மருத்துவப் படிப்புகளில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த இட ஒதுக்கீடு தற்போது நியாயமற்ற விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது துரதிருஷ்டவசமானதாகும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களோடு அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையை ஒப்பிட முடியாது.
சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை, பல்வேறு வழிகளில் கல்வி கற்பிக்கும் தனியார் பள்ளிகளோடு எந்த வகையிலும் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
மாநில அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்படும் ஆளுநரின் அதிகாரம், அரசியல் சாசனத்தின் 200 ஆவது பிரிவின் படி, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தன்னிடம் மசோதா வந்ததும் உடனே கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால், மீண்டும் மசோதாவை மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். ஒருவேளை மீண்டும் மசோதா அனுப்பப்பட்டால், அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.
அரசியல் சாசனத்தின் 200 ஆவது பிரிவில் இவ்வாறு இருக்கும் போது, ஆளுநர் 4 வாரங்கள் அவகாசம் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநருக்கான பொறுப்புகளைப் பற்றி மனதில் கொள்ளாமல், அரசியல் சாசனப்படி செயல்படாமல் சர்ச்சைக்குரிய வகையில் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டால், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அரசியல் சாசன தேவை அர்த்தமற்றதாகிவிடும். மேலும், தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உத்தரவாதம் அளிப்பதன் அடிப்படையிலும் முடிவு செய்யாமல், இந்த பிரச்சினை அரசியலாக்கப்படுகிறது.