கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் காவேரி, பொருளாதாரப் பட்டப்படிப்பில் மைசூர் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
காவேரியால் இன்று கர்நாடக காவல் துறையே பெருமை அடைந்துள்ளது என்றே சொல்லலாம்.
விவசாயியின் மகளான காவேரியின் குடும்பம் வறுமையில் தவித்துக் கொண்டிருந்தபோது, 2 மாதங்களுக்கு முன்புதான் காவலர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பே பல்கலைக்கழக தேர்வை எழுதிவிட்டார்.
அதன் முடிவுகள் வெளியானபோது, பொருளாதாரப் பாடத்தில் மட்டும் 91 சதவீதம் பெற்று காவேரி தேர்ச்சி பெற்றார். எல்லா பாடங்களிலும் சேர்த்து 83 சதவீதம் பெற்ற காவேரிக்குப் பணமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 4 தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
மைசூர் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற காவேரிக்குக் காவல் துறை உயரதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்து, அவரது கடின உழைப்பைப் பாராட்டினர். மேலும், காவேரிக்குக் கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ் குமாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காவலர் பணியிலிருந்து கொண்டே, உதவி காவல் ஆய்வாளர் பணிக்கோ அல்லது வேறு அரசுப் பணிக்கோ தேர்வு எழுதப்போவதாகக் கூறுகிறார் காவேரி. சொல்லும்போதே காவேரியின் முகத்தில் நம்பிக்கை கரைபுரண்டோடியது.