கடந்த 23-01-2021 அன்று கோயம்புத்தூரில் நடந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, பாஜக தலைமையிலான ஆட்சியில் ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு மற்றும் கொரோனா பாதிப்புக்குப் பிறகு எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தனர். நீங்கள் மட்டுமே எங்கள் குரலாக ஒலிக்க முடியும். எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று கதறினர்.
இந்த பிரச்சினையை நிச்சயம் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று அவர்களுக்கு ராகுல் காந்தி உறுதி அளித்தார். நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற நிம்மதி பாதிக்கப்பட்ட அவர்கள் முகத்தில் தெரிந்தது. அவர்களது எல்லா கேள்விகளுக்கும் ராகுல் காந்தி அளித்த பதில், காயப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுப்பது போல் இதமாக இருந்தது.
யாரிடம் சொல்வது? யார் கனிவுடன் கேட்பார்கள்? என்று ஏங்கிக் கொண்டிருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், ராகுல் காந்தியைப் பார்த்த பின், தங்கள் வேதனையையும், சுமையையும் இறக்கிவைத்துள்ளார். இந்த ஆட்சியில் படும் வேதனையைக் கேட்கக் கூட ஆள் இல்லாமல் தவித்தவர்களுக்கு, ராகுல் காந்தி வடிகாலாக இருந்தார். அனைவரது கேள்விகளையும் தாயன்புடன் செவிமெடுத்தார். நம்பிக்கையை பதிலாகக் கொடுத்தார்.
இறுதியில் பேசிய சென்னையைச் சேர்ந்த எம்எஸ்எம்இ தொழில்முனைவோர் தலைவர் கே.இ.ரகுநாதன், தாங்கள் சந்திக்கும் இன்னல்களை 4 நிமிடங்களில் ராகுல் காந்திக்குப் படம்பிடித்துக் காட்டினார். அவர் பேசியதிலிருந்து…
வணக்கம் ராகுல்ஜி!
நீங்கள் டெல்லியிலிருந்து வந்ததைப் போல் நான் சென்னையிலிருந்து உங்களுக்காக வந்துள்ளேன். உங்களிடம் தனிப்பட்ட நபராகப் பேசவில்லை. இந்திய கன்ஷார்ஷியம் அசோஷியேஷன் சார்பாக பேசுகிறேன். இந்தியா முழுவதும் எங்கள் அசோஷியேஷனில் 3 லட்சத்து 50 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
நான் 35 ஆண்டுகளாக குறு,சிறு, நடுத்தர தொழில்முனைவோராக இருக்கிறேன். என்ன பலன்? நாம் ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் என்று போய்க் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் இறுதியில் முடிவு எங்கே? ஃபண்ட் இந்தியா என்று இப்போது சொல்கிறார்கள். ஃபண்ட் இந்தியா என்றால் எஃடிஐ. இதன்மூலம் நாங்கள் வெளிப்படையாக மற்றவர்களிடம் பணம் கேட்கிறோம். எங்கே இருக்கிறோம் நாங்கள்? தொழில்முனைவோராகத் தொடரமுடியாமல் நாங்கள் நலிவடைந்துள்ளோம். 7 கோடி எம்எஸ்எம்இ தொழில்முனைவோரில் 30 சதவீதத்தின் ஏற்கெனவே செத்துவிட்டனர். 30 சதவீதம் என்பது என்ன? 2 கோடியே 10 லட்சம் பேர். இவர்கள் 20 கோடி பேருக்கு வேலைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.
இஜிசிஎல்எஸ் திட்டத்தின் மூலம், ஏழரை கோடியில் வெறும் 45 லட்சம் மட்டும் ஒதுக்கினால் என்ன பயன் கிடைக்கும். எங்கே இருக்கிறோம் நாங்கள். மீதமுள்ள 60 சதவீதத்தைப் பார்த்து எம்எஸ்எம்இ செழிப்பாக இருப்பதாக நினைக்கின்றனர். தொழில்முனைவோர் என்பதற்காக நாங்களே சுட்டுக் கொல்ல வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். எப்படி நாங்கள் முன்னேறுவது? என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன்? தொழில்முனைவோரிடம் கேளுங்கள், நாங்கள் 3 எம் பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். மணி (பணம்), மேன் பவர்(மனித ஆற்றல்), மெட்டீரியல்(மூலப்பொருள்). வங்கிகள் எங்களை விரட்டுகிறார்கள். என்பிஎஃப் விரட்டுகிறார்கள். எங்களால் நாளேடுகளை திறந்து பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு பக்கத்திலும் ஏல விற்பனை நோட்டீஸாக இருக்கிறது.கையகப்படுத்தும் நோட்டீஸ் இருக்கிறது. பெரிய ஆட்கள் எல்லாம் (SAFED) பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் மொத்தமாக (SHAVED) வழித்து எடுக்கப்பட்டுள்ளோம். நீங்கள் மட்டுமே எங்கள் ஒரே குரல். இதை மறக்காதீர்கள். நாட்டில் தொழிற்துறையில் 98 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான். இதற்காகத் தனி அமைச்சகமே உருவாக்க வேண்டும். 100 கோடி வணிகம் செய்யும் நிறுவனத்தோடு எங்களை ஒப்பிட முடியாது. குறுந்தொழில் என்பது சுயதொழில் செய்யும் மக்களைக் கொண்டது. நாங்கள் அவர்களை இழக்கிறோம். இன்றைக்கு எங்கள் கனவு பலியிடப்படுகிறது.
இன்று எங்களால் குரல் எழுப்ப முடியவில்லை. எங்கள் கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை. எங்கள் வலியைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தொழில்முனைவோர் எப்போதும் வெளிப்படையாகக் கதறியதில்லை. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாக நான் அழுதால், யாரும் என்னை நம்ப மாட்டார்கள், யாரும் என்னுடன் வணிகம் செய்ய மாட்டார்கள். தொழிலாளர்கள் என்னுடன் இருக்கிறார்கள். பணத்தால் மட்டும் அவர்களை வாங்காமல், இதயப்பூர்வமாகவும் அன்பாகவும் என் தொழிலாளர்களை நினைக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளாக இந்த நாட்டை கட்டமைத்துள்ளேன். இன்று நான் எங்கே போவது? நான் உங்களுக்குச் சொல்கிறேன் ராகுல், தொழில்முனைவோர் எல்லாம் வலியுடன் அழுது கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இந்த பிரச்சினையை எழுப்புங்கள். தயவுசெய்து எங்களுக்காகப் பேசுங்கள். கோயம்புத்தூருக்கு நீங்கள் வந்ததற்கு நன்றி. எங்கள் கோரிக்கைகளைக் கேட்டதற்கு நன்றி என்றார்.