பொது முடக்கத்துக்குப் பிறகு, நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம், வேலை இழப்பு, பசி, பட்டினி அதிகரித்திருக்கிறது. அதற்கு இணையாக பிரதமர் மோடியின் தாடியும் அதிகரித்திருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகின்றது.
கொரோனாவை ஒழிக்க கடந்த 9 மாதங்களாக இரவு, பகலாகப் பிரதமர் உழைத்துக் கொண்டிருப்பதால், தாடியைக் குறைக்க நேரம் இல்லை. மக்களுக்காகக் கண் அயராமல் பாடுபடும் பிரதமர் மோடிக்கு தாடியை குறைக்கவோ, அல்லது வழிக்கவோ நேரமில்லை…
மோடியே சொல்லாவிட்டாலும்,ஊதுகுழல் ஊடகங்கள் பல இப்படிச் சொன்னாலும் ஆச்சரியமில்லை. 2020 ஆம் ஆண்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, மோடியின் தாடியும் இருக்கும் என்று நம்பலாம்.
மோடியின் ‘கெட்-அப்’ மாறிக் கொண்டிருப்பதால், இதனை கார்ட்டூனிஸ்ட்கள் எவ்வாறு கையாளுகிறார்கள்? முந்தைய மோடி, தற்போதைய மோடி என்று வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் கார்ட்டூனிஸ்ட்கள்.
இ.பி.உன்னி (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

நரேந்திர மோடியின் தாடி, ரவீந்திரநாத் தாகூரின் தாடியைப் போலவே இருக்கிறது. மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு, இந்த தாடி இருக்குமா? என்று பார்க்கலாம். முடியும் அதிகமாக வளர்ந்திருக்கிறது. அதற்கேற்றாற் போல் எங்களைப் போன்ற கார்ட்டூனிஸ்ட்களும் வேகமாக செயல்பட வேண்டியுள்ளது.
எனது கார்ட்டூன்களில் மோடியின் உருவம் ஆண்டுக்கு இருமுறையாவது மாறிக் கொண்டேயிருக்கும். 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது தான், கார்ட்டூன்களில் அதிகளவில் மோடி இடம் பிடித்தார். அப்போதும் வயதானவர் தோற்றத்தில் தான் இருந்தார். ஒருவேளை குஜராத் கார்ட்டூனிஸ்ட்கள் அவருக்கு அருகிலேயே இருந்ததால், முதலமைச்சராக இருந்த மோடியிடம் மாற்றங்களை அறிந்திருக்கலாம்.
பிரதமரானதும் அவரது நடை, உடை அனைத்தும் மாறின. அவன் பயன்படுத்தும் பொருட்கள் கூட மாறின. மோடியின் முகத்தை வரைவது ஒன்றும் கடினமில்லை. ஆனால், அந்த முகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதுதான் பிரச்சினை.
சதீஷ் ஆச்சார்யா :

பொதுவாக நான் கேலிச்சித்திரம் வரையும் போது, சம்பந்தப்பட்டவரின் சில படங்களை வைத்துக் கொண்டுதான் வரைவேன். எடிட்டோரியல் கார்ட்டூன் வரையும் போது, சாதாரணமாக வரைவேன். பல கார்ட்டூன்களில் நான் அவர்களது படங்களை சரிபார்ப்பது கிடையாது. ஆனால், மோடியின் சமீபத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தே, அவரது முகத்தில் மாறுதல் செய்கிறேன். இது தொடர்பாக அவ்வப்போது மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறேன்.
நம் நாட்டுத் தலைவர்களின் முகங்கள் மெதுவாகத்தான் மாறும். ஆனால், மோடியைப் போல், முகத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் தலைவர்கள் யாருமே இல்லை. டீக்காரர் தோற்றம் என்ன ஆனது என்று கேட்டு சில சமயங்களில் மக்கள் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால், எல்லா கேள்விகளுக்கும் பாஜகவின் ஐடி பிரிவு பதில் அளிப்பதில் கவனம் எடுத்துக் கொள்ளும்.
மஞ்சுல் :

முதலமைச்சராக இருந்தபோது தான் மோடி வெளிச்சத்துக்கு வந்தார். அப்போது அவர் முற்றிலும் வித்தியாசமாக இருப்பார். அவர் முகம் இறுக்கமாக இருக்கும், முகத்திலும் பிரகாசம் இருக்காது. ஒரு நபர் தன்னை மாற்றிக் கொள்ளும்போது கார்ட்டூனையும் மாற்ற வேண்டியுள்ளது. அது அந்தந்த தலைவர்களைப் பொறுத்தது.
பொது முடக்கத்தை அறிவித்தபோது, அவரது தாடி சிறிதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தனக்கு சிகை அலங்காரம் செய்பவரை மோடி தவிர்த்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால், 9 மாதங்களில் தாடி வளர்ந்து கீழே வரை வந்திருக்கிறது. நீங்கள் இப்போது கிறிஸ்துமஸ் தாத்தாவை வரைந்தால், அதை மோடி என்றே மக்கள் நினைப்பார்கள்.
மோடியை வரைவது மிக எளிது. ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அதை வைத்துத்தான் வரைவோம். மோடிக்கு தாடியே அடையாளம்.