பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தமிழக தலைவரும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிற டாக்டர் சுப்பையா சண்முகம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைகிறோம். கடந்த ஜூலை மாதம் டாக்டர் சுப்பையா சண்முகம் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திருமதி. சந்திரா சம்பத் என்பவருக்கு கடுமையான தொல்லைகள் அளித்ததோடு, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின்படி திருமதி. சந்திரா சம்பத் அவர்களின் வீட்டின் முகப்பில் குப்பைகளையும், பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், கோழிக்கறி துண்டுகளை கொட்டி அந்தப் பகுதியை சேதப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த அம்மையார் வீட்டின் வாசற்படி அருகில் டாக்டர் சுப்பையா சண்முகம் சிறுநீர் கழிக்கிற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பரவி கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டன. பாதிக்கப்பட்டவருக்காக புகார் தெரிவித்த பாலாஜி விஜயராகவன் ஊடகங்களில் பேட்டி அளித்து டாக்டர் சுப்பையா சண்முகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.
டாக்டர் சுப்பையா சண்முகத்தினுடைய அராஜகம் மிகுந்த நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தலைமை அதிகாரியிடம் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. அஸ்வத்தாமன் முறையிட்டதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிற ஒழுக்கக் கேடான டாக்டர் சுப்பையா சண்முகம் அந்த குடியிருப்பில் தனிமையில் குடியிருந்து வந்த வயதான திருமதி. சந்திரா சம்பத் அவர்களிடம் எவ்வளவு முறைகேடாக நடந்து கொண்டார் என்பதற்கு மேற்கூறப்பட்ட சம்பவங்களே சாட்சிகளாக உள்ளன. இந்நிலையில் மத்திய பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பின் தமிழக தலைவராக உள்ள ஒழுக்கக் கேடான ஒருவரை மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரை நிர்வாகக் குழுவில் இருந்து உடனடியாக விலக்கவில்லை எனில் கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் நடத்தும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.