல் பா. ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துச் செயல்பட்டது. இந்திய உணவு கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1980 இல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை இழந்த பிறகு அக்கட்சியில் நீடிக்க பா. ராமச்சந்திரன் விரும்பவில்லை.
இந்நிலையில், தேசிய அளவில் அன்னை இந்திரா காந்தியின் தலைமையை வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அவரது அழைப்பை ஏற்று மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக 30.9.1980 இல் சென்னை காமராஜர் அரங்கம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் இந்திரா காந்த கலந்து கொண்டார். அதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு விழாவில் பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.
1982 இல் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, 1988 வரை அந்த பொறுப்பில் இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக திரு. பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது இறுதிக் காலம் வரை செயல்பட்டார்.
1969 இல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையையும் கடுமையாக பாதித்தது. இதையொட்டி சென்னை உயர்ந்த மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. செப்டம்பர் 1980 இல்.
பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரசில் இணைந்த பிறகு அறக்கட்டளை வழக்குகள் முடிவுக்கு வந்து இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர் தலைவர் பா. ராமச்சந்திரன் அவர்கள் என்பதை நன்றியோடு நினைவு கூற வேண்டியது நமது கடமையாகும்.
காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி பெருக்கோடு நூற்றாண்டு விழா எடுப்பது காங்கிரஸ் கட்சியினரின் தலையாய கடமையாகும்.
போற்றுதலுக்குரிய பொது வாழ்க்கையை நிகழ்த்தியவர் பேராசிரியர் பா. ரா. அவர் உடுத்துகிற நேர்த்தியான உடையே ஓர் அழகாகும். குறிப்பாக, கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட பொன்னிறமான முழுக்கை சுதர் ஜிப்பா அணிந்து மடிப்பு கலையாமல் அவர் நடந்து வருகிற காட்சியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. கதர் ஜிப்பாவோ பொன்னிறம்; அவரது முகமும் பொன்னிறம். பழகுவதற்கு இனிமையானவர். மென்மையானவர். கடுஞ்சொல் கூறாதவர். அடக்கமும், நிதானமும் மிக்க அற்புதத் தலைவராக வாழ்ந்த பேராசிரியர் திரு பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது 79 ஆவது வயதில் 23, மே 2001 இல் நம்மை விட்டுப் பிரிந்தார்.
87 வயது நிரம்பிய, பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களது துணைவியார் திருமதி. வெங்கடலட்சுமி. அவரது மகன் டாக்டர் ரவிராம் ராமச்சந்திரன் இவ்விழாவில் நன்றியுரை ஆற்றுவது மிக மிகப் பொருத்தமானதாகும். அவரது சகோதரிகள் சசிகலா, சித்ரகலா ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் பெருந்தகையைப் போல அவரது குடும்பம் பெரும் புகழுடன் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ். அழகிரி அவர்கள் நன்றிப் பெருக்கோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவராக இருந்த திரு பா. ராமச்சந்தரன் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறார். இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியினரால் மறக்க முடியாத, மறக்கக் கூடாத நன்றியோடு நினைவு கூறப்பட வேண்டிய மாமனிதர் பேராசிரியர் பா.ரா. அவர்களை போற்றுகிற வகையில் இந்த நூற்றாண்டு விழா இங்கே சிறப்பாக நடைபெறுவது குறித்து ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் பெருமையடைய வேண்டும்.
– வெளியீடு : தேசிய முரசு