கிழக்கு லடாக் பள்ளத்தாக்கில் கல்வான் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளதை சுட்டிக்காட்டினால், 1962 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியிலும் இந்தியாவின் எல்லையில் சீன ஊடுருவல் நடந்ததாக, ஒரு தவறான ஒப்பீட்டை பாரதிய ஜனதா கட்சியினர் கூறிவருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த ஊடுருவல் சம்பவத்தை, 1962 நடந்த சம்பவத்தோடு ஒப்பிடுவது சரியல்ல. இந்த 2 சம்பவங்களும் வெவ்வேறானவை. இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டும், சீனாவுக்கு 1949 ஆண்டும் விடுதலை கிடைத்தது. 1962 ஆம் ஆண்டு இருந்த இந்தியாவும் சீனாவும் வேறு. 2020 ஆம் ஆண்டில் இருக்கிற இந்தியாவும் சீனாவும் வேறு. 1962 ஆம் ஆண்டு இருந்த நிலையை வைத்துக் கொண்டு, 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அப்படி பேசுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ளும் சூழலை ஒப்பிடும்போது, சீன பிரச்சினையில் நேரு எதிர்கொண்ட சவால்கள் தீர்வு காண முடியாத ஒன்றாக இருந்தது.
நேரு ஆட்சியை தொடங்கும்போது வெளிநாட்டுக் கொள்கை ஏதும் நம்மிடம் இல்லை. ஆங்கிலேயர்களின் கொள்கைகளையே பின்பற்ற வேண்டியிருந்தது. நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை நலன் கருதி புதிய வெளிநாட்டுக் கொள்கையை நேரு வகுத்தார்.
அப்போதைய ஜாம்பவான்களான அமெரிக்காவும், ரஷ்யாவும் பனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் நம் நாட்டுக்கு தேவையான சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை நேரு உருவாக்கினார். ராணுவத்தின் ஒத்துழைப்போடு நாட்டை சரியாக வழிநடத்திச் செல்ல புதிய வெளிநாட்டுக் கொள்கை உதவியாக அமைந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனதிலிருந்து மோடிக்கு இதுபோன்ற சவால்கள் எல்லாம் இல்லை. நேரு வகுத்துக் கொடுத்த வலுவான வெளிநாட்டுக் கொள்கையையே அவர் தொடர்ந்து பின்பற்றி வந்தார்.
நேருவின் வெளிநாட்டுக் கொள்கைதான், உலகத்திலேயே சக்திவாய்ந்த சீனாவின் அதிபரிடம் இருந்து காஷ்மீர்-லடாக் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மோடிக்கு பலமுறை அழைப்பு விடுக்க காரணமாக இருந்தது.
திபெத்தை முன்வைத்து சீனாவுடன் போரிடக் கூட நேரு தயாராக இருந்ததில்லை. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது முதன்மைப் பணியாக இருந்தது.
மோடிக்கு இதுபோன்ற பிரச்சினைகளோ அல்லது நிர்பந்தங்களோ இப்போது இல்லை.
எல்லையில் அமைதியை நிலைநாட்ட, சீனாவும் இந்தியாவும் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் ஏராளமான ஒப்பந்தங்களை செய்துகொண்டன. கடந்த 45 ஆண்டுகளில் சீன எல்லையில் ஒரு படை வீரர் கூட உயிரிழக்கவில்லை.
நாடு சுதந்திரம் அடைவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே, சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து நேரு நன்கு அறிந்திருந்தார். வெளியுறவுக் கொள்கையில் அவரது ஆலோசகர்களாக இருந்தவர்களுக்கு போதிய ஞானம் இல்லாமல் இருந்தது.
அப்போது கேபினட் அமைச்சர்களும் புதியவர்கள் என்பதால், ராணுவம் மற்றும் வெளிநாட்டு விவகாரம் குறித்து புரிதல் இல்லாதவர்களாக இருந்தனர். இப்போது இருப்பது போல், நம் படைகள் வலுவானதாக இல்லை. ராணுவ கட்டமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன.
1962 ஆம் சீனா தாக்குதல் நடத்தியபாது, நேரு பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. தம்மிடம் வலுவான படையோ, கட்டமைப்போ இல்லாத காலத்திலும் நேரு அமைதியாக இருந்துவிடவில்லை. அப்போதும் சீனாவுக்கு எதிராக களம் இறங்கினார்.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டார். வீரர்களும் கடைசி வரை போராடினார்கள்.
ஆனால், இன்று பிரதமர் மோடியோ கல்வான் பகுதியை சீனாவுக்கு தாரை வார்த்துவிட்டார்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திடம் அப்போதைய பிரதமர் நேரு உதவி கோரினார். அதன்பின்னர், சீனா தமது சொந்த இடத்திலிருந்தே பின்வாங்கியது.
சீனப் பிரச்சினையில் என்ன நடக்கிறது என்பதை, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மக்களுக்கு அவ்வப்போது நேரு தெரிவித்துக் கொண்டிருந்தார். சீனாவுடனான மோதல் குறித்த விவரத்தை, முதலமைச்சர்களுக்கு கடிதம் மூலம் விளக்கினார்.
ஆனால் பிரதமர் மோடியோ, சமீபத்திய சீன ஊடுருவல் குறித்த அமைதி காக்கிறார். ராகுல்காந்தி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும், இது பற்றி பேசாமல் தவிர்த்து வருகிறார். கடந்த ஜுன் மாதம் 30 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதும் கூட, இந்திய எல்லையில் நடந்த சீன ஊடுருவல் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை.
சீன விவகாரத்தில் அப்போதைய பிரதமர் நேருவுடன், இப்போதைய பிரதமர் மோடியை ஒப்பிடுவது சரியா? என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.
There is no comparison Sir, as you have rightly pointed out. The prestige that India enjoyed as leader of the Non-Alignment movement made a huge difference in our foreign policy matters. Now that position is not there.