அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள்
அன்னை இந்திரா காந்தியைப் பற்றி நிறைய ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், 2009 இல் வெளிவந்த Mother India – A Political Biography of Indira Gandhi என்ற நூலை Pranay Gupte என்பவர் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். இந்நூலில் The Assassination என்ற தலைப்பில் வெளிவந்த அத்தியாயம் இங்கே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது:
நாடு சுதந்திரம் பெற்றபோது, மதவெறியர்களால் மகாத்மா காந்தியை நாம் இழந்தோம்! அடுத்து 1984 இல் அன்னை இந்திரா காந்தியை மதவெறிக்கு மீண்டும் பலிகொடுத்தோம்! தொடர்ந்து 1991 இல் தீவிரவாத, பயங்கரவாத சக்திகளால் ராஜிவ் காந்தியை இழந்தோம்! மதவாத, தீவிரவாத, பயங்கரவாத சக்திகளை எதிர்த்துப் போராடவேண்டிய பொறுப்பும் கடமையும் தேசிய சக்திகளுக்கு இருப்பதை உணர்த்துவதற்காகவே, அக்டோபர் 31 அன்னை இந்திராவின் நினைவுநாளையொட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. – ஆசிரியர்
1984-ஆம் ஆண்டு அக்டோபர்…31ஆம் தேதி புதன்கிழமை….
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வழக்கம்போலவே காலை 8 மணிக்குத் துயில் எழுந்தார். அவரிடம் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் பணியாளரான நாதுராம், வழக்கமான கோப்பையில் சூடான தேநீரை இந்திராவுக்குக் கொண்டு வந்தார். 67வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஒரு மாதமே மீதமிருந்த நிலையில், இந்திரா காந்தி தமது வழக்கமான நடைமுறைப்படி பல ஹிந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களைப் படித்தார். பெரும்பாலான நாளிதழ்களில் அதற்கு முந்தைய நாள் ஒரிசாவில் இந்திரா காந்தி மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்த செய்தி முதல் பக்கத்திலேயே வெளியாகி இருந்தது. ஒரிசா சுற்றுப்பயணத்தின்போது பல அரசியல் கூட்டங்களில் இந்திரா உரையாற்றியிருந்தார்.
கோபல்பூர் என்ற இடத்தில் ஏவுகணைகளைச் செலுத்துவது குறித்துப் பயிற்சி அளிப்பதற்கான புதிய ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு இந்திரா அடிக்கல் நாட்டியிருந்தார். அதே நாளில் ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். அக்கூட்டத்தில் 30 நிமிடங்களுக்கு உரையாற்றிய இந்திரா காந்தி, மதவாதத்தின் ஆபத்துகள் குறித்தும், இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளியிலிருந்து ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் குறிப்பிட்டார்.
பின்னர் சில இடங்களில் தமக்கு எதிராக ஏற்பட்டுள்ள அரசியல் பகைமை குறித்தும், பல நேரங்களில் அது எல்லை மீறுவது குறித்தும் இந்திரா நினைவுகூர்ந்தார். அதற்கு முந்தைய நாள்தான் ஒரு பொதுக்கூட்டத்தில் தம்மை நோக்கி கல் வீசப்பட்டதை இந்திரா நினைவுகூர்ந்தார். ஆனால், இதற்கெல்லாம் தாம் அஞ்சவில்லை என்று இந்திரா கூறினார்.
”தேசத்திற்கு சேவையாற்றும்போது, எனது உயிர் போனால் அதை எண்ணி நான் கவலைப்படப் போவதில்லை. ஒருவேளை இன்றே நான் உயிரிழந்தாலும், எனது உடலில் இருந்து செல்லும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலிமைப்படுத்தும். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியா வலிமையான, உறுதியான நாடாக வளர்வதற்குப் பங்களிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று இந்திரா உரையாற்றியிருந்தார்.” ஆனால், அடுத்த நாளே தமக்கு மரணம் நேரிடும் என்பதை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.இந்திராவின் படுக்கை அறையில் கடும் குளிர் நிலவியது. இந்திரா காந்தியின் இல்லம் உள்பட தில்லியில் உள்ள ஒரு சில வீடுகளில்தான் மையப்படுத்தப்பட்ட வெப்பமூட்டி வசதி இருந்தது.
இந்திராவின் படுக்கை அறையில் இருந்த, சிறிய அளவிலான மின்சார வெப்பமூட்டி திருப்தியளிக்கும் வகையில் வேலை செய்யவில்லை. படுக்கையிலிருந்து எழுந்த இந்திரா, சில நிமிடங்களுக்கு யோகாசனப் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் குளித்துவிட்டுப் பிரகாசமான ஆரஞ்சு வண்ண சேலையை உடுத்திக் கொண்ட அவர், தமது பேரக் குழந்தைகளான பிரியங்கா, ராகுல் ஆகியோருடன் காலை உணவுக்காக அமர்ந்தார்.
