3 விவசாயச் சட்டங்களும் தவறானவை. அதேநேரத்தில், விவசாயிகளின் உண்மையான அச்சங்களை நிவர்த்தி செய்ய இன்னும் பல தேவையான அம்சங்களைச் சட்டத்தில் இடம்பெயரச் செய்ய வேண்டும்.
விவசாயச் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகளின் போராட்டம் வெடித்ததும், டெல்லியில் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.
ஏராளமான தனியார் சந்தைகள் அமைக்கப்பட்டு, இடைத்தரகர்கள் இல்லாமல் செய்யப்படும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சுதந்திரமாக நல்ல விலைக்கு விற்கலாம் என்பதே மத்திய அரசின் முக்கிய வாதமாக இருக்கிறது. ஆனால், போராடும் விவசாயிகள் இதனை ஏற்கவில்லை. விவசாயச் சந்தைகளில் கார்பரேட்கள் நுழைந்தால் விளைபொருட்களின் விலை குறைந்துபோகும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள். அதோடு, இறுதியாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறையை அரசு நீக்கிவிடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளையும், அவற்றின் சாதகங்களையும் பார்ப்போம்: தற்போது, 2020 ஆம் ஆண்டு விவசாய உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகச் சட்டத்தின் மீதே (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அனைவரது பார்வையும் உள்ளது.
கூடுதல் மண்டிகளின் தேவை
விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் மண்டிகள் கிராமப்புறங்களில் ஏகபோகமாக இருப்பதாக, இந்த சட்டத்தின் முக்கிய அனுமானமாக உள்ளது. இந்த அனுமானமும் சந்தேகத்துக்குரியதே. 29 சதவீத நெல்லும், 44 சதவீத கோதுமையும் அறுவடைக்குப் பின் மண்டிகளிலேயே விற்கப்படுவதாகவும், 49 சதவீத நெல் மற்றும் 36 சதவீதம் கோதுமை உள்ளூர் தனியார் வர்த்தகர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலமே விற்கப்படுவதாக அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அறுவடை செய்யப்படும் விளைபொருட்களின் பெரும்பகுதி நேரடியாக மண்டியில் விற்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெளிச் சந்தையில் விற்க வேண்டும் என, கட்டாயப்படுத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, போதுமான மண்டிகள் நம்மிடம் இல்லை. 1976 ஆம் ஆண்டு இந்தியாவில் 4,145 பெரிய விவசாயச் சந்தைகள் இருந்தன. அப்போது, 775 கி.மீ தொலைவுக்கு 2 மண்டிகள் இருந்தன. ஒவ்வொரு இந்திய விவசாயியும் மாட்டு வண்டியில் விளைபொருட்களை ஒரு மணி நேரத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாய தேசிய ஆணையம் பரிந்துரைத்தது. அதன்பின், 80 கி.மீ தொலைவுக்கு 2 மண்டிகள் எனக் குறைக்கப்பட்டன. அப்போது, மண்டிகளின் எண்ணிக்கையும் குறைந்தபட்சம் 41 ஆயிரமாக உயர்த்தப்பட்டன. ஆனால், 2019 ஆம் ஆண்டு மண்டிகளின் எண்ணிக்கை 6,630 ஆகக் குறைக்கப்பட்டன. அதாவது, 463 கி.மீ தொலைவுக்கு 2 மண்டிகளாகக் குறைக்கப்பட்டன. அதேசமயம், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் குறைந்தது 10 ஆயிரத்து 130 மண்டிகள் இருக்க வேண்டும் என, அரசு நியமித்த குழு பரிந்துரைத்தது. அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவுக்கு நிறைய மண்டிகள் தேவை என்பது மட்டும் புரிகிறது.
இரண்டாவதாக, மிகவும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மண்டிகளுக்கு விளைபொருட்களைக் கொண்டு சென்றால் ஏற்படும் போக்குவரத்துச் செலவு அவர்களால் தாங்கக்கூடியது அல்ல. அதனால், குறைந்த விலை கிடைத்தாலும், கிராமத்தில் உள்ள வர்த்தகரோடு தங்கள் விற்பனையை முடித்துக் கொள்கின்றனர். மண்டிகளுக்குப் பதிலாகத் தனியார் சந்தைகள் வந்தால்கூட, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கிராம வர்த்தகரிடம் விளைபொருட்களை விற்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பண்ணை அளவிலான பொருளாதாரம் கணிசமாக உயர்ந்தால் மட்டுமே நிலைமை மாறும்.
