தொழிற்சங்கங்களும் தீவிரவாதிகளும் மிரட்டிய போது, பணியாத ரத்தன் டாடா, தனிஷ்க் விளம்பரத்தைத் திரும்பப் பெற்றதன் மூலம் நன்மதிப்பை இழந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ரத்தன் டாடா, மன்மோகன் சிங் ஆட்சியில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் செழிப்பை அனுபவிக்க 20 வயது இளைஞராக இருந்திருக்கக் கூடாதா ? என்றும் ஏங்கினார்.
உலகிலேயே இந்தியா தான் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறப்பாக இருப்பதாகவும், பொருளாதாரத்தில் வலுவான நிலையை மன்மோகன் சிங்கின் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் பாராட்டினார். தனக்கு வயதாகிவிட்டதற்காக வருத்தப்பட்ட அவர், 20 வயது இளைஞர்களை நினைத்துப் பெருமைப்பட்டார்.
6 ஆண்டுகளுக்குப் பின்பு, இந்த நாட்டின் இளைஞர்களைப் பற்றி டாடா என்ன சிந்திக்கிறார் என்று தெரியவில்லை. நாம் உண்மையிலேயே இருண்ட இந்தியாவை விட்டு விலக விரும்பினால், இந்து-முஸ்லீம் மோதல்கள் மற்றும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பொறுத்துக் கொள்ள விரும்பாத இளைஞர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்து மருமகளுக்கு முஸ்லிம் குடும்பத்தினர் இந்து முறைப்படி வளைகாப்பு நடத்துவதாக அமைந்துள்ள அழகான விளம்பரம் அது. இந்த விளம்பரத்தை மிரட்டிப் பணிய வைத்து திரும்பப் பெறவைத்துள்ளார்கள். ஊழியர்கள் நலன் கருதியும் பாதுகாப்புக்காகவும் சர்ச்சைக்குரிய விளம்பரம் நீக்கப்படுவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வளவு பெரிய நிறுவனத்துக்குச் சொந்த நம்பிக்கை மீதும் தத்துவங்கள் மீதும் தைரியமாக நிற்பதற்கு முதுகெலும்பே கிடையாதா?
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெரு மற்றும் சிறு தொழிலதிபர்களை மிரட்டிப் பணிய வைத்து வருகிறது. நூறாண்டுகளைக் கடந்து உயர்ந்து நிற்கும் டாடா நிறுவனம் முதுகெலும்பற்றதாகிப் போனது.
பஜாஜ் மற்றும் பார்லே ஜி நிறுவனங்களுக்கும் இதேபோன்று அழுத்தம் வந்தபோது, அவர்கள் பணிந்தா போனார்கள். இந்த விசயத்தில் டாடாவின் பயத்துக்குக் காரணம் என்ன? பத்திரிக்கையாளரும் பொருளாதார வல்லுனருமான அருண் ஷோரி கூறியதைப் போல், பல தொழிலதிபர்கள் அரசை எதிர்க்கப் பயப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் முதுகெலும்பு இருக்கும். ஆனால், தொழிலதிபர்களுக்கு அறவே இல்லை என்பது தான் உண்மை.
எனினும், குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, அதானி, அம்பானி மற்றும் டாடா ஆகிய 3 தொழிலதிபர்கள் தான் பலன் பெற்றார்கள். டாடா நிறுவனத்தைப் பொறுத்தவரை, அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் நிதி சமமாகக் கொடுக்கும். யாருக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக டாடா நிறுவனத்தின் செயல்பாடுகள் இன்று தலைகீழாக மாறிவிட்டன.
டாடா நிறுவனம் எவ்வளவு தைரியம் கொண்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. மகாராஷ்டிராவில் சரத் பவார் முதலமைச்சராக இருந்தபோது, சில தொழிற்சங்கங்களும், தீவிரவாதிகளும் மிரட்டினர். பவாரும் சமரச முயற்சி மேற்கொண்டார். ஆனால், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிவுடன் செயல்பட்டு வெற்றியும் கண்டது டாடா. சில ஆண்டுகளுக்கு முன்பு அசாமில் டாடா டீ நிறுவனத்தைத் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தினர். அப்போதும் தங்கள் நிலைப்பாட்டில் வலுவாக நின்றதோடு, அரசாங்கத்தோடு சமரசம் செய்து கொள்ளவும் டாடா நிறுவனம் மறுத்துவிட்டது.
ஆனால், தனிஷ்க் விளம்பரத்தை இன்று நிர்ப்பந்தத்தின் பேரில் வாபஸ் பெறும் நிலைக்கு ரத்தன் டாடா சென்றுள்ளார். டாடா நிறுவனம் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கிறது என்றே தெரிகிறது.
வெறுப்பு மற்றும் லாபம் என, இரண்டில் ஒன்றை எதிர்கொண்டாலும், குறைந்தபட்சம் ரத்தன் டாடா உறுதியாக நிற்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
குறிப்பு: பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.860 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டடத்தை ரத்தன் டாடா நிறுவனம் கட்ட ஒப்பந்தம் போட்டுள்ளது.