அடுத்த ஓரிரு நாள்களில் நாடாளுமன்றத் தேர்தலை இந்திரா காந்தி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவரது புதல்வரான ராஜிவ் காந்தி அப்போது தமது தாயாரின் சார்பில் சில அரசியல் பணிகளை முடிப்பதற்காக மேற்கு வங்கத்திற்குச் சென்றிருந்தார். சில நாள்கள் முன்பாக அக்டோபர் 27ஆம் தேதி எவரும் எதிர்பார்க்காத நிலையில், இந்திரா காந்தி தமது பேரக்குழந்தைகளான பிரியங்காவையும் ராகுல் காந்தியையும் காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தார். அந்தச் சுற்றுலா வெறும் 30 மணி நேரம் மட்டுமே நீடித்தது. அங்கு இந்திரா காந்தியைக் காஷ்மீர் மாநில ஆளுநர் ஜக்மோகனும், அப்போதுதான் புதிதாகப் பதவியேற்றிருந்த குல்சாவும் சந்தித்துப் பேசினர்.
இந்திரா காந்தியும் அவருடன் வந்தவர்களும் அனைவரையும் கவரக்கூடியமாநில விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்திரா காந்தியின் இந்தப் பயணம் குறித்துப் பின்னர் நினைவுகூர்ந்த ஆளுநர்ஜக்மோகன், “இந்திரா காந்தி வழக்கத்திற்கு மாறாக நல்ல மனநிலையில் கலகலப்பாகவும், மனதுக்கு நிறைவாக உணவு அருந்தியும் மகிழ்ந்தார்” என்று குறிப்பிட்டார்.
அக்டோபர் 28 ஆம் தேதி காலையில் “தால் ஏரி’க்கு அருகிலுள்ள சங்கராச்சாரியாமலையில் ஏறி, அங்குள்ள லக்ஷ்மண் ஜூ என்ற சுவாமியைச் சந்தித்தார். சிறிது நேரமே நீடித்த இச்சந்திப்பின்போது, தாம் விரைவிலேயே உயிரிழக்கப்போவதாகத் தமது உள்ளுணர்வு உணர்த்துவதாக இந்திரா காந்தி கூறினார் என்று லக்ஷ்மண் ஜூ பின்னர் தெரிவித்தார்.
“இந்திரா காந்தி தமது மரணம் பற்றிப் பேசினார். தமது வாழ்க்கை முடிவடையும் நேரம் வந்துவிட்டதாகவும், சாவு நெருங்கி விட்டதாகவும் இந்திரா கூறினார்” என்று லக்ஷ்மண் ஜூ தெரிவித்தார்.
இந்திரா காந்தி தமது மரணம் குறித்துப் பேசுவார் என்று சுவாமி எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அமைதியாகவும் இயல்பாகவும் இருக்க முயன்ற சுவாமி, அதே வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சிறிய கட்டடத்தைக் காட்டி, அந்தக் கோயில் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட இருப்பதாகவும், திறப்பு விழாவிற்கு உங்களால் தலைமையேற்க முடியுமா என்றும் இந்திரா காந்தியிடம் கேட்டார்.
அதைக் கேட்ட இந்திரா, ‘அதுவரை உயிருடன் இருந்தால் நான் கண்டிப்பாக வருவேன்‘என்று கூறினார். சுவாமி லக்ஷ்மண் ஜூவின் ஆசிரமத்திலிருந்து விடைபெற்ற இந்திரா, அருகிலுள்ள காஷ்மீர் பிராமணர்களின் கடவுளாகக் கருதப்படும் ஷரீகா கோயிலுக்குச் சென்றார். அங்கிருந்த குருக்கள் இந்திராவுக்காகச் சிறப்பு வழிபாடு நடத்தினார். சிறப்பு வழிபாடு முடிவடைந்த பின்னர், இந்திராவும் அவரது பேரக்குழந்தைகளும் தில்லி திரும்புவதற்காக விமான நிலையம் சென்றனர்.
காஷ்மீரில் அவசர அவசரமாக மேற்கொண்ட பயணத்தின்போதுகூட உள்ளூர் அரசியல் நிலைமை குறித்து இந்திரா காந்தி பேசியதையும், மாநிலத்தின் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து விளக்கும்படி கூறியதையும் காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் பின்னர் நினைவுகூர்ந்தார்.
அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 29 ஆம் தேதி விமானம் மூலம் ஒரிசா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திரா காந்தி கலந்து கொண்டார். அதன்பின் அக்டோபர் 30ஆம் தேதி மாலைதான் தில்லி திரும்பினார்.
அக்டோபர் 31 ஆம் தேதி காலை உணவாக வாட்டப்பட்ட சில உணவு வகைகள், தானியங்கள், புதிதாகப் பிழிந்தெடுக்கப்பட்ட ஆரஞ்சுச் சாறு, முட்டைகள், தேநீர் ஆகியவற்றை இந்திரா எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திராவின் பேரக் குழந்தைகள் பள்ளிக்குப் புறப்பட ஆயத்தமாயினர். அப்போது ராகுல் காந்தியையும் பிரியங்காவையும் பார்த்து, எப்படி இருக்கிறீர்கள் என இந்திரா காந்தி கேட்டார். ஏனெனில்,அதற்கு முதல்நாள்தான் அவர்கள் இருவரும் பயணம் செய்த கார், இந்திராவின் சப்தர்ஜங் இல்லத்திற்கு அருகே வந்துகொண்டிருக்கும்போது, சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்த வேன் ஒன்று கார் மீது மோதியிருந்தது. இந்த விபத்தில் ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் எதுவும் இல்லை என்று பிரதமரின் பாதுகாவலர்கள் அவரிடம் தெரிவித்திருந்தனர்.
