பிரபல டைட்டான் குழுமத்தின் தனிஷ்க் நகைக் கடையின் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரம் ஒன்றை தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
இது லவ் ஜிகாத்தை (வேறு மதத்தவரை திருமணம் செய்து, அவர்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவது) ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, இந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த விளம்பரத்தை யூடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.
இந்நிலையில், விளம்பரம் நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்தப் பிரச்சினை விவாதப் பொருளாகியுள்ளது. ”இந்த அழகான விளம்பரத்தில் இந்து- முஸ்லீம் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர, லவ் ஜிகாத் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றுமையை வலியுறுத்துவதைத்தான் இந்துத்துவாக்கள் எதிர்க்கிறார்கள்” என்று சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, பெரும்பான்மை எனும் அபாயகரமான உணர்வு தலைதூக்கியுள்ளது. இந்த நிலையில் தான் தனிஷ்க் விளம்பரம் இந்தியாவில் உள்ள இந்து தேசியவாதிகள் என்று கூறிக் வோருக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரத்தில் மனைவி இந்து என்றும், கணவர் முஸ்லிம் என்றும் காட்டப்படுகிறது. இதுதான் இந்துத்வாக்களுக்குப் பிரச்சினையாகியிருக்கிறது.
பிரதமரை ட்விட்டரில் பின்தொடரும் ஹர்திக் பவ்ஸார் என்பவர் தமது ட்விட்டில், ”என்ன நடக்கும் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள்” என்று மிரட்டியுள்ளார். தனிஷ்க் ஊடகக் குழுவில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியரின் தனிப்பட்ட விவகாரங்களையும் பவ்ஸார் வெளியிட்டுள்ளார். குஜராத்தில் தனிஷ்க் நகைக்கடையில் புகுந்து மன்னிப்புக் கேட்கக் கோரி மிரட்டியிருக்கின்றனர்.
இந்த விளம்பரம் ஏற்படுத்திய புயலால், தனிஷ்க் நகைக் கடை நிறுவனம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. அதன் ஊழியர்கள் மிரட்டப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், தங்கள் நிறுவன ஊழியர்கள், பங்குதாரர்கள் நலனுக்காக விளம்பரத்தை நீக்கிவிட்டதாக தனிஷ்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
லவ் ஜிகாத் கதையைப் பரப்புவது இந்து அமைப்பினருக்குப் புதிதல்ல. இந்துப் பெண்களைத் திருமணம் செய்து முஸ்லீம் மதத்துக்கு மாற்றுவதாக இந்து அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளாகவே குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை என சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்து மதத்தைச் சேர்ந்த மருமகளுக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மாமியார் இந்து மதத்தின்படி வளைகாப்பு நடத்துவதைக் கொண்டாடியிருக்க வேண்டுமே தவிர, அதைப் பார்த்துக் குரைக்கக் கூடாது.
ஒற்றுமை வந்துவிட்டால் அவர்களுக்கு என்ன வேலை? பிரிவினைதான் அவர்களுக்கு மூலதனம்