” 2020 சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு, நிலத்தை அபகரிக்க உதவுமே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.”
– காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெயராம் ரமேஷ்.
”2020 சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவால், இந்தியாவின் சுற்றுச்சூழல் நீதி சீர்குலையும். ஊரடங்குக்கு ஒரு நாள் முன்பு இத்தகைய வரைவை கொண்டு வந்ததால், வரைவு குறித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இந்த வரைவை 22 மொழிகளில் மொழிபெயர்க்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.”
– சுற்றுச்சூழல் ஆர்வலரும், வழக்குரைஞருமான லியோ சல்தானா.
ஊரடங்கின் கொடுமையிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், மேலும் சுமையை தலையில் வைத்திருப்பதைத் தான் மேலே இருவரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
2020 சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு (Environment Impact Assessment 2020) உண்மையிலேயே தமிழகத்தைத் தான் தாக்க வருகிறது என்பதை என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது.
ஊரடங்கால் வேலை இழந்து பசி, பட்டினியால் வாடும் கோடிக்கணக்கானோரின் அழுகுரல்கள், தினக்கூலிகளின் கண்ணீர், புலம் பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு மத்தியில், சூழலியல் பாதிப்பு மதிப்பீடு வரைவை மத்திய அரசு கொண்டு வருவது, கொரோனாவை விட மோசமானது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டின் நோக்கம்
* சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரும்போது, நாட்டின் சூழலியல் வளம் பாழ்படக்கூடாது. இதற்கான முன் எச்சரிக்கை வழிகாட்டுதல் சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
* 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நடைமுறையில் உள்ளது. தற்போது, ‘சூழலியல் பாதிப்பு மதிப்பீடு 2006 நடைமுறையில் உள்ளது.
* சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச் சூழலுக்கான பேராபத்தை முன்பே கணித்து அதனைத் தடுப்பது. அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகள் உண்டு.
* சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் அதிகாரம் மாநில மற்றும் மத்தியக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஆபத்தான புது வரைவு
2020 சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு
* சூழலியல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்காமல், முதலீட்டை முதன்மைப்படுத்தும் வகையில் உள்ளது.
* சூழலின் நீர்வளத்துக்கு பெரும் ஆதாரமாக இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகளில், மணல் சமன் செய்வதற்கு சூழலியல் பாதிப்பு மதிப்பீடோ அல்லது அனுமதியோ பெறத் தேவையில்லை என்று புதிய வரைவில் கூறப்பட்டிருப்பது ஆபத்தின் உச்சம்.
* தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முன், பொதுமக்கள் கருத்துக்கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் புதிய வரைவு உள்ளது . அதே போல அனுமதி பெறுவதையும் தொழிற்சாலைகளுக்கு எளிமையாக்கி இருக்கிறது.
* வறண்ட புல்வெளிக் காடுகள், தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு, கார்பரேட் நிறுவனங்களின் கைக்கு மாறும் நிலை ஏற்படும் என்ற அச்சம்.
* தற்போதைய வரைவின்படி, இரண்டு விதமான சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும். ஆய்வுகளை நடத்திய பின்னர் சூழலியல் அனுமதி வழங்குவது. இரண்டாவது, எந்தவித வல்லுநர் குழு ஆய்வுமின்றி அனுமதி வழங்குவது.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்த விதிமுறையை, ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என்று மாற்றப்பட்டுள்ளது.
* இந்த நீண்ட அவகாசம், திட்டத்திலுள்ள சூழலியல் மற்றும் சமூக விளைவுகளை மறைக்கப் போதுமானது என்பதே சூழலியல் ஆர்வலர்களின் அச்சம்.
2020 சூழலியல் பாதிப்பு மதிப்பீடு முற்றிலும் சூழலுக்கு எதிராக இருப்பதால், சூழலியலாளர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மக்கள் கருத்துக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்ணை மரித்துப் போகச் செய்யும் இந்த வரைவுக்கு முடிவுகட்ட, நம் எதிர்ப்புகளை ஓங்கிய குரல்களில் பதிவு செய்வோம் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அனுமதி பெறாமல் செயல்பட்ட ஐதராபாத் எல்.ஜி. பாலிமர் தொழிற்சாலை மற்றும் அசாம் எண்ணைக் கிணற்றில் நடந்த விபத்துகளும், உயிரிழப்புகளும் இன்னும் நம் கண்களை விட்டு அகலவில்லை.
2020 சூழலியல் பாதிப்பு மதிப்பீட்டின் வரைவுப்படிப் படி, இதுபோன்ற விபத்துகளையும், உயிரிழப்புகளையும் நிறுவனங்கள் இனி தாராளமாக நடத்துவர்.
மத்திய அரசின் ஆசியோடு…!