(செப்டம்பர் 26: டாக்டர். மன்மோகன் சிங் பிறந்த நாள்)
நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சுங்குக்கு இன்று பிறந்தநாள். சாதிக்க ஆரவாரம் தேவையில்லை. அமைதி ஒன்றே ஆயுதம் என்பதை நிரூபித்த அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி தொடர்வோம்…
2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, 10 ஆண்டுகள் இந்திய பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்ததாக லண்டன் பொருளாதார பேராசிரியர் மைட்ரீஸ் காதக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான தலைமை இடைவெளி இங்கே முக்கிய பங்காற்றியிருக்கிறது. எதிர்காலத்தில் மன்மோகன் சிங் ஆட்சியின் உண்மையான பதிவுகளைப் பார்க்கும் போது, வரலாற்று ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
3 பேராசிரியர்கள் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்த தரவுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்துள்ளனர். ”சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா வலுவான வளர்ச்சி அடைந்தது இந்த 10 ஆண்டுகளில் தான்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும்போது, கிராமங்களில் கிடைக்கும் ஊதியமும் அதிக அளவுக்கு அதிகரிக்கும். அமைப்பு சார்ந்த துறையில் ஊதிய வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்திருந்தாலும், பங்குச் சந்தையின் சாதனை ஜல்லிக்கட்டு காளையின் வேகத்துக்கு இருந்தது.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்தன. பிரதமர் பதவிக்குப் பலர் போட்டியிட்ட போதும், மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்தார்.
நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சுவாரஸ்யமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் பிரணாப் முகர்ஜி தான் என்று அவர் நினைத்திருந்தார். இதனை சமீபத்தில் மன்மோகன் சிங் வெளியிட்டிருந்தார். எனினும், அப்போது பிரதமராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டதே சரி என்பதையும், அதனால் ஏற்பட்ட பலன்களையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
தங்கள் நலனுக்காக கவர்ச்சி அரசியல், வெகுஜன ஆதரவு, வலுவான தலைவர் என்ற பெயர், அரசியலில் புத்திசாலித்தனம் என்று அரசியல்வாதிகள் தங்களை கட்டமைத்துக் கொள்வது நம் நாட்டின் வழக்கமான ஒன்றாகும்.
எனினும், இதை எல்லாம் தவிடுபொடியாக்கி, தன்னாலும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் மன்மோகன் சிங். முதல் ஐந்தாண்டு ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்தது.
பொருளாதார சீர்திருத்தங்களை செய்தபடியே, இத்தகைய திட்டங்களையும் மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தியது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசியல் கவர்ச்சி தேவையில்லை என்பதை நிரூபித்தவர் மன்மோகன் சிங். அமைதியாகவே இருந்து முக்கிய முடிவுகளை எடுத்தார். அந்த முடிவுகள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்ததை, வரலாறு என்றென்றும் பதிவு செய்து கொண்டே இருக்கும்.