வெளிச் சந்தையில் விவசாயப் பொருட்களைச் சுதந்திரமாக விற்கும் முறை ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ளது. விவசாய உற்பத்தி சந்தைக் குழுவிற்கு வெளியே தனியார் விவசாயச் சந்தைகள் செயல்பட ஏற்கனவே 18 மாநிலங்கள் அனுமதியளித்துள்ளன. விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய 19 மாநிலங்கள் அனுமதித்துள்ளன. விவசாய உற்பத்தி சந்தைக் குழுவுக்கு வெளியே விவசாயச் சந்தைகளை அமைக்க 13 மாநிலங்கள் அனுமதித்துள்ளன. இது போன்ற சட்டங்கள் இருந்தாலும், இந்த மாநிலங்களில் தனியார் சந்தைகளை நிறுவுவதற்குக் குறிப்பிடத்தக்கத் தனியார் முதலீடுகள் எதுவும் வரவில்லை. சில பயிர்களுக்கு மட்டுமே தனியார் சந்தைகள் முக்கியத்துவம் கொடுத்தன. மாநிலங்களின் இத்தகைய அனுமதி அர்த்தம் இல்லாமல் போனது.
உற்பத்திச் சேகரிப்பு மற்றும் திரட்டலில் அதிக பரிவர்த்தனைச் செலவுகள் இருப்பதுதான், சந்தைகளில் மோசமான தனியார் முதலீட்டுக்குக் காரணம். மண்டிகள் மற்றும் கிராம வர்த்தகர்களின் பங்களிப்பைத் தனியார்த் துறையினர் ஏற்க முயற்சிக்கும் போது, சேகரிப்பு மையங்களைத் திறப்பதிலும், சம்பளம், தரம் மற்றும் போக்குவரத்து எனக் கணிசமான செலவு செய்ய வேண்டியிருக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, செலவுகளும் அதிகமாக இருக்கும். கார்பரேட் சில்லறை வணிகர்கள் நகர்ப்புற விற்பனை மற்றும் சேமிப்பகத்தில் கூடுதல் செலவுகளை எதிர்கொள்கின்றனர். அத்துடன் நஷ்டப்படும் அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர். இதனால் தான் விவசாயிகளிடம் நேரடியாகப் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதைவிட, மண்டிகளில் வாங்குகிறார்கள்.
பரிவர்த்தனைச் செலவு
தனியார் சந்தைகள் அமைக்கப்பட்டாலும், பரிவர்த்தனைச் செலவுகள் மண்டியில் விதிக்கப்பட்ட வரியைவிடக் குறைவாக இருக்க வழியில்லை. எனவே, தனியார் சந்தைகள் மூலம் விவசாயிகள் அதிக விலையைப் பெற முடியும் என்ற உத்தரவாதம் கிடையாது என்ற முடிவுக்கு வரமுடியும். தற்போதுள்ள தனியார் சந்தைகளிலும், மண்டிகளைவிட விவசாயிகள் அதிக விலை பெற்றதற்கான சான்றுகள் இல்லை. பரிவர்த்தனைச் செலவுகள் மண்டியில் விதிக்கப்படும் வரியை விட அதிகரிக்கும்போது, விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் குறைந்த விலையே கிடைக்கும் என்பதுதான் உண்மை. இதனால், தற்போதைய நிலையை விட வலுவான அழுத்தத்தை விவசாயிகள் சந்திக்க நேரிடும்.
மண்டியில் விதிக்கப்படும் வரிகள் வீண் என்று பல விமர்சனங்கள் வருகின்றன. இதில் உண்மையில்லை. மண்டியில் விதிக்கப்படும் வரியின் பெரும் பகுதி, விவசாய உற்பத்திச் சந்தைக் குழுவின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த மறு முதலீடு செய்யப்படுகிறது. மண்டி வரியைக் குறைத்தால், விவசாயி உற்பத்தி சந்தைக் குழுவிற்கான இது போன்ற முதலீடுகளில் உபரி குறைந்துவிடும்.
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சந்தைக் குழுக் கட்டணம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தைக் கிராமப்புறச் சாலைகள், சுகாதார மையம் மற்றும் கால்நடை மருத்துவமனை, குடிநீர் விநியோகம், தூய்மைப் பணி, கிராமப்புற மின் மயமாக்கல் விரிவாக்கம் மற்றும் இயற்கைச் சீற்றங்களின் போது விவசாயிகளுக்கு உதவவும், இந்த வருவாயைப் பஞ்சாப் மண்டி வாரியம் பயன்படுத்துகிறது. மண்டிகள் பலவீனமடைந்தால், இதுபோன்ற கிராமப்புற முதலீடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலையின் தலைவிதி
குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசைப் பொருத்தவரை காகித அளவிலேயே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பலவீனப்படுத்தும் வகையிலேயே பல கொள்கைகளின் சமிக்ஞைகள் உள்ளன.