பேரக்குழந்தைகளிடம் இந்திரா காந்தி பேசிக் கொண்டிருந்தபோது, உணவு அருந்தும் அறைக்குள் இந்திராவின் உதவியாளர் ஒருவர் நுழைந்தார். அவரது பெயர் ஆர்.கே.தவான். குள்ளமான, சிரித்த முகம்கொண்ட 47 வயதுமனிதரான தவான், எப்போதும் எண்ணெய் தேய்த்து வாரப்பட்ட தலையுடன் காணப்படுவார். தவான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திராவிடம் பணியாற்றி வருகிறார். இந்திராவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய உதவியாளரான அவர், அதிகாரம் மிகுந்தவரும்கூட. இந்திரா காந்தியிடம் தட்டச்சராகச் சேர்ந்து உதவியாளராக மாறிய தவான், காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் தொடங்கி, வெளியுறவுக் கொள்கையை வகுப்பதுவரை அனைத்து விஷயங்களிலும் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
இந்திராவை நெருங்கிய தவான் அவரது அன்றைய முதல் நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறினார். அதைக் கேட்டு தலையாட்டிய இந்திரா, தமது பேரக்குழந்தைகளைக் கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார். பின்னர் இரு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறியபோது வழக்கத்திற்குமாறாக அவர்களை மீண்டும் அழைத்து கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார். பின்னர் அருகிலுள்ள தமது அலுவலக அறைக்குச் சென்ற இந்திரா காந்தி, அங்கு ஏற்கெனவே ஆர்.கே.தவான் எடுத்து வைத்திருந்த கோப்புகளைப் பார்த்தார். அங்கு இந்திரா காந்தி தமது கைப்பட சில விஷயங்களை எழுதினார். அது ஒரு வகையில் இந்திரா காந்தியின் கடைசி உயில் மற்றும் மரண சாசனத்தைப் போன்றதாகும். இந்திராவின் உதவியாளர்களுள் ஆர்.கே.தவான் மட்டுமே அதைப் பார்த்திருந்தார். தமது உயில் எழுதும் பணியை இந்திரா காந்தி முழுமையாக முடிக்கவில்லை.
அதைப்பற்றி இந்திராவிடம் ஆர்.கே.தவான் ஒருமுறை கேட்டபோதிலும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை. தமக்கு ஏதேனும் ஆபத்து நிகழும் வாய்ப்பு இருப்பதைப் பற்றி இந்திரா அவ்வப்போது கூறுவதை அவரது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரால்ஃப் புல்ட்ஜென்சும் கேட்டிருக்கிறார். அப்படியெல்லாம் எதுவும் நிகழாது என்று இந்திரா காந்திக்கு உணர்த்த பேராசிரியர் ரால்ஃப் பலமுறை முயன்றபோதிலும், இந்திரா விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார்.
1978 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சிப் பொறுப்பில் இல்லாதபோது, தாம் வன்முறையான சூழலில் கொல்லப்பட்டால், பொதுமக்களுக்குச் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காகத் தயாரித்து வைத்திருந்த வரைவு அறிக்கை ஒன்றை அந்தப் பேராசிரியரிடம் இந்திரா காந்தி காட்டியிருந்தார்.
இந்திரா காந்தியின் விரக்தியான மனநிலையை எண்ணி ஆர்.கே.தவானும், பேராசிரியர் ரால்ஃப்பும் கவலையடைந்தனர். 1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் நகரிலுள்ள பொற்கோயில்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திரா காந்தி ஆணையிட்டதிலிருந்து அவரது பாதுகாப்புக் குறித்து இருவரும் கவலைப்பட்டு வந்தனர்.
1984ஆம் ஆண்டில் பொற்கோயிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை’ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் வெளியற்றியது. அதற்கு முன்பாகவே ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் சிக்கி, புனிதப் பயணம் வந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தியாவின் உணவுக் களஞ்சியமான பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து, தனிநாடு அமைத்துத் தரவேண்டும் என்ற சீக்கிய தீவிரவாதிகளின் கோரிக்கையைஏற்பதில்லை என்பதில் இந்திரா காந்தி மிகவும் உறுதியாக இருந்தார்.
இந்தியாவில் உள்ள 1 கோடியே 40 லட்சம் சீக்கியர்களின் பெரும்பான்மையானோர் தனிநாடு கோரும் தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அவர்களை ஒடுக்குவதற்காக இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் புளூஸ்டார், சீக்கியர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. பொற்கோயில் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதை எண்ணியும், பொற்கோயிலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை எண்ணியும் அவர்கள் அதிர்ச்சியடைந்திருந்தனர். பொற்கோயில் தாக்குதலுக்குப் பிறகு பெரும்பாலான இந்தியர்கள் எண்ணியதைப் போலவே இந்திரா காந்தியின் உதவியாளர்களும், இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பினார்கள். இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்திரா காந்தி கொல்லப்படக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சினார்கள்.
