நிருபர்: எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்கிறதே பாஜக? பாஜகவுடன் கூட்டணி உண்டா? கூட்டணி என்றால் யார் தலைமை?
எடப்பாடியார்: எலெக்சனுக்கு இன்னும் ஏழட்டு மாசம் இருக்கு? கூட்டணி பற்றி இப்ப பேச அவசியமேயில்லை’’.
அய்யோ பரிதாபம்…..!’’பாஜகவுடன் கூட்டணி இல்லை’’ என்று சொல்லவும் முடியவில்லை. ’’எந்த ஒரு கூட்டணி ஏற்பட்டாலும் அதற்குத் தலைமை அதிமுக தான்’’ என உறுதிபடுத்தவும் துணிவில்லை என்றளவுக்கான அவலம் தமிழகத்தை ஆளுகின்ற – தமிழகத்தின் மிகப் பெரிய கட்சி என்று நம்பப்படுகின்ற – அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது! அதாவது கட்சியைக் கூட காவு கேட்டு, தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படும் நிலையிலும் எதிர்த்துப் பேசத் துணிவற்ற அதிமுகவின் பரிதாபத்திற்குரிய நிலைமையை பார்த்தும் ஏனோ எனக்கு எள்ளளவும் வருத்தமேற்படவில்லை!ஏனென்றால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் எல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல் அனைத்தையும் அலேக்காக அள்ளி பாஜக அரசு வடமாநிலத்தவர்களுக்கே மொத்தமாக தந்த போது இபிஎஸுசும்,ஒபிஎஸுசும் வருத்தப்படவேயில்லை.
தபால் ஆபிஸில் கூட தமிழ் தெரியாத வடமாநிலத்தார் வந்து ஆக்கிரமித்த போது இந்த இருவரும் பதை பதைக்கவில்லை! தமிழக ரயில்வேயில் கடைநிலை ஊழியர் வேலை உட்பட மொத்தமாக வட மாநிலத்தவர் கபளிகரம் செய்த போதும் இவர்கள் கவலைப்படவேயில்லை!துறைமுகப் பணிகளில், காண்டிராக்டுகளில், லைசென்சில் என அனைத்திலும் தமிழர்களை துச்சமாகக் கருதி அவர்கள் துடைத்தெரிந்த போதும், இவர்கள் துயரப்படவில்லை!
விமான நிலையங்கள் விலைபேசப்படும் சூழல்கள் நெருங்கி வருவது குறித்து இவர்கள் விழித்தெழவில்லை..!மருத்துவ கல்வி தமிழர்களுக்கு மறுக்கப்பட்டது போல, ’’ஆரம்ப கல்வி தொடங்கி உயர் கல்வி வரை இனி கல்வியே ஏழைகளுக்கு எட்டா கனி தான்’’ என பாஜக அரசு சட்டம் கொண்டு வந்த போதும் இவர்கள் எதிர்க்கவில்லை!தமிழகத்தின் வரிவருவாய் அனைத்தையும் ஜீ.எஸ்.டியாக வசூலித்துக் கொண்டு தமிழகத்திற்கான பங்கை திரும்பத் தரமறுத்த பாஜக அரசிடம் உரிமை கேட்டு சண்டையிட நெஞ்சில் உரமில்லை!’’ஸ்டெர்லைட் ஆலை மூடுவதில் சட்டமன்றத்தை கூட்டிக் கொள்கை முடிவு எடுக்காதே…’’ என்ற பாஜகவின் கட்டளையை பணிவுடன் ஏற்றதில் வெட்கமில்லை!
இப்படித் தமிழகத்தின் பல நலன்களையெல்லாம் பதறாமல் பாஜகவின் காலடியில் காவு கொடுத்த அதிமுக அரசுக்கு, தற்போது கட்சியையும் காவு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது! தாங்கள் ஊழல்களில் திளைத்து கொள்ளையடிக்க, ஆட்சியாளர்கள் தமிழகத்தையே நரபலியிட துணிந்த பிறகு இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கிறது இவர்களிடம் கட்சியைத் தவிர!எதிரிகளிடம் தாயகத்தைக் காவு கொடுத்த துரோகிகள் நிலைபெற்று வாழ்ந்ததாக சரித்திரமில்லை.
(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)