ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கும் என்பது மாநில நிதி அமைச்சர்களின் அச்சமாக உள்ளது.
மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ள 2 வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறு மாநிலங்கள் கடன் வாங்கினால், ஒரே நாடு, ஒரே வரி சீர்திருத்தம் என்பதில் பாதிப்பு ஏற்படும். ஜிஎஸ்டி குழுவின் உடன்படிக்கையை மீறி, பற்றாக் குறையை ஈடு செய்யாவிட்டால், மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும்.
அரசியல் சாசனத்தில் 101 ஆவது திருத்தம் தேசிய அளவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை விதிக்க சட்ட அங்கீகாரம் அளிக்கிறது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உள்ளூர் அளவிலான மறைமுக வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியதால், ஜிஎஸ்டியை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வது சாத்தியமானது.
2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், ரூ. 65 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே இழப்பீட்டு நிதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் எந்தவொரு வருவாய் குறைவையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், இதற்கான ஒரு தீர்வை வகுக்க வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில் தான் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது.
ரூ. 2 .35 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு இருக்கும் நிலையில், வெறும் ரூ. 97 ஆயிரம் கோடிகள் மட்டுமே வருவாய் குறைவு என மத்திய அரசு வாதிட்டது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 38 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு என்பது கடவுளின் செயலால் ஏற்பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முதல் யோசனையாக, மாநிலங்களின் கடன் பத்திரங்களை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ரூ. 97 ஆயிரம் கோடிகள் திரட்டுவது, இவ்வாறு வாங்கும் கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஏற்பது, ஒரு பகுதியை மானியம் மூலம் மத்திய அரசு தாங்கிக் கொள்வது போன்ற வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இரண்டாவதாக, கடன் பத்திரங்களை மாநில அரசுகளே விற்று, ஒட்டுமொத்த ரூ. 2 .35 லட்சம் கோடிகள் ரூபாயை திரட்டிக் கொள்வது, வட்டியை மாநில அரசுகளே செலுத்துவது, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து அடிப்படை செலவுகளை மட்டும் தருவது என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
இது குறித்து கேரள நிதி அமைச்சர் டிஎம்.தாமஸ் ஐசக் கூறும்போது, ”ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்கள் தியாகம் செய்ய முடியாது என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு வழங்க, மத்திய அரசுதான் கடன் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால், நிதிச்சுமை அதிகரித்துவிடும் என்றும் மத்திய அரசு அஞ்சுகிறது. குறைந்தபட்சம் கடன் பெறுவதற்கான அங்கீகாரத்தை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இது ஒன்றே உத்தரவாதமாக இருக்கும்” என்றார்.
தெலங்கானா மாநில நிதி அமைச்சர் டி. ஹரிஸ் ராவ் கூறும்போது, ”மத்திய அரசு கடன் வாங்கினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றால், மாநிலங்கள் கடன் வாங்கினால், பொருளாதாரம் வீழ்ச்சியடையாதா? மத்திய அரசால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். அதோடு, சர்வதேச முதலீட்டையும் கவர முடியும். அப்படி இருக்கும் போது, மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு மாநில அரசுகள் எப்படி கடன் வாங்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.