தமக்கு விரைவில் மரணம் ஏற்படும் என்று இந்திரா காந்தி அஞ்சினாரா? இதற்கு விடையளிக்க இந்திரா காந்தியால் ஏற்கெனவே எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை அவரது உதவியாளர் ஆர்.கே.தவான் வெளியிட்டார்.
“உயிரிழப்பதைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. இந்தப் பொறுமையும், மன அமைதியும்தான் என்னை இத்தகைய உயிலை எழுதத் தூண்டியது. சிலர் அஞ்சுவதைப் போலவும், வேறு சிலர் திட்டமிடுவதைப் போலவும் நான் வன்முறையான வழியில் கொல்லப்பட்டால், எனது நாட்டின் மீதும், மக்களின் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பை எந்த வெறுப்பும் மறைக்கமுடியாது. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்ற உறுதியான நோக்கத்திலிருந்து எந்தச் சக்தியும் என்னை திசை திருப்ப முடியாது.
“ஒரு கவிஞன் அவனது அன்பு பற்றிப் பாடல் எழுதினான். என்னுடன் சொத்துக்களாகிய நீங்கள் இருக்கும்போது, என்னால் எப்படித் தாழ்மையாக உணரமுடியும் என்று அந்தக் கவிஞன் குறிப்பிட்டிருந்தான். அந்த வார்த்தைகள் இந்தியாவுக்கும் பொருந்தும் என்று நான் கூறுவேன். இந்தியாவின் பலம் எல்லையில்லாத பாரம்பரியம், மக்களின் கம்பீர உணர்வு, தங்களது நம்பிக்கையிலுள்ள உறுதிப்பாடு, வறுமை மற்றும் நெருக்கடியிலும் வெளிப்படும் தன்னியல்பு ஆகியவற்றை எண்ணி எந்தவொரு இந்தியனும் பெருமைப்படாமல் இருப்பானா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அந்தக் குறிப்பில் இந்திரா கூறியிருந்தார்.
இந்திரா காந்தியிடம் அன்றைய நாளின் அவரது முதல் சந்திப்பு குறித்து ஆர்.கே.தவான் நினைவூட்டினார். அன்று இந்திராவை முதலில் சந்திக்க இருந்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகரான பீட்டர் உஸ்டினாவ் ஆவார். இந்திரா காந்தி குறித்து ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க உஸ்டினாவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இந்திரா காந்தி மேற்கொண்ட பல பயணத்தின் போது உடன் சென்றிருந்தார். உஸ்டினாவின் “மனிதர்கள்” என்ற உத்தேச தலைப்பின்கீழ் அவர் தயாரிக்க இருந்த தொடரின் ஒரு கட்டமாகவே இந்திரா காந்தி குறித்த ஆவணப்படம் அமைந்திருந்தது.
இந்திராவுடன் பல நேர்காணலை நடத்தியிருந்த உஸ்டினாவ், அன்று கடைசி அத்தியாயத்தைப் படம்பிடிக்க இருந்தார். இதற்காக அவர் தமது படப்பிடிப்புக் குழுவினருடன் இந்திரா காந்தியின் சப்தர்ஜங் சாலை இல்லத்தில் நன்றாகச் செதுக்கப்பட்ட புல்வெளிக்குப் பின்புறத்தில் காத்திருந்தார். கலைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்திரா காந்தி தனிப்பாசம் கொண்டிருந்தார். அவர் பாசம் வைத்திருந்தவர்களுள் உஸ்டினாவும் ஒருவர்.
அதுமட்டுமன்றி, கிறிஸ்துமஸ் தாத்தா சாதாரண உடையில் வந்தால் எப்படி இருப்பாரோ அதைப்போன்ற தோற்றம் கொண்ட உஸ்டினவ், துன்பப்படும் குழந்தைகளின் நலனுக்காக உதவி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்னும் கேட்டால் உஸ்டினாவ் இரண்டு அடையாளங்களுடன் இந்தியா வந்தார். ஒன்று திரைப்படத் தயாரிப்பாளர். மற்றொன்று ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பான UNICEF-க்கு நிதி திரட்டும் தூதர். கடைசியாக நடத்த இருந்த நேர்காணலின்போது ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி, சகோதரர்கள் இல்லாத தனிமையை எப்படிச் சமாளித்தார் என்று கேட்கத் திட்டமிட்டிருந்ததாகப் பின்னர் தெரிவித்தார்.
