தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என்று மாற்றுவோம் என்ற பாஜக தலைவர் ராஜா சிங் அறிவிப்புக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
பெயரில் என்ன இருக்கிறது? என ஷேக்ஸ்பியர் கேட்டார். ஆனால், ஐதராபாத்தைப் பொறுத்தவரை எல்லாமே பெயரில்தான் இருக்கிறது. பாஜகவுக்குக் கையில் பிடித்துக் கொள்ள ஒரு தடி வேண்டும். அந்த தடி இப்போது பெயர் மாற்றம் வடிவில் இருக்கிறது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில மாதங்களே உள்ளன. இந்நிலையில், பாஜக தலைவர் ராஜா சிங் கூறும்போது, ”பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தால், தலைநகர் ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என்று மாற்றுவோம்” என்று கூறியுள்ளார். அதோடு, செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் பெயர் மாற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.
ஐதராபாத்தில் பழைய பெயர் பாக்யாநகர் தான். அவர் மேலும் கூறும்போது, ”1590 ஆம் ஆண்டில் குலி குதூப் ஷா பாக்யாநகர் என்ற பெயரை ஐதராபாத் என்று மாற்றினார். அப்போது கோயில்கள் அழிக்கப்பட்டன. இந்துக்கள் தாக்கப்பட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் குறிக்கோள் மாநிலத்தின் வளர்ச்சியாகவும், இரண்டாவது ஐதராபாத் பெயர் மாற்றமாகவும் இருக்கும்” என்றார்.
”பெயர் மாற்றம் மட்டுமே முக்கிய பணியாக இருக்கக் கூடாது. அது பிரதான பிரச்சினையும் இல்லை. ஐதராபாத் நகரின் பெயரை மாற்றுவதாலேயே மக்களின் வாழ்க்கை நிலை மாறிவிடாது” என்கிறார் ஐதராபாத் வழக்குரைஞர் ஒருவர்.
மென்பொருள் பொறியாளர் சாணக்யா என்ற இளைஞர் கூறும்போது, ”இது அரசியல் கூத்து. உத்தரப்பிரதேசத்தில் செய்ததை இங்கு செய்ய முயல்கிறார்கள்” என்றார். ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவர் ஹரி என்பவர் கூறும்போது, ”ஐதராபாத் பிரியாணியை எப்படி அழைப்பது? பாக்யாநகர் பிரியாணி என்றா? பெயரை மாற்றினால் பிரியாணியே விற்காது” என்றார்.
ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் அசோக் என்பவர் கூறும்போது, ”ஐதராபாத் பிரியாணியை பாக்யாநகர் பிரியாணி என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கும். இந்த ஊரை ஐதராபாத் என்றும், பிரியாணியை ஐதராபாத் பிரியாணி என்றும் அழைத்தால் தான் நன்றாக இருக்கும்” என்றார்.
‘ஐதராபாத் பெயரை மாற்றலாமா?’ என்று கேட்டால், ஒட்டுமொத்த மக்களின் பதில், ‘வேண்டாம்’ என்பதாகவே உள்ளது.