இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரைவிட, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கட் -ஆஃப் மதிப்பெண்களை குறைத்ததில் எந்த தவறும் இல்லை என, யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், குடிமைப் பணி தேர்வுகளில் எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதி பிரிவினருக்கு கட் -ஆஃப் மதிப்பெண்களை குறைவாக நிர்ணயித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வுகளுக்கு அடிப்படைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகம் என்ற 3 கட்டங்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்களை யூபிஎஸ்சி நிர்ணயித்தது. அதன்படி, அடிப்படை தேர்வுக்கு 98 மதிப்பெண்களும், பிரதான தேர்வுக்கு 751 மதிப்பெண்களும் மற்றும் நேர்முத்தேர்வுக்கு 961 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டன. அதேசமயம், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு முறையே 90, 696 மற்றும் 909 என்று கட் -ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதர பின்தங்கியோருக்கு முறையே 95.3, 718 மற்றும் 925 என கட்ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. முறையே 82, 706 மற்றும் 898 என எஸ்சி., வகுப்பினருக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. பழங்குடியினத்தவருக்கு 77.3, 699 மற்றும் 893 என கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.
இவ்வாறு கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயித்தது, பொருளாதாரத்தில் நலிந்த உயர் சாதியினரை, தேர்வில் எளிதில் வெற்றி பெற வழி ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும் பின்பற்றப்பட்டு வந்தது. முதல்முறையாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு 10 இடஒதுக்கீட்டை குடிமைப் பணி தேர்வுகளில் யூபிஎஸ்சி அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் யூபிஎஸ்சிக்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள யூபிஎஸ்சி, தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்கள், சட்டவிரோதமோ அல்லது அரசியல் ரீதியாக தவறானதோ அல்ல என்று கூறியுள்ளது.
வங்கித் தேர்வுகள், மத்திய அரசின் துறைகளுக்கான தேர்வுகள் தொடங்கி. இப்போது குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூக நீதிக்கு ஆபத்து வந்துள்ளது. முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்ததன் விளைவுகள் தான் இவை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசியல் சட்டத்திலேயே இல்லாத பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உயர் சாதியினருக்கு அளித்துள்ள பிரதமர் மோடி, எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டி நியாயம் வழங்க வேண்டும் என்றும், ஆய்வு நடத்தி நேர்ந்திருக்கும் தவறுகளை களைந்து நீதி வழங்கவேண்டும் என்றும் நாடு முழுவதும் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.