கடந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி புதிய விவசாயச் சட்டங்களை எதிர்ப்பதிலேயே இந்திய விவசாயிகள் செலவிட்டுள்ளனர். ஒரு வருடத்துக்கு விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்காக மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் கூறுகிறார். இது குறித்து ஆய்வு செய்ய கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் மத்திய அரசு பிரயோகித்துவிட்டது. தங்கள் உரிமைக்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கையே பரிசீலிக்காமல், அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் கட்டமைப்பதிலேயே குறியாக உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைத்தது அரசாங்கத்தின் வியூகங்களுக்குக் கிடைத்த தோல்வியே. சிறு அளவிலான விவசாய சமுதாயம் நடத்தும் போராட்டம் தான். அதனை எளிதில் கையாளலாம் என்பது பாஜகவின் எண்ணம்.
ஆனால், அரசு எதிர்பார்த்ததை விடப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. டெல்லி எல்லைக்கு வெளியே 40 கி.மீ தொலைவுக்கு டிராக்டர்கள் அணிவகுத்து நின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளே இதில் திரளாகப் பங்கு பெற்றனர்.
எந்த ஒரு போராட்டமும் நீண்ட காலத்துக்கு நீடிப்பது சமுதாய நலனுக்கு ஏற்றதல்ல என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறுகிறார். பாஜக கொள்கையின் பிறப்பிடமான ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த போராட்டம் விரைவாக முடிய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் டோமர் கூறும்போது, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தால், அது இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். இதற்கு எல்லாம் விவசாயிகள் மயங்கிவிடவில்லை. விவசாயச் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்பதே, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரமே என்பதால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இது அரசு மீதான விவசாயிகளின் நம்பிக்கைக்குத் தொடர்பான விஷயம். மீண்டும் இந்த சட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள் என்பது என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத். 3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 6 மாதங்கள் ஆனாலும் நாங்கள் போராட்டத்தை விடப்போவதில்லை என்பதே விவசாயச் சங்கங்களின் திட்டவட்டமான முடிவு.
5 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக இந்த புதிய விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைத்தால் தொடர்ந்து பேசலாம் என்பதும் விவசாயிகள் வைத்துள்ள முக்கிய யோசனை.
புதிய விவசாயச் சட்டங்களைத் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி என விமர்சிக்கின்றனர் விவசாயச் சங்கங்கள்.
டெல்லி காவல் துறையினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிராக்டர் பேரணியை அனுமதிப்பது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சங்கடம் என அரசு சொல்லிக் கொண்டிருந்தது. உத்தரப் பிரதேச அரசோ, ஒரு வாரத்துக்கு முன்பே டிராக்டர்களுக்கு டீஸல் விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டது.
இதன்பிறகும், டிராக்டர் பேரணிக்கு அனுமதி தரப்பட்டது. அரசு தரப்பு மற்றும் விவசாயிகள் தரப்பில் முதல் முறையாக அடுத்த சந்திப்புக்கான தேதியை முடிவு செய்யவில்லை. பேச்சுவார்த்தையை கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் முறியடிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அமைதியாக வந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதற்கு தாங்கள் காரணமில்லை என விவசாயிகள் மறுத்து வருகின்றனர். எனினும், போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய, இந்தக் கலவரத்தைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. எனினும், 3 புதிய விவசாயச் சட்டங்களை முழுமையாகத் திரும்பும் வகையில், வேறு வடிவத்தில் தங்கள் போராட்டம் நடைபெறும் என விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடும் பனியிலும் கடந்த 2 மாதங்களாக டெல்லியில் விவசாயச் சங்கங்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், 3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக நிராகரிப்பதிலிருந்தே, மோடியின் தந்திரம் தங்களுக்குப் புரிகிறது என்கின்றனர் விவசாயிகள்.