முதலாவதாக, விவசாயத்தில் உள்ளீடு மற்றும் தொழிலாளர் செலவுகள் கடுமையாக உயர்கின்றன. எனவே, வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்திக் கொண்டே போவது அவசியமாகிறது. எனினும், கடந்த காலங்களைவிட, கடந்த 6 ஆண்டுகளாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை விகிதம் மெதுவாகவே உயர்ந்துள்ளது. இரண்டாவதாக, விளைபொருளுக்கு ஆன செலவைவிட 50 சதவீதத்துக்கு அதிகமாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க இதுவரை அரசு சம்மதிக்கவில்லை. இதன் விளைவாக, பல பயிர்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை இழப்பை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். மூன்றாவதாக, உணவு தானிய வெளிப்படையான கொள்முதலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று, அரசுக்கு விவசாயச் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் (சிஏசிபி) பரிந்துரை செய்திருக்கிறது. இந்த கொள்கை நிலைப்பாடுகள் விவசாயிகள் மத்தியில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்கின்றன.
பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில், மண்டிகள் உள்ளிட்ட கொள்முதல் மையங்கள் மூலம் பெரும்பாலான விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் தான் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் புதிய விவசாய சட்டங்களால் தங்களுக்கு இரட்டைத் துன்பம் என்று நினைக்கிறார்கள். மண்டிகள் பலவீனப்பட்டு, தனியார் சந்தைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தொடராமல் போனால், தங்கள் விளைபொருட்களின் விலை படிப்படியாகக் குறையும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். மண்டிகள் பலவீனப்பட்டு, அந்த இடத்தை தனியார் சந்தைகள் நிரப்பாமல் போனால், அந்த இடத்தை நேர்மையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற வர்த்தகர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது. இந்தியாவின் விவசாயச் சந்தைகளின் அறிஞரான பார்பரா ஹாரிஸ்-வைட் கூற்றுப்படி, இதுபோன்ற சூழ்நிலையில், ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளைவிட ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் எண்ணிக்கையே அதிகரிக்கும்.
மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை
இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில், அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அமைய வேண்டும்.
முதலாவதாக, இந்தியாவில் மண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை மேலும் பல மண்டலங்களுக்கும் பயிர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மண்டியின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முதலீட்டை விரிவுபடுத்த வேண்டும். பொது விநியோக முறையை கைகோர்த்து உலகமயமாக்குவதன் மூலம், ஏழைகளுக்கு மலிவு விலையிலான உணவு ஆதாரத்தை உறுதிப்படுத்த முடியும்.
இரண்டாவதாக, அதிக மண்டிகள் நமக்குத் தேவையில்லை என்றாலும், நல்ல மண்டிகள் தேவை. புதிதாக வரும் தனியார் துறையினரின் நுழைவை எளிதாக்குவதற்கும், வர்த்தகர்கள் கூட்டணி அமைத்து செயல்படுவதைக் குறைப்பதற்கும், அவற்றை தேசிய மின் வர்த்தகத் தளங்களுடன் இணைப்பதற்கும் விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு உள் சீர்திருத்தம் தேவை. வர்த்தகர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய உரிமங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் சந்தைக் கட்டணங்களுக்கு ஒரு முனை வரி விதிப்பது சரியான திசையை நோக்கிய படிக்கட்டுகளாகும்.
எனினும், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்த்தால், விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களின் தேவை முடிந்து விட்டதைப் போலவும், மண்டிகளை மாநில அரசுகள் நிராகரிக்கவோ, அழித்துவிடவோ வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுவதாக தெரிகிறது. இத்தகைய அறிக்கைகள் அரசின் உண்மையான நோக்கத்தை காட்டிக் கொடுக்கின்றன. போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளாததையே இது காட்டுகிறது. மேலும், போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பதும், காலிஸ்தானியர்கள் என்று அழைப்பதும் அரசிடமிருந்து விவசாயிகளை அந்நியப்படுத்தவே உதவும். மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்களும் தவறான தொடக்கத்துக்கு வழி ஏற்படுத்திவிட்டன. இந்த சட்டங்களை மறுசிந்தனைக்கு உட்படுத்த தாமதிக்கக் கூடாது. விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்துவதே, சரியான தொடக்கமாக இருக்கும்.
கட்டுரையாளர் : ஆர். ராமகுமார் (பேராசிரியர், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ், மும்பை.)
நன்றி: தி ஹிந்து (1.12.2020)