”கொள்ளையடிக்கவே அதிகாரம்”.
– கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான் இது.
விவசாயிகளுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றவே அதிகாரம் கிடைத்துள்ளதாக பாஜக நினைக்கிறது. விவசாயச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசம் அளிக்காமல், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை இப்படி வெளிப்படுத்தினார் அம்ரா ராம்.
உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம்:
இந்தச் சட்டத்தின்படி, பயிர் அறுவடை முடிந்ததும் தானியங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த வியாபாரிக்கும் விவசாயி விற்கலாம். அவர்கள் பகுதியில் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் சந்தை குழுவில்தான் விற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ‘ஒரு நாடு, ஒரு சந்தை’ என்ற வகையில், இதனை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் குறித்த விவசாயிகள் ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம்:
இந்த சட்டத்தின்படி, தனது பயிரின் தரத்துக்கேற்ப பயிர்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் விவசாயி கையெழுத்திட வேண்டும். விவசாயிகளின் இழப்பை இது குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம்:
பணக்காரர்களும் வணிகர்களும் முன்பு பயிர்களை மலிவு விலையில் வாங்கி, அவற்றை அதிக அளவு சேமித்து, கள்ளச் சந்தையில் விற்று வந்தனர். இதனைத் தடுக்க 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த அவசரச் சட்டம் தேசியப் பேரிடர் அல்லது அவசரக் காலத்தில் பொருந்தாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 அவசரச் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய உற்பத்தி சந்தைக்குழு குறிப்பிடும் வெளிமார்க்கெட்டுகளில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் விற்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தைச் செயல்படுத்த முயல்கிறார்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் நீக்கப்பட்டுள்ளதோடு, இருப்பு வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன.
வெளிச்சந்தையில் விளைபொருட்களை விற்க விவசாயிகளை
அனுமதிப்பதால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயல்கிறது. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை.
விவசாயப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் முறை வலுவிழந்து போகும் என்கிறார்கள் விவசாயிகள். அதோடு, தனியார்த் துறையினரின் கருணைப் பார்வையில் வாழ வேண்டியிருக்கும் என்பதும், சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, உணவு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் வரும் என்பதும் விவசாயிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.
இது குறித்து விவசாயிகள் தலைவர் அம்ரா ராம் கூறும்போது, ”சாதாரண மக்களின் நலனைப் பற்றி பாஜக அரசுக்குக் கவலையில்லை. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே இந்த விவசாயச் சட்டங்கள் வழிவகுக்கும்” என்றார்.