இந்திரா காந்தியுடனான உஸ்டினவ்வின் நேர்காணல் காலை 9.20 மணிக்குத் தொடங்க இருந்தது. இந்திரா காந்தியின் அக்பர் சாலை இல்ல புல்வெளி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருந்ததால், அங்கு நேர்காணலை நடத்தலாம் என்று அவர் நினைத்திருந்தார். குளிர் நிறைந்த காலைப் பொழுதில் இந்திரா காந்தியின் தோட்டத்திலிருந்த ரோஜா செடிகள் அனைத்தும் பூத்துக் குலுங்கின. அந்தப் புல்வெளிக்குப் பின்புறத்தில்தான் பிரதமரின் இல்ல அலுவலகம் அமைந்திருந்தது. சவுத் பிளாக் பகுதியிலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பாகத் தம்மை பார்க்க வருபவர்களை இந்த இல்ல அலுவலகத்தில்தான் இந்திரா சந்திப்பது வழக்கம். இந்தக் கட்டடமும் அதனை அடுத்திருந்த சுற்றுச்சுவரும்தான் அக்பர் சாலை பகுதியிலிருந்து இந்திராவின் வீட்டைப் பிரித்தன.
காலை 9.15 மணிக்கு இந்திரா காந்தி அவரது வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது தயாராக இருந்த அலங்கார வல்லுநர்கள் அவரது முகத்தில் பவுடர் பூசி அழகுபடுத்தினர். உஸ்டினவ்வின் நேர்காணலுக்காக இந்திராவை அவர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், அவர் தமது மருத்துவரான கே.பி.மாத்தூருடன் உரையாடிக் கொண்டிருந்தார். மாத்தூர் பெரும்பாலான காலை நேரங்களில் இந்திரா காந்தியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மாத்தூருடனான சந்திப்பு முடிந்ததும், தில்லி காவல்துறையைச் சேர்ந்த காவலரான நாராயண் சிங் வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காகக் குடைப்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இந்திரா காந்தி, உஸ்டினவ் இருந்த இடத்தை நோக்கி நடந்தார். அவரை ஆர்.கே.தவான் பின்தொடர்ந்தார். அவருக்குப் பின்னால் தில்லி காவல்துறை உதவி ஆய்வாளர் ராமேஷ்வர் தயாளும், இந்திராவின் பணியாளர் நாதுராமும் வந்தனர்.
இந்திரா காந்தி வழக்கம் போலவே அக்பர் சாலை அலுவலகத்தை நோக்கி விரைவாக நடந்தார். சுற்றுச் சுவரை அவர் நெருங்கியபோது, அங்கு சீக்கிய காவலரான பியாந்த் சிங்கைப் பார்த்தார். பியான் சிங் இந்திராவின் பாதுகாப்புப் படையில் கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். 28 வயதான, நெட்டையான, தாடி வைத்த பியாந்த் சிங்கைப் பார்த்து புன்னகைத்தார். பொற்கோயில் தாக்குதலுக்குப் பிறகு சீக்கியர்கள் இந்திரா மீது கோபம் கொண்டிருந்ததால், பியாந்த் சிங்கால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய இந்திராவின் ஆலோசகர்கள், பியாந்த் சிங்கைப் பாதுகாப்புக் குழுவிலிருந்து வெளியேற்றும்படி விடுத்த கோரிக்கைகளை இந்திரா நிராகரித்து விட்டார். சீக்கியர்களைக் கண்டு நாம் அஞ்சுவதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று அவர்களிடம் இந்திரா கூறியிருந்தார்.
இந்திராவை நோக்கி நகர்ந்த பியாந்த் சிங், தம்மிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தார். அதைப் பார்த்த இந்திரா, “நீ என்ன செய்கிறாய்” என்று கேட்டார். அவர் கேட்டு முடிப்பதற்குள் அவரது அடி வயிற்றை நோக்கி மூன்றுமுறை பியாந்த் சிங் சுட்டார். அப்போது இந்திராவின் முகம் இறுக்கமாக, அமைதியாக இருந்தது. குண்டு பாய்ந்த வலியில் இந்திராவின் உடல் சரியும் முன்பே அங்கு வந்த இன்னொரு காவலரான 21 வயது சத்வந்த் சிங், தம்மிடமிருந்த தானியங்கித் துப்பாக்கியால் இந்திராவை நோக்கி சரமாரியாகச் சுட்டார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த வேகத்தில் இந்திராவின் உடல் பூமியிலிருந்து மேல் எழுந்து, சுழன்று தரையில் விழுந்தது. 20 வினாடி இடைவெளிக்குள் அவரது சிறிய உடலில் 32 குண்டுகள் பாய்ந்தன.
இந்திராவின் உடல் தரையில் விழுவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்திருக்க வேண்டும். அப்போது நேரம் சரியாகக் காலை 9.17 மணி. தரையில் விழுந்த இந்திராவின் உடல் சுமார் ஒரு நிமிடம் அப்படியே கிடந்தது. அவரது பாதுகாவலர்கள் தரையில் சாய்ந்திருந்த நிலையில், அவருடன் வந்த மற்றவர்கள் உயிர் பிழைப்பதற்காக ஓடினார்கள். இந்திரா சுட்டுக் கொல்லப்படுவதற்குச் சில காலம் முன்பாகத்தான் அவரது பாதுகாவலரான ஆர்.என்.கோவ், வெளியிலிருந்து குண்டு வீசப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்திரா வீட்டுத் தோட்டத்தில் சிலமாற்றங்களைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.
