கொரோனாவை நேரடியாக களத்தில் எதிர்த்துப் போராடி உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது, உயிர்த்தியாகம் செய்த அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே, ”சுகாதாரத்துறை என்பது மாநிலங்களுக்குப்பட்டு வருவதால், மத்திய அரசிடம் அது குறித்த தரவுகள் இல்லை” என்று கூறியிருந்தார்.
”தரவுகளே இல்லாத மோசமான மோடி அரசு” என்று தலைப்பிட்டு, டவிட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
”சுகாதாரப் பணியாளர்களுக்காக கை தட்டுவதையும், விளக்கேற்றுவதையும் விட, அவர்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் மிகவும் முக்கியம்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ”மோடி கூறிய கொரோனா போராளிகளை, அவரே ஏன் அவமானப்படுத்துகிறார்” என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சவ்பே தொடர்ந்து பேசிய போது, ”கொரோனாவால் உயிரிழப்போருக்கான பிரதமரின் காரீப் கல்யாண் காப்பீட்டு திட்டத்தின் தரவுகளின்படி, தேசிய அளவில் 64 டாக்டர்கள் உள்ளிட்ட 155 சுகாதாரத்துறைப் பணியாளர்கள் இறந்துள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை மாநில ஆளுகைக்குட்பட்டு வருகிறது என்று கூறும் மத்திய அரசு, மேற்கண்ட தரவை எங்கிருந்து பெற்றது. இதைத் தான் தரவுகள் இல்லாத மோசமான மோடி ஆட்சி என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில் உயிரிழந்தவர்களின் பட்டியலை தருமாறு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில்வே அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு ரயில்வே அமைச்சகம் சரியான பதில் அளிக்கவில்லை. இந்த தரவுகள் மாநில காவல் துறையிடம் இருப்பதால், அவர்களிடமே மனு செய்து விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வமான உயிரிழந்தோர் பட்டியல் கிடைத்தால் தான், உறவினர்கள் இழப்பீடு கோர முடியும் என்ற உண்மை தெரிந்திருந்தும், ரயில்வே அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிப்பதாக, உயிரிழந்தோரின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதேபோல், பிஎம் கேர்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. பிஎம் கேர்ஸுக்கு வரும் நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்த தரவுகள் இல்லாமலா இருக்கும்.
தரவுகள் என்றாலே மோடி அரசு நடுங்குவதற்கு காரணம் என்னவோ?