தேர்தலில் இதுவரை போட்டியிடாதவர்கள் தான் காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என கோருவதாக, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜகார் குற்றம் சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்புத் தேர்தலை நடத்தக் கோரி, இடைக் காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களை, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜகார் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதன் மூலம், அவர்களது பாதுகாப்பின்மையும் அரசியல் நோக்கமும் வெளிப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் மற்றும் கட்சி அமைப்புத் தேர்தல் 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். எனினும், சில தலைவர்கள் தொடர்ந்து தேவையற்ற அறிக்கைகளை விடுப்பது துரதிஷ்டவசமானது.
கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தும் தலைவர்கள், இதற்கு முன்பு கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிடாதவர்களாக உள்ளனர். கடைசியாக எப்போது போட்டியிட்டோம் என்பது கூட, அவர்களுக்கு தெரியாது.
இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்துவதன் மூலம், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தியை குற்றம் சாட்டுவது மட்டுமே கடிதத்தில் கையெழுத்திட்ட 23 பேரின் எண்ணமாக உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் கீழ் அமைப்புகளில் இருந்து தேசிய அளவிலான அமைப்புகள் வரை தேர்தல் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். இது இரட்டை வேடம் இல்லையா?
இத்தகைய தேர்தல்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்தாதா? அறிக்கையை வெளியிடும் முன்பு, இது பற்றி தீவிரமாக ஆலோசித்திருக்க வேண்டாமா? தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே, சில தலைவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற இந்த தலைவர்கள்தான், காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிக்க சோனியா காந்திக்கு முழு அதிகாரம் அளித்தனர். இவர்கள் தான் இப்போது கட்சி அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்துப் பேசுகிறார்கள்.
சில தலைவர்கள் உண்மையிலேயே நம்பிக்கையை இழந்து விட்டனர். கட்சியால் எவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளோம் என்பதை மறந்துவிட்டார்கள். இத்தகைய உயர்ந்த நிலை, கட்சியில் அவர்களது அனுபவம் மற்றும் பங்களிப்பு காரணமாகவே ஏற்பட்டது.
கூட்டுத் தலைமை குறித்து சில தலைவர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே கட்சியின் கூட்டுத் தலைமையின் ஓர் அங்கமாகவே இருக்கிறார்கள்.
கட்சியில் நானும் ஜனநாயகத்தின் ஆதரவாளர்தான். கட்சிக்குள்ளேயே வழக்கமான சமரசம் இருக்க வேண்டும். அதை செயல்படுத்துவதற்கான முறைகள் பரஸ்பர கலந்துரையாடல் மூலம் அமைய வேண்டும் என்றார்.