ஆனால், இந்திரா காந்தியோ சிரித்தபடியே அந்த யோசனைகளை நிராகரித்துவிட்டார். “கொலையாளிகள் என்னைக் கொல்லவரும் நேரத்தில் எதுவும் உதவாது. யாரெல்லாம் என்னைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தான் முதலில் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடுவார்கள்’’ என்று அப்போது இந்திரா காந்தி கூறியிருந்தார்.
சத்வந்த் சிங் சுட்டதில் இந்திராவின் பாதுகாப்புக்காக வந்த உதவி ஆய்வாளர் ராமேஷ்வர் தயாளின் தொடையில் குண்டு பாய்ந்திருந்தது. ஆர்.கே.தவானும் மற்றவர்களும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு எழுந்து பார்த்தபோது, பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் கைகளை மேலே உயர்த்தியபடி சரணடைய தயாராக நின்றனர். அவர்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டிருந்தனர்.
எங்களுக்குக் கொடுத்த பணியை நாங்கள் செய்து முடித்துவிட்டோம். இப்போது எங்களை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்துகொள்ளுங்கள்’’ என்று பியாந்த் சிங் ஹிந்தியில் கூறினார். அப்போதுகூட கொலையாளிகளைப் பிடிக்க எவரும் முன்வரவில்லை. இந்திரா காந்தியின் உடலைப் பார்த்த அவரது உதவியாளர்கள், தாங்கள் எதையும் செய்யாமல் மற்றவர்களுக்குச் சத்தமாக உத்தரவு போட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சத்தத்தைக் கேட்டு அக்பர் சாலை அலுவலகத்திலிருந்து தினேஷ் குமார் பட் என்ற பாதுகாவலர் விரைந்து வந்தார். இந்திராவின் மருத்துவர் மாத்தூரும் ஓடிவந்தார். அவர் இந்திராவின் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை ஏற்படுத்தச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்திராவின் உடல் அருகே முழங்காலிட்டுச் சாய்ந்திருந்த தவான்அதிர்ச்சியிலிருந்து மீளாதவராகக் காட்சியளித்தார்.
அந்த நேரத்தில் கவுன் அணிந்திருந்த நிலையில் செருப்புக்கூட போடாமல் சோனியா காந்தி அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். அவரது தலைமுடியில் ஷாம்பு போட்ட ஈரம்கூட காய வில்லை. “உடனடியாக ஒரு காரை எடுங்கள்” என்று சோனியா கூச்சலிட்டார். இந்திராவின் சப்தர் ஜங் சாலையில் அவசரத் தேவைக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் அவசர ஊர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திரா காந்தி குண்டடிப்பட்டுக் குருதி வழிந்து, எலும்பும் சதையும் தரையில் சிதறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டிய அவசர ஊர்தியின் ஒட்டுநரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தேநீர் குடிக்கச் சென்றிருப்பார் என்று சிலரும், அவர் பணிக்கே வரவில்லை என்று வேறு சிலரும் கூறினார்கள். அவசர ஊர்தியை எந்த நேரமும் இயக்குவதற்கு வசதியாக அதில், எப்போதும் சாவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்த போதிலும், அன்று அந்த ஊர்தியில் சாவி பொருத்தப்பட்டிருக்கவில்லை.
சோனியா காந்தியும், ஆர்.கே.தவானும், நாராயண் சிங், நாதுராம், தினேஷ் பட்ஆகியாரின் உதவியுடன் இந்திராவின் உடலைத் தூக்கினார்கள். அருகில் நிறுத்தப்பட்டிருந்த அம்பாசிடர் காருக்கு அவரது உடலைத் தூக்கி வந்தனர். காரின் பின்புறத்தில் இந்திராவை வைத்த சோனியா, அவரது தலையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார். தவான், பட், மாத்தூர் ஆகியோருடன் இந்திராவின் உதவியாளரான எம்.எல்.பொத்தேதாரும் காரில் ஏறிக்கொண்டார்.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குக் (AIIMS) காரை இயக்கும்படி ஆர்.கே.தவான் ஓட்டுநருக்கு ஆணையிட்டார். இந்திராவின் வீட்டிற்கு அருகிலேயே ராம் மனோகர் லோகியா மருத்துவமனைபோன்ற மருத்துவ நிலையங்கள் இருந்தன. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குச் செல்ல, நெரிசல் இல்லாத நேரத்தில் 20 நிமிடங்கள் ஆகும். எனினும், அங்குதான் இந்திரா காந்தியின் “ஓ’ நெகட்டிவ்’ குருதியும், அவரதுமருத்துவ ஆவணங்களும் இருந்தன என்பதால், அங்குச் செல்லும்படி தவான் ஆணையிட்டிருந்தார்.
அதன்படி அம்பாசிடர் கார், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையை நோக்கி விரைந்தது. அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெரிசல் காணப்பட்டது. பிரதமரின் வீட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அந்த மருத்துவமனைக்கு இந்திரா கொண்டு செல்லப்பட்டபோது 10 மணி ஆகியிருந்தது. காரில் செல்லும்போதே இந்திராவுக்குச் செயற்கை சுவாசம் அளிக்க மாத்தூர் முயன்றார். ஆனால், இந்திரா உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததை அவர் உணர்ந்துகொண்டார்.
