”மன்னிக்க வேண்டும்…நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்…”
‘நீட்’ தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், ‘இரக்கமற்ற அரசு தம்மை அரவணைக்காது’ என்று மரணத்தை அரவணைத்திருக்கிறார், மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா.
ஜோதி ஸ்ரீ துர்காவின் மரண வாக்குமூலம் கடிதமாக கையில் கிடைக்கும் முன்பே, அதே நாளில் தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் ஆகியோரின் உயிரையும் ‘நீட்’ பறித்துக் கொண்டது, தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ எனும் கொடுமையை கடும் எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு அமல்படுத்தியது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துக் கொண்டது. 2016 ஆம் ஆண்டு மட்டும் விலக்கு அளித்த நீதிமன்றம், 2017 ஆம் ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார் அரியலூர் மாணவி அனிதா.
12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,200 க்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்திருந்த அனிதாவுக்கு, பழைய முறை தொடர்ந்திருந்தால், மருத்துவக் கல்லூரியில் படிக்க எளிதாக வாய்ப்பு கிடைத்திருக்கும்.
ஆனால், ‘நீட்’ தேர்வு என்ற பெயரில் அனிதாவின் கனவு தகர்க்கப்பட்டது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்தும் பயன் இல்லையே என்றபடி, தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.
‘நீட்’ தேர்வால் நடந்த முதல் உயிரிழப்பு தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக தவிர அனைத்து எதிர்கட்சிகளும், பெற்றோரும், மாணவ, மாணவிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனினும். அதன்பிறகும் ‘நீட்’ எனும் இரத்தக் காட்டேறியின் தாகம் தீரவில்லை.
2018 ஆம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முயற்சி மேற்கொண்ட சேலத்தைச் சேர்ந்த அஷ்டலட்சுமி காப்பாற்றப்பட்டார். அதே ஆண்டு, திருச்சியைச் சேர்ந்த சுப ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அடுத்த இரு ஆண்டுகளில் திருப்பூரைச் சேர்ந்த ரிது ஸ்ரீ, தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷியா ஆகியோர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
உயிரை மாய்த்துக் கொண்ட 5 மாணவிகளில் 3 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கி வகுப்பைச் சேர்ந்த இந்த மாணவிகள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்.
இந்த சோகம் மனதில் இருந்து நீங்கும் முன், இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மாணவர் மோதிலால் ஆகிய 3 பேரும் கடந்த 12 ஆம் தேதி ஒரே நாளில் உயிரிழந்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
நீட் தேர்வுக்கு இதுவரை மாணவிகள் மட்டுமே பலியாகி வந்த நிலையில், முதல்முறையாக மாணவர்களையும் பலிவாங்கத் தொடங்கிவிட்டது.
‘லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பெற்றோர் பட்ட கஷ்டம் வீணாகிவிடுமோ?’ என்ற அச்சம், ‘தேர்வில் தோல்வியுற்றால் மற்றவர்கள் ஏளனம் செய்வார்களோ?’ என்ற அச்சம், மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதிலேயே உள்ளூர புதைந்து போன ஆசை பொய்யாகும் போது, மன அழுத்தம் ஏற்படும்போது இத்தகைய முடிவுகளை மாணவர்கள் எடுப்பதாக மன உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
”மருத்துவம் மட்டுமே படிப்பல்ல. அதைவிடச் சிறந்த படிப்புகள் எல்லாம் உள்ளன. இது போன்ற தற்கொலையால் இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.தற்கொலை எண்ணம் வந்தாலே மனதுக்குப் பிடித்தவர்களுடன் மாணவ, மாணவிகள் பேச வேண்டும். எதற்கும் தற்கொலை தீர்வல்ல.” என்று கூறுகிறார்கள் கல்வியாளர்கள்.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 8 பிஞ்சுகள் மருத்துவர் கனவோடு மண்ணில் புதைந்து போனதை, மத்திய அரசு மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போதுகூட… மத்திய அரசு நினைத்தால் ‘நீட்’ எனும் காலனை ஒழிக்கலாம். ஆனால் நினைக்க வேண்டுமே…!
தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கற்பகவிநாயகம் தன் சொந்த அனுபவத்தை ஒருமுறை இவ்வாறு வெளிப்படுத்தினார்…
”பியூசியில் நான் இரு முறை தோல்வியடைந்து விட்டேன். மனம் உடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். அப்போது, மின்னல் போல நேர்மறை எண்ணம் என்னுள் இறங்கியது. நாம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? தோல்விதான் முடிவா? நிச்சயம் நம்மாலும் சாதிக்க முடியும் என உறுதியாக நம்பினேன். தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு வீடு திரும்பினேன். மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்று, வழக்குரைஞராகி தற்போது உங்கள் முன் நீதிபதியாக நிற்கிறேன்…”
மாணவர்களே, இதை மீண்டும் மீண்டும் படியுங்கள். ஒவ்வொருவரும் சாதிக்கப் பிறந்தவர்களே என்பதும், நம் பிறப்பின் அர்த்தமும் புரியும்..
வாழ்க்கையே போர்க் களம்… வாழ்ந்துதான் பார்க்கணும்!