இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அரசின் ஆசியுடன் எதிர்க்கட்சிகளைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம், அரசுக்கும் சில தனியார் தொலைக்காட்சிகளுக்கும் இடையேயான உறவுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தமது ரிபப்ளிக் தொலைக்காட்சிக்குப் போலியாக டிஆர்பி ரேட்டை அதிகரித்துக் காண்பிப்பது தொடர்பான அர்னா கோஸ்வாமியின் உரையாடலை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வாட்ஸ்அப் உரையாடல் மூலம் டிஆர்பி முறைகேடு மட்டும் வெளிவரவில்லை, மாறி வரும் இந்திய ஊடகங்களின் இயல்பும் வெளிப்பட்டிருக்கிறது.
அர்னாப் கோஸ்வாமி போன்ற ஊடக நெறியாளர்கள் தங்களை நாட்டின் மனசாட்சியின் காவலர்களாக நினைத்துச் செயல்படுகின்றனர். யாரையும் கேள்வி கேட்க தங்களுக்கு உரிமை உள்ளதாக நினைத்துக் கொள்கின்றனர். இவர்களது தொலைக்காட்சியை ஏராளமானோர் பார்ப்பதாக மக்கள் நினைத்துக் கொள்கின்றனர்.
இவர் விவாதம் நடத்தும் விதம் அடிக்கடி அசிங்கமான நிகழ்வாகியிருக்கிறது. பாஜக செய்தி தொடர்பாளரைப் போல் உரக்கக் கத்துவது அர்னாப் கோஸ்வாமியின் வழக்கம். பாகிஸ்தான் விவகாரம், பயங்கரவாதம், தேசியவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளில் தன் எஜமானர்களுக்குச் சேவை செய்யும் விதமாகத் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார்.
அதேசமயம், தப்ளிக் ஜமாத் விவகாரம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மற்றும் பாலிவுட் போதைப் பொருட்கள் விவகாரங்களில் அளவுக்கு மீறிச் செயல்பட்டார். பொது முடக்கத்தின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம், வேலை இழப்பு மற்றும் பசி, பட்டினியைப் புறக்கணித்துவிட்டு, நடிகர் சுஷாந்த் தற்கொலையை தமது தொலைக்காட்சியில் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தவர்.
மகாராஷ்டிரா முதலமைச்சர், அவரது மகன், மும்பை காவல் துறையினர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆகியோர், நடிகர் சுஷாந்தை கொலை செய்தவர்களைக் காப்பாற்றுவதாகக் குற்றம் சாட்டினார். அவரது நிகழ்ச்சிகள் தெருச் சண்டை போல இருக்கும். இப்படிப்பட்ட அர்னாப் தான், இன்றைக்கு பிஏஆர்சி தலைவர் பார்த்தோ தாஸ்குப்தாவுடன் இணைந்து டிஆர்பி ரேட்டிங் முறைகேட்டில் ஈடுபடச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அர்னாப்பும் பார்த்தோ தாஸ்குப்தாவும் நடத்திய வாட்ஸ்அப் உரையாடலில், அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பதைப் போல் காட்டிக் கொள்கிறார். பால்கோட் விமானத் தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற அரசின் முக்கிய முடிவுகள் இவருக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதை இந்த வாட்ஸ்அப் உரையாடல் வெளிப்படுத்துகிறது.
பொதுத் தேர்தலில் பாஜகவும், நரேந்திர மோடியும் வெற்றி பெறக் காரணமான புல்வாமா தாக்குதல் மற்றும் பால்கோட் விமானத் தாக்குதல் பற்றி தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அர்னாப் கோஸ்வாமி கூறியிருக்கிறார். இதன்மூலம், புல்வாமா தாக்குதலும், பால்கோட் தாக்குதலும் அரசியல் லாபத்துக்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் அதிகார வர்க்கத்துடன் நெருக்கமாக இருப்பதையே விரும்புகிறார்கள். இந்த போக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. முக்கியமான நபர்களுடன் நெருக்கமாக இருப்பதற்காக கோஸ்வாமியை மட்டும் குறைசொல்ல முடியாது.
இந்த நெருக்கத்தால் என்ன பலன் கிடைக்கிறது என்பது தான் மாறுபட்ட கேள்வி ; விடா முயற்சி, தொழில்முறை வேலை மற்றும் பரஸ்பர மரியாதையால் நம்பிக்கை பாதுகாக்கப்படுகிறதா? அல்லது ஒருவருக்கொருவர் சேவை செய்வதால் நம்பிக்கை பாதுகாக்கப்படுகிறதா? என்பது தான் கேள்வி. இதற்கு விடை கிடைத்தால், இந்த ஊடகங்கள் அரசாங்கத்திடம் செல்வாக்கு பெற எந்தளவுக்கு வால் பிடிக்கிறார்கள் என்பது புரியும்.
நாட்டின் முக்கிய ராணுவ ரகசியமான பால்கோட் தாக்குதல், அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிகிறது என்றால், அது கேள்விக்குட்பட்டதே. தேசியப் பாதுகாப்புடன் சமரசம் செய்து கொள்ளப்பட்டதா? பாதுகாப்பு மீறலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? சிறிய ராணுவ விஷயத்தைக் கசியவிட்டாலே மக்களைச் சிறையில் போடுகிறார்கள். இந்த வாட்ஸ்அப் உரையாடலுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?
கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தி ஊடகங்கள் மாறிப் போயிருக்கின்றன. பல பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி உரிமையாளர்களாக மாறியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு பெரும் தொழிலதிபர்களுடனும், அரசுடனும் தொடர்பு இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களும் ஆசிரியர்களும் ஒரு சார்பு செய்திகளுக்கு என்றுமே துணை போக மாட்டார்கள். ஆனால் இன்று, குறிப்பாக 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு, ஆட்டத்தின் விதிகளே மாறிப்போயிருக்கின்றன.
தேசப்பற்றும், தேசிய இதழியலும் அர்னாப்கேட் என்ற ஹேஸ்டேக் மூலம் சுக்குநூறாக நொறுங்கிப் போய்விட்டன. இது இந்திய ஊடகங்களுக்கான முக்கியமான எச்சரிக்கை சமிக்ஞையாகும். இதே போன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.