இந்திரா குண்டடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதை மருத்துவமனை அதிகாரிகளுக்கு எவரும் தெரிவிக்கவில்லை. இந்திராவின் இல்லத்தில் பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளைக் கீழே போட்ட நிலையில், தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியை அலசி ஆராய்ந்தனர். அப்போதுதான் யாரோ சிலர் அவர்கள் இருவரையும் கைது செய்யும்படி யோசனை தெரிவித்தனர். உடனடியாக அவர்களை இந்தோ- திபெத் எல்லை காவல் படைக் காவலர்கள் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த 20 நிமிடத்தில் அங்கு துப்பாக்கிச் சுடும் ஓசை கேட்டது. பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகிய இருவரையும் அவர்களின் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் சரமாரியாகச் சுட்டனர். இதில், பியாந்த் சிங் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சத்வந்த் சிங்கிற்கு முதுகுத் தண்டிலும், சிறுநீரகத்திலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அந்த இருவரும் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிஓட முயன்றதாகவும், அதனால்தான் அவர்களைச் சுட நேரிட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், நடந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த 3 பாதுகாப்பு அதிகாரிகள் பின்னர் இதுபற்றி விளக்கும்போது, பியாந்த் சிங்கையும் சத்வந்த் சிங்கையும் இந்தோ – திபெத் எல்லை காவல் படையினர் கடுமையாகத் திட்டியதாகவும், அதன்பின் அவர்களைச் சுட்டதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இங்கிலாந்து நடிகர் பீட்டர் உஸ்டினவ்வும், அவரது படப்பிடிப்புக் குழுவினரும் இந்திரா கொல்லப்பட்ட இடத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் தொடர்ந்து காக்க வைக்கப்பட்டிருந்தனர். இதுபற்றிப் பின்னர் விளக்கம் அளித்த உஸ்டினவ், “நாங்கள் மைக் மற்றும் கேமராவுடன் தயார் நிலையில் இருந்தோம். இந்திராவை அழைத்து வருவதற்காக ஒரு செயலாளர் சென்றார். அதன்பிறகுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மூன்றுமுறை துப்பாக்கியால் சுடப்படும் சத்தத்தை நான் கேட்டேன். இதனால் நாங்கள் எச்சரிக்கை அடைந்தோம். ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்தவர்களோ, அது பட்டாசு வெடிக்கும் சத்தமாக இருக்கும் என்று எங்களிடம் கூறினர். பின்னர் தானியங்கித் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்திரா கொல்லப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்பதற்காகக் கொலையாளிகள் அப்படிச் சுட்டிருக்கலாம். அதன்பிறகு இந்திரா உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. அங்கு பாதுகாவலர்கள் ஓடுவதை நாங்கள் பார்த்தோம்” என்று தெரிவித்தார்.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் அவசர நுழைவு வாயிலுக்கு இந்திராவை அழைத்து வந்த கார் வந்தபோது, அதை உள்ளே அனுமதிக்க அங்கு எவரும் இல்லை. அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்லும் பாதையின் நுழைவு வாயிலைக் காவலர்கள் வந்து திறப்பதற்கு 3 நிமிடங்கள் ஆயின. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு முக்கிய பிரமுகர் அழைத்து வரப்படுகிறார் என்பதை அங்கிருந்த காவலர்களுக்கு எவரும் சொல்லாததுதான் இதற்குக் காரணமாகும்.
அவசர சிகிச்சை பிரிவு வந்ததும் ஆர்.கே.தவானும் பொத்தேதாரும் காரிலிருந்துகுதித்து ஓடி, இந்திரா காந்தி படுகாயம் அடைந்த நிலையில் காரில் கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்று அங்கிருந்த மருத்துவர்களிடம் கூறினார்கள். ஆனால், இந்திராவின் உடலைக் கொண்டு வருவதற்கு அங்கு ஸ்ட்ரெச்சர்கள் எதுவும் இல்லை. மருத்துவமனையில் இருந்த பலகை ஒன்றைச் சிலர் தூக்கி வந்தனர். அப்பலகைமீது இந்திராவின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, அவசர சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பேற்றிருந்த இளம் மருத்துவர் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு கத்தினார். ‘மேடம்… மேடம்’ என்று கதறிய அவர், உருக்குலைந்து குருதி வழிந்து கொண்டிருந்த இந்திராவின் உடல்மீது மயங்கி விழும் நிலையில் இருந்தார்.
