நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சியில் தலைமை ஆசிரியராக மிகச்சிறப்பாக பணியாற்றிவந்த எனது 30 ஆண்டுகால நண்பர் திரு மு.குணசேகரன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக விவாதங்களில் பங்கேற்று தனி முத்திரை பதித்தவர். பிறகு ஒரு காலகட்டத்தில் அதிலிருந்து விலகி அதுவரை மக்களால் பெரிதும் அறியப்படாத நிலையில் இருந்த நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். அவர் இணைந்த பிறகு விவாதங்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அளவிற்கு அதனுடைய தரத்தை பலமடங்கு உயர்த்தினார். அதன்மூலம் நேயர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தார்.
தொடக்கத்தில் தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து போன்ற நாளேடுகளில் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்தவர். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இளம் வயது முதற்கொண்டே முற்போக்கு சிந்தனை கொண்டவர். கட்சி எல்லைகளை கடந்து தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் சமூக நீதி பார்வையை கொண்டவராக இருந்தார்.
நான் அறிந்த வரை திரு குணசேகரன் நெறியாளராக இருந்து பல விவாதங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். எந்த பாரபட்சவும் இன்றி விவாதங்களை நியாயமாக நடத்தியிருக்கிறார். எந்த வித பரபரப்பிற்கும் ஆளாகாமல், நிதானமாக தெளிவான சிந்தனையோடு, சிரித்த முகத்துடன் வலுவான கருத்துக்களை முன்வைத்து அவர் நடத்துகிற பாணியில் கவராதவர்கள் எவருமே இருக்க முடியாது.
மிக அழகிய தோற்றமும், இளைமை துடிப்பும் கொண்ட அவர் விவாதங்களை சுவாரசியமாக நடத்துவதில் வல்லவர். அவரது விவாதத்தில் பங்கேற்பது என்றால் என்னை போன்றவர்களுக்கு அலாதி பிரியம். அறிவுத்திறன், கூர்மையான குறுக்கீடுகள், ஆற்றல்மிக்க சொல்லாடல்கள் அவரது பலம். சிறந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ராம்நாத்கோயங்கா விருது பெற்றவர். இத்தகைய தகுதிகளை பெற்ற திரு குணசேகரன் அவர்கள் நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து விலகியிருப்பதனால் இழப்பு குணசேகரனுக்கு அல்ல. இதனால் பெரும் இழப்பை நியூஸ் 18 தொலைக்காட்சி இனி வருகிற காலங்களில் சந்திக்கப்போகிறது.
திரு குணசேகரன் அவர்கள் திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் திரு கலி பூங்குன்றன் அவர்களின் மருமகன் என்கிற காரணத்திற்காக இவர் மீது அரசியல் சாயமும், உள்நோக்கம் கொண்ட அவதூறும் இவர்மீது சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை. திரு மு.குணசேகரன் அவர்கள் ஒரு நேர்மையான நீதிபதி எப்படி செங்கோலை நிமிர்த்தி தீர்ப்புகளை வழங்குவாரோ, அதுபோலவே நெறியாளராக இருந்து நெறி தவறாமல் விவாதங்களை நிகழ்த்தியவர்.
பொதுவாக விவாதங்களில் பங்கேற்கிற பாஜகவினர் தங்களுக்கு எதிராக கடுமையான வாதங்களை எதிர்தரப்பினர் முன்வைக்கிறபோது, அதற்குரிய நியாயமான பதிலுரைகளை வழங்காமல், நெறியாளர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து அடாவடித்தனமாக பேசுவது தமிழக பாஜகவினருக்கு கைவந்த கலை. இந்த பின்னணியில் தான் பாஜகவின் கைக்கூலியாக இருக்கிற மாரிதாஸை ஏவிவிட்டு சமூக ஊடகங்களின் மூலமாக அப்பழுக்கற்ற நண்பர் திரு மு.குணசேகரன் அவர்கள் மீது குறிவைக்கப்பட்டு அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதாரமற்ற அவதூறுகள் குற்றச்சாட்டுகளாக அள்ளிவீசப்பட்டன. இவை எதையும் விசாரணைக்கு உட்படுத்தாமல் மேலிட பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் 18 தொலைக்காட்சி திரு மு.குணசேகரன் அவர்களை நெறியாளர் பணியிலிருந்து விலக்கி வைத்தது. இதை சில நாட்கள் சகித்துக்கொண்ட சுயமரியாதை மிக்க திரு மு.குணசேகரன் அவர்கள் இனியும் பணியில் தொடர்வதில்லை என முடிவெடுத்து, தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார்.
பாஜக தனது அதிகாரத்தின் மூலம் தேசிய ஊடகங்களை கைப்பற்றி, கைப்பிடிக்குள் அடக்கி வைத்திருப்பதை போல தமிழகத்திலுள்ள காட்சி மற்றும் அச்சு ஊடகங்களையும் வைத்துக்கொள்வதற்கு மிகப்பெரிய உத்திகள் ரகசியமாக கையாளப்பட்டு வருகின்றன.
ரபேல் ஊழலை வெளியிட்டதற்காக உலக புகழ்பெற்ற தி ஹிந்து ஆங்கில நாளேட்டிற்கு மோடி அரசு விளம்பரங்களை மறுத்துவருவதாக பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் திரு என்.ராம் அவர்கள் கூறியிருக்கிறார். பாஜகவின் கைவரிசை அச்சு ஊடகங்களில் ஓரளவுக்கு சாத்தியப்படலாம். ஆனால் அதே முயற்சியை காட்சி ஊடகங்களில் மேற்கொண்டால் எந்த அளவிற்கு கைக்கூடும் என்று தெரியவில்லை. ஆனால் ஊடகங்கள் மீது அடக்குமுறை ஏவி வெற்றி பெறுவது தமிழ் மண்ணில் சாத்தியமில்லை என்பதை உணர்கிற காலம் வெகு தொலைவில் இல்லை.
ஆற்றல் மிகு நண்பர் திரு மு. குணசேகரன் அவர்களே, இன்று ஒரு கதவு மூடியிருக்கிறது. இனி உங்கள் திறமைக்காக ஆயிரம் கதவுகள் திறக்கப்போகிறது. தொலைக்காட்சி விவாதங்கள் நடத்துவதில் பேராற்றல் மிக்க உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை மிகுந்த உறுதியோடும், நம்பிக்கையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.