கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு பிரச்சினை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பாதிப்பு அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என எச்சரிக்கிறார் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியும், பொருளாதார நிபுணருமான மகேஷ் வ்யாஸ்.
இந்த சூழலில், பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாள் அன்று, ட்விட்டரில் புயலே வீசியது.
பிரதமரின் பிறந்தநாளைத் தேசிய ‘வேலையில்லா திண்டாட்ட தினமாக’ 40 லட்சம் ட்விட்டர் பதிவாளர்கள் கடைப்பிடித்தனர். 2 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என, கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி அளித்த வாக்குறுதியைக் கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.
அரசு ஊழியர்கள் பொது முடக்கத்துக்குப் பிறகும் முழுச் சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு வேலைப் பாதுகாப்பு உள்ளது. அதனால் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் அரசு வேலையை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைப்பு சாரா மற்றும் தனியார் துறையில் திடீரென வேலை இழப்பு ஏற்பட்டதால், ஏராளமானோர் வருவாயை இழந்துள்ளனர்.
பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்து வேலைக்குப் போகச் சொன்னார்கள். ஆனால், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் வேலை இல்லாமல் போனது. வருவாய் இழப்பால் குடும்பத்தை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் லட்சக்கணக்கானோர் தவிக்கின்றனர்.
தனியார் வேலைக்கு உத்தரவாதம் இல்லாததால், பல இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதுகூட கேள்விக்குறியாகியுள்ளது. அரசுப் பணி இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெண் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை இளைஞர் மத்தியில் எழுந்துள்ளது.
அரசுத் துறைகள் தனியார்மயமாவதையும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ட்விட்டரில் பொங்கி எழுந்துள்ளனர் இளைஞர்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு, வேலை இல்லா திண்டாட்டம் இன்னும் அதிகரித்து இளைஞர்கள் வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது. இத்தகைய நிலை, கிரிமினல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1932-33 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உச்சத்திலிருந்தபோது, ஒன்றரை கோடி பேர் வேலை இழந்தனர். இது குறித்து யோகேந்திர யாதவ் எழுதிய கட்டுரை ஒன்றில், ‘வேலைவாய்ப்பின்றி இருப்போர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மதிப்பீட்டில், கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் 12 கோடி பேர் (மாத ஊதியம் பெற்று வந்தவர்கள்) வேலை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டும் என்றும் அந்த மதிப்பீட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையே 33 கோடி தான். அதில் பாதி அளவுக்கு இந்தியாவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதை நினைக்கும் போது, ட்விட்டரில் கொதித்து எழுந்த இளைஞர்களின் பக்கம் நியாயம் இருப்பது புரிகிறது.