அந்த அறையிலிருந்த இன்னொரு மருத்துவரோ, “இது இந்திரா காந்தியாக இருக்கமுடியாது. அவர் சலவை துணியில் சுற்றப்பட்ட குழந்தையைப்போல காட்சியளித்தார். இந்தியாவின் பிரதமரா இப்படி இருக்கிறார்” என்று தமக்குத் தாமே கூறிக்கொண்டார். அந்த மருத்துவர் வேகமாக ஓடிச்சென்று அங்கிருந்த தொலைபேசிமூலம் மருத்துவமனையின் மூத்த இதயநோய் வல்லுநர்களை அழைத்தார். அடுத்த 5 நிமிடங்களில் மூத்த மருத்துவ பேராசிரியர் ஜே.எஸ்.குலேரியா, மூத்த இதய அறுவை மருத்தவர் எஸ்.பலராம், எம்.எம்.கபூர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இந்திராவின் இதயத்திற்கு மசாஜ் செய்ய முயன்றனர். அதற்குள் இந்திராவுக்குச் செய்யப்பட்ட எலெக்ட்ரோ கார்டியோ கிராம் (ஈ.சி.ஜி.) ஆய்வில் இந்திராவின் இதயத் துடிப்பு மிகமிகக் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
அந்த நேரத்தில் இந்திராவின் கண் இமைகள் விரிந்துவிட்டன. எனவே, அவரது மூளை ஏற்கெனவே செயலிழந்திருக்கலாம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அந்த நேரத்தில் நாங்கள் மருத்துவ சிகிக்சைமூலம் அவரை உயிர் பிழைக்க வைத்திருந்தால்கூட, அவரது மூளை நிரந்தர பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கும்’என்று ஒரு மருத்துவர் பின்னர் தெரிவித்தார்.
இந்திராவுக்கு நாடித்துடிப்பு சுத்தமாக இல்லை. இந்திரா காந்தியின் மூளையைத் துடிப்புடன் வைத்திருப்பதற்காக அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜனைச் செலுத்தும் நோக்குடன் ஒரு மருத்துவ உதவியாளர் வாய் வழியாக ரப்பர் குழாயைச் சொருகினார். இந்திராவிற்குக் குருதி செலுத்துவதற்காக இரண்டு குழாய்கள் பொருத்தப்பட்டன. அந்த நேரத்தில் இந்திராவை எட்டாவது மாடியிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. அங்குள்ள இரண்டாவது எண் கொண்ட அரங்கில் மருத்துவர்கள் அரும்பாடுபட்டு அவரது உடலில் இருந்த குண்டுகளை அகற்றப் போராடினர். வழக்கமாக ஒருவரின் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவைவிட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகளவுள்ள ரத்தம் இந்திராவிற்குச் செலுத்தப்பட்டிருந்தது.
இந்திராவின் உடலை இதயம் மற்றும் நுரையீரலின் பணியைச் செய்யும் எந்திரத்துடன் மருத்துவர்கள் இணைத்தனர். அந்த எந்திரம் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தி அனுப்பும் பணியைச் செய்தது. அந்த நேரத்தில் இந்திரா உடலின் வளர்சிதை (Metabolism) மாற்ற அளவு குறைவதையும், அதன்மூலம் அவரது ரத்த அழுத்தம் குறைவதையும் உறுதிசெய்ய விரும்பினர். இதயம், நுரையீரலின் பணியை செய்யும் எந்திரத்தின் உதவியுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்திரா உடலிலிருந்த ரத்தத்தின் வெப்பநிலை வழக்கமான 37 டிகிரி செல்சியசிலிருந்து 31 டிகிரி செல்சியசாகக் குறைக்கப்பட்டது.
இந்தியாவில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் அடையாளமாகத் திகழ்ந்த அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் இரண்டாம் எண் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கில் அம்மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர்களும், அறுவை சிகிச்சை வல்லுநர்களும் இருந்தனர். பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் சுட்ட குண்டுகள் இந்திராவின் உடலில் பாய்ந்து அவரது கல்லீரலின் வலதுபுற அடிப்பகுதியில் சிதைத்துவிட்டதைக் கண்டுபிடித்தனர். அவரது பெருங்குடலில் குறைந்தது 12 துளைகள் ஏற்பட்டிருந்தன. சிறு குடலுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. இந்திராவின் இதயம் காயமின்றி உறுதியாக இருந்தபோதிலும், அவரது ஒருபக்க நுரையீரலில் குண்டு பாய்ந்திருந்தது. ரத்த நாளங்கள், தமணி, நரம்பு ஆகியவை வெடித்துவிட்டன. எலும்புகளும், முதுகெலும்புகளும் சிதறிவிட்டன. முதுகுத்தண்டு துண்டாகிவிட்டது.
இத்தகைய சூழலில் இந்திரா காந்திக்கு உயிர் கொடுக்க மருத்துவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. ” மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே இந்திரா காந்தி உயிரிழந்துவிட்டார். உண்மையில் இந்திரா காந்தி சுடப்பட்ட சப்தஜங் சாலையிலுள்ள தமது இல்லத்தின் தோட்டத்தில் தரையில் விழுந்தபோது அவரது உயிர் பிரிந்திருக்கக்கூடும்” என்று ஒரு மருத்துவர் பின்னர் தெரிவித்தார்.
பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரால் சுடப்பட்டு 5 மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு இந்திரா காந்தி உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் நவீனகால வரலாற்றில் பரந்து விரிந்திருந்த ஒரு மிகப்பெரிய சகாப்தம், 1984 ஆம் ஆண்டின் அக்டோபர் கடைசி நாளில் முடிவுக்